(நேர்காணல்:- ஆர்.ராம்)

இலங்கையின் அபிமானத்தின் சான்றாதாரங்களாக மரபுரிமைகளாக இருக்கும் தொல்பொருளை பாதுகாப்பதையே இலக்காக கொண்டு செயற்பட்டு வரும் நிலையில் எவ்வதமான பேதங்களையும் கொண்டிருக்காத திணைக்களத்தின் மீது இன, மத சாயங்களை பூச வேண்டாம் என்று தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர்.செனரத் திஸாநாயக்க வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். 

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, 

கேள்வி:- கொரோனா தொற்றின் பின்னரான புதிய இயல்புநிலையில் தொல்பொருளியல் திணைக்களம் தனது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எத்தகைய புதிய திட்டங்களை வகுத்துள்ளது? 

பதில்:- கொரோனா தொற்று அச்சுறுத்தல் காணப்பட்ட சமயத்தில் கூட தொல்பொருளியல் திணைக்களம் முழுமையாக மூடப்படவில்லை. பிரதான மற்றும் அத்தியாவசிய செயற்பாடுகளை முன்னெத்தே வந்திருந்தது. குறிப்பாக கூறுவதானால்,  பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள் பிரதேசங்கள், மற்றும் ஆய்வு நடைபெறும் பகுதிகள் போன்வற்றில் எவ்விதமான விளைவுகளும் ஏற்படாதவாறு தொடர்ச்சியான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம். 

கொரோனா அச்சுறுத்தல் பல்வேறு படிப்பினைகளை வழங்கியுள்ளது. அந்த அனுபவத்;தினை அடிப்படையாகக் கொண்டு திணைக்களத்தின் வினைதிறனான பணிகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கள பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் எதிர்காலத்தில் கொரோனாவை விடவும் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டால் அதற்கு முகங்கொடுத்து எமது பணிகளை முன்னெடுப்பதற்கான மனோநிலையும் தையிரமும் தற்போது உருவாகியுள்ளது. 

கேள்வி:- நாடளாவிய ரீதியில் தொல்பொருளியல் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருக்கின்றது? 

பதில்:- உலகத்திலேயே அதிகளவு தொல்பொருள் இடங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு நாடாக இலங்கை இருக்கின்றது என்பதை முதலில் கூற விரும்புகின்றேன்.  அந்தவகையில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான தொல்பொருள் இடங்கள் நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவற்றில் 34ஆயிரம் குளங்களும் உள்ளடங்குகின்றன. இலங்கையைப் பொறுத்தவரையில் விவசாயத்தினை மேம்படுத்துவதற்காகவும், நீர்த்தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் குளங்கள் அமைக்கப்பட்டன. அவற்றையொட்டி குடியேற்றங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

மேலும் நாடளாவிய ரீதியில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட தொல்பொருள் இடங்கள் அடையாளம் காணப்பட்டாலும்; அவை முழுமையாக ஆவணப்படுத்தப்படவில்லை. தற்போது வரையில 16ஆயிரம் பகுதிகளே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் ஆவணப்படுத்தப்படும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

கேள்வி:- வடக்கு கிழக்கு பகுதிகளில் தொல்பொருள் திணைக்களம் முன்னெடுத்துள்ள, முன்னெடுக்கவுள்ள பணிகளை குறிப்பிடுங்கள்?

பதில்:- வடக்கு கிழக்கில் போர் நிறைவடைந்ததன் பின்னரான சூழலில் தான் தொல்பொருள் திணைக்களம் தனது பணிகளை ஆரம்பித்திருந்தது. அதாவது 2009இன் பின்னரான சூழலில் தான் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு தொல்பொருள் திணைக்கள களச்செயற்பாட்டு அணி நேரடியாக விஜயம் செய்து ஆய்வுகளை முன்னெடுத்திருந்தது. 

