(ஆர்.ராம்)

வடக்கு கிழக்கு தமிழ்த் தேசியப் பரப்பில் மும்முனைப் போட்டியில் இருக்கும் பிரதான மூன்று தமிழ்த்தேசியக் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் பூர்த்திசெய்யப்படும் பணிகள் இறுதிக்கட்டத்தினை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் அக்கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை இம்மாத நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்து திட்டமிடல்களை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது. 

அரசியல் தீர்வையும், அபிவிருத்தியையும் நோக்கி சமாந்தரமாக ஏககாலத்தில் பயணிப்பதனை அடிப்படையாகக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞானத்தினை தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ளது. 

அதேபோன்று அதனை வடக்கிலும் கிழக்கிலும் இரண்டு பிரதான நிகழ்வுகளாக கொண்டு வெளியிட்டு வைப்பதற்கான திட்டமிடல்களும் நடைபெற்று வருகின்றன என்று கட்சித்தகவல்கள் தெரவிக்கின்றன. 

அதேபோன்று, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞான தயாரிப்பு பணிகள் பூர்த்தி அடைந்துள்ளதாகவும், கிழக்கிற்கான விஜயத்தினை நிறைவு செய்து கூட்டணியின் தலைவர் விக்கினேஸ்வரன் வடக்கு திரும்பியதும் பங்காளிக்கட்சிகளுடன் இணைந்து அதனை இறுதி செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை, தமிழ்த் தேசத்தினையும், பொறுப்புக்கூறலையும், ஒற்றை ஆட்சியை முழுமையாக நிரகாரிப்பதையும், நிலைத்து நிற்ககூடிய அபிவிருத்தியையும் அடியொற்றிய உட்கிடக்கையுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் அடுத்து வரும் பத்து தினங்களுக்குள் வெளியிடப்படுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அக்கட்சியின் தலைவரும், யாழ்;.மாவட்ட முதன்மை வேட்பாளருமான கஜேனந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.