-சத்ரியன் 

கடந்த சில நாட்களாக வடக்கில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, 13ஆவது திருத்தச்சட்டத்தை பாதுகாப்பேன் என்றும், அதிகாரப்பகிர்வுடன் கூடிய மாகாணசபையை பலப்படுத்துவேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார்.

பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு அரச ...

ஆனால், சமநேரத்தில் கொழும்பில் தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்துப் பேசிய பிரதமர் மகிந்த ராஜபக்ச, 13வது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம் குறித்த பீதியைத் தோற்றுவித்திருக்கிறார்.

இந்த இரண்டுக்கும் முன்னதாக, முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட அரசியல் கட்சிகளிடம் ஒரு  வேண்டுகோளை விடுத்திருந்தார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளை  இல்லாமல் ஒழிப்பது குறித்து அரசியல் கட்சிகள் ஆலோசிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

மாகாணசபைகளால் நாட்டுக்கு வீண் செலவு ஏற்படுவதாக  சுட்டிக்காட்டியுள்ள அவர், பெரும்பாலான மாகாணசபைகள் செயலிழந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியுள்ளன என்றும் ஆனாலும், அரச நிர்வாகம் தொடர்ந்து  முன்னெடுக்கப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இதன்மூலம் அவர் மாகாணசபைகள் இல்லாவிட்டாலும்,  அரச நிர்வாகத்தை திறமையாக கொண்டு செல்ல முடியும் என்று நிரூபிக்க முனைகிறார்.

பொதுத்தேர்தலுடன் மக்கள் ...

வீணான செலவை தவிர்ப்பதற்கு, மாகாண சபைகளை ஒழித்து விட்டால் என்ன என்று அவர் அரசியல் கட்சிகளின் முன்பாக ஒரு யோசனையை முன்வைத்திருக்கிறார்.

மிலிந்த மொரகொட ஒரு அரசியல்வாதியாக வெற்றி பெற்றவர் அல்ல. ஆனால