கிழக்கு மாகாணத்தினை எடுத்துக்கொண்டால் அம்பாறை மாவட்டத்தில் தொல்பொருள் பகுதிகளை அடையாளம் காணும் ஆய்வுப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டன. மட்டக்களப்பில் பிரதான தொல்பொருள் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. திருகோணமலையில் ஒரு சில இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள போதும் இதுவரையில் எவ்விதமான ஆய்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. 

வடக்கினைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தில் ஆய்வுகள் முழுமை பெற்றுள்ள போதும் மன்னார், வவுனியா முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பகுதி அளவில் தான் தொல்பொருள் இடங்களை கண்டறிவதற்கான ஆய்வுகள் நிறைவுக்கு வந்திருக்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரையில் ஆய்வு பணி முன்னெடுக்கப்படவில்லை. 

கேள்வி:- வடக்கு கிழக்கில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் அடையாளம் காணப்பட்டுள்ள தொல்பொருள் இடங்களின் எண்ணிக்கையை மாவட்ட ரீதியாக குறிப்பிட முடியுமா? 

பதில்:- நான் ஏற்கனவே கூறியது போன்று, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் ஆய்வுகள் முழுமை பெறவில்லை. அம்மாவட்டங்களில் தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியிருக்கின்றன. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் சுமார் நூறு இடங்கள் ஆய்வுகள் மூலம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. முல்லைத்தீவில் பகுதியளவில் மேற்கொண்ட ஆய்வுகளின் பிரகாரம் 270இடங்களும், மன்னாரில் பகுதியளவில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் 230இடங்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று அம்பாறையில் 450இடங்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளபோதும் 250வரையிலான இடங்களே தற்போது வரையில் வர்த்தமானி அறிவித்தலுக்குள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன. 

கேள்வி:- வடக்கு கிழக்கில் அடுத்தகட்டமாக எவ்விதமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளீர்கள்?

பதில்:- அண்மைக்காலத்தில் ஏற்பட்ட கொரோனா பரவலை அடுத்து களப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நாம் வடக்கு கிழக்கில் மாவட்ட ரீதியாக நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். அம்பாறை மாவட்டத்திற்கான ஆய்வுப்பணிகளும், அடையாளப்படுத்தல்களும் முழுமை அடைந்துவிட்டன. ஆகவே மட்டக்களப்பு மாவட்ட பணிகளை அடுத்தகட்டமாக ஆரம்பித்து நிறைவுக்கு கொண்டுவர தீர்மானித்திருக்கின்றோம். அதற்கு அடுத்தபடியாக திருகோணமலையில் பணிகளை மேற்கொள்ளவுள்ளோம். அதேபோன்று வடக்கில் மன்னார், வுவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பகுதியளவில் இருக்கும் பணிகளை நிறைவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். 

விசேடமாக இந்தப் பணிகளில் தமிழ் பேசும் பணியாளர்களையே ஈடுபடுத்தவுள்ளோம். அவர்கள் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்டகால பயிற்சியொன்றை வழங்க வேண்டியுள்ளது. அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். அதன் பின்னர் அவர்கள் களச் செயற்பாட்டில் வினைத்திறனாக செயற்படவுள்ளனர். 

கேள்வி:- அப்படியென்றால் கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதற்காக பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் என்ன? 

பதில்:- மிக முக்கியமான வினாவொன்றை கேட்டுள்ளீர்கள். அண்மைய நாட்களில் ஜனாதிபதி செயலணி தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளமையை ஊடகங்கள் வாயிலாக நான் அறிந்துள்ளேன். உண்மையிலேயே எமது செயற்பாடுகளை விரைவாகவும், வினைத்திறனாகவும் முன்னெடுப்பதற்கான மேலதிக ஒத்துழைப்புக்களை நல்குவதற்கான ஒரே நோக்கத்தின் அடிப்படையிலேயே  ஜனாதிபதியால் செயலணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலணி மட்டக்களப்பிலிருந்து தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது. இதற்கு தவறான அர்த்தப்படுத்தல்களை செய்வது பொருத்தமாகாது. 

கேள்வி:- ஆனால் ஜனாதிபதி செயலணி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கின்றதே?

பதில்:- வடக்கு கிழக்கில் மூன்று தசாப்த போர் காரணமாக தொல்பொருள் இடங்கள் உரிய முறையில் அடையாளப்படுத்தப்படவில்லை. அதனால் பல இடங்கள் காடுகளாகியுள்ளன. மேலும் சில இடங்கள் சிதைந்துள்ளன. மண்ணில் மங்கியுள்ளன. ஆகவே அவற்றை கண்டறிவதற்குரிய பணிகளை தனியே திணைக்கள ஊழியர்களால் மட்டும் மேற்கொள்ள முடியாது. ஆகவே அவ்விதமான பணிகளை முன்னெடுப்பதற்கு படையினரின் உதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. அதற்கு அப்பால் உள்ள பணிகளில் படையினரின் தலையீடுகள் இருக்கப்போவதில்லை. 

கேள்வி:- கிழக்கிற்காக செயலணி அமைக்கப்பட்டுள்ள போதும் அதில் தமிழ் பேசும் தரப்பினர் உள்ளீர்க்கப்படவில்லையே?

பதில்:- முதலாவதாக, விசேட செயலணி அரசாங்கத்தினால் அதிகாரிகளை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாகும். அந்தவகையில் செயலணியில் பாதுகாப்புச்செயலாளர், நான், காணி ஆணையாளர், நில அளவை ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளனர். இவ்விதமாக உள்ளடக்கப்பட்டவர்கள் தமது பணிகள் தொடர்பான தீர்மானத்தினை எடுத்து பொதுமக்களுக்கு பகிரங்கமாக அறிவித்தே செயற்படவுள்ளார்கள். ஆகவே அதில் குழப்பமடைய வேண்டியதில்லை. எவ்வாறாயினும், தற்போது தமிழ் பேசும் இருவரை செயலணியில் உள்ளீர்ப்பதாக அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கேள்வி:-தொல்பொருளியல் திணைக்களம் பௌத்த சமயத்தினை முன்னலைப்படுத்தி அல்லது அதுசார்ந்த சின்னங்களை அடையாளப்படுத்துவதிலேயே கூடிய கரிசனை கொண்டு செயற்படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றதே? 

பதில்:- இந்தக் குற்றச்சாட்டை நான் அடியோடு நிராகரிக்கின்றேன். தொல்பொருளியல் திணைக்களத்திற்கென மதமொன்று இல்லை. எந்தவொரு மதத்தினையும் முன்னிலைப்படுத்தவும் இல்லை. நாட்டின் வரலாற்று சுவடுகளாக இருக்கும் தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதையே இலக்காக கொண்டு செயற்பாடுகள் அமைகின்றன.  

கேள்வி:- குறிப்பாக, வடக்கு கிழக்கில் சிங்கள, பௌத்தமயமாக்கல் நிகழ்ச்சி நிரலில் தொல்பொருளியல் திணைக்களம் ஊடாக மறைமுகமாக முன்னெடுக்கப்படுவதாகவே குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றதே?

பதில்:- அவ்வாறில்லை. தொல்பொருளியல் திணைக்களம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மதத்தினையோ, இனத்தினையோ இலக்கு வைத்து தனது செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை. இந்த நாட்டின் இன,மத விகிதாசாரத்திற்கு அமைவாக ஆய்வுகளின் மூலம் வெளிப்படுத்தப்படும், அடையாளப்படுத்தப்படுத்தப்படும் இடங்களின் எண்ணிக்கையில் காணப்படுகின்ற ஏற்ற இறக்கத்தினை மையப்படுத்தி குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது தவறானதாகும். 

கேள்வி:- இன,மத விகிதாசாரத்திற்கு அப்பால், வரலாற்றுத் திரிவுபடுத்தல்கள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளனவே? உதாரணமாக கூறுவதானால், தமிழர்கள் அல்லது முஸ்லிம்களுக்கு, இந்துக்கள் அல்லது இஸ்லாமியர்களுக்கு சொந்தமான பூர்வீகமான பகுதிகள் பெரும்பான்மை சிங்களவர்களின், பௌத்த மதத்தின் இடங்களாக சித்தரிக்கப்படுவதாக கூறப்படுகின்றதே?

பதில்:- அவ்வாறான திரிவுபடுத்தல்கள் எவற்றையும் திணைக்களம் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கவில்லை. அவ்வாறான குற்றச்சாட்டுக்களையும் நான் நிராகரிக்கின்றேன். அவ்வாறான குற்றச்சாட்டுக்களும் மிகமிக தவறானவையே. ஒரே பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையிலான தொல்பொருள் சின்னங்கள் காணப்படுவது யதார்த்தமானதாகும். அதற்காக தொல்பொருள் திணைக்களமானது இனம், மதம் சார்ந்து பக்கச்சார்பாக செயற்படும் கட்டமைப்பொன்றல்ல. மேலும் நாட்டின் வடக்கிலும் சரி தெற்கிலும் சரி கிழக்கிலும் மேற்கிலும் சரி அடையாளப்படுத்தப்படும் தொல்பொருள் சின்னங்கள் அந்தந்த பகுதிகளின் நிருவாகத்தின் கீழேயே நிருவகிக்கப்படுகின்றமையையும் கருத்தில் கொள்ள வேண்டும். 

கேள்வி:- ஒருபகுதியில் தொல்பொருள் சின்னங்கள் இருப்பதாக திணைக்களத்திற்கு தகவல் கிடைத்தவுடன் எவ்வாறான நடவடிக்கைகளை அடுத்த கட்டமாக மேற்கொள்வீர்கள்?

பதில்:- முதலாவதாக அந்த பகுதியோ சின்னங்களோ என்ன என்பதை ஆய்வு செய்யவோம். அதனையடுத்து அவை தொல்பொருளுடன் தொடர்புடையதை உறுதி செய்யும் பட்சத்தில் அப்பகுதியை மையப்படுத்திய எல்லைகளை வகுப்போம். அதற்கடுத்து எல்லைகளை குறிக்கும் நிர்மானங்களை செய்வதோடு அறிவித்தல் பலகையையும் அங்கு காட்சிப்படுத்துவோம். அதற்கு அடுத்தபடியாக அப்பிரதேசத்தினை மையப்படுத்தி வர்த்தமானி அறிவித்தலைச் செய்வோம். 

கேள்வி:- தொல்பொருள் திணைக்களமானது எவ்விதமான ஆய்வுகளையும் மேற்கொள்ளாது நேரடியாக தொல்பொருள் இடங்களாக பிரகடனம் செய்வதாக விமர்சிக்கப்படுகின்றதே?

பதில்:- அவ்விதமாக எந்தவொரு செயற்பாடுகளையும் நாங்கள் முன்னெடுக்கவில்லை. அது தவறான விமர்சனமாகும். 

கேள்வி:- வடக்கில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின்; நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் அடையாளப்படுத்தலொன்றின்போது அவ்விதமான செயன்முறை பின்பற்றப்பட்டிருக்கின்றதே?

பதில்:- இல்லை. அதுதவறான தகவலாகும். நாம் பகுதிகளை அடையாளப்படுத்தி, எல்லைகளை வரையறை செய்வதற்கு முதலில் ஆய்வுகள் அவசியமாகின்றன. 

கேள்வி:- தொல்பொருள் திணைக்களம் பக்கச்சார்பாக செயற்படவில்லையென்று நீங்கள் கூறினாலும், வடக்கு கிழக்கில் உள்ள அரசியல், சிவில், மத அமைப்புக்களென அனைத்துமே மத்திய அரசின் திரைமறைவு நிகழ்ச்சி நிரல் திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது என்று திரும்பத்திருப்பக் கூறிவருகின்றார்களல்லவா? 

பதில்:- தொல்பொருள் சின்னங்கள் அல்லது பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்படாத எந்தவொரு பகுதியிலாவது எல்லையிட்டோமென்றோ அல்லது அறிவித்தல் பலகை நாட்டினோம் என்றோ கூறமுடியாது. அவ்வாறான இடங்களிலிருந்தால் என்னிடத்தில் அடையாளப்படுத்தி கூறுமாறு சாவல்விடுகின்றேன் 

மேலும், தொல்பொருள் இல்லாத பகுதிகளில் எல்லையிடுவதற்கோ, அறிவித்தல் பலகை நடுவதற்கோ திணைக்களத்திற்கு எவ்விதமான உரிமையும் இல்லை. ஆனால் தொல்பொருளுக்குரிய பகுதியென அடையாளம் காணப்பட்ட பின்னர் நாம் உரிய நடவடிக்கைகளையே முன்னெடுப்போம். வடக்கிற்கும் தெற்கிற்கும் தொல்பொருள் பாதுகாப்பில் ஒரே சட்டவரையறையே உள்ளது. அதில் வேறுபாடுகள் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

எமது செயற்பாடுகளுக்கு இன,மத வாத சாயங்களை பூசிப்பார்கின்றபோது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறுபட்ட கோணத்திலேயே எமது செயற்பாடுகள் தெரியும். வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி ஒருமதத்தினை மையப்படுத்திய சின்னங்களின் மீது பிறிதொரு மதத்தின் சமயத்தலங்கள், அடையாளங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. வடக்கில் சில பௌத்த சுவடுகள் மீது இந்துக் கோவில்கள் உள்ளன. அதேபோன்று, கூரகலையில் பௌத்த மதத்திற்கு சொந்தமான இடத்தில் பள்ளிவாயல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ்விதமான பிரச்சினைகள் காணப்படுகின்றன. 

அவற்றை கலந்துரையாடல்கள் ஊடாக தீர்க்க வேண்டியுள்ளது. எனினும் இந்த இடங்களை நாம் தொல்பொருள் திணைக்களம் என்ற அடிப்படையில் தான் பாதுகாக்கின்றோமே தவிரவும் இனத்தின், மதத்தின் பக்கம் நின்று அல்ல. நாட்டின் மரபுரிமை என்ற அடிப்படையில் தான் செயற்படுகின்றோம் என்பதை திடமாக கூறுகின்றேன். 

கேள்வி:- மிகமுக்கிமாக தொல்பொருள் திணைக்களம் காணிகளை எழுந்தமானமாக அபகரிக்கின்றது என்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாக உள்ளன?

பதில்:- தொல்பொருள் திணைக்களத்தினால் அவ்வாறு கையகப்படுத்தும் செயற்பாடுகளை செய்யமுடியாது. முதலாவது நாம் தொல்பொருள் பகுதிகளை எல்லையிட்டபின்னர் காணி திணைக்களத்தின் உதவியுடன் தான் வர்த்தமானி அறிவித்தலை பிரசுரிப்போம். தனியார் காணிகளாக இருந்தால் அவர்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு பங்கம் ஏற்படாதவாறு அவர்களின் அனுமதியுடன் தான் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம். 

உதாரணமாக கூறுவதானால், அம்பாறை, முஹ{துமா விகாரையை அண்மித்த முஸ்லிம் மக்களின் குடியேற்ற விடயத்தில் எழுந்த சர்ச்சைகளின்போது நான் நேரடியாக அங்கு சென்று அந்த மக்களுடன் கலந்துரையாடினேன். அவர்களுக்கு விடயத்தினை எடுத்துக்கூறி அம்மாவட்ட செயலாளரின் உதவியுடன் இணக்கப்பாட்டிற்கு கொண்டுவந்திருந்தேன். 

இவ்வாறு தான் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களின் விருப்பதற்கு மாறாக, பலாத்காரமாக எமது திணைக்களம் எவ்விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதில்லை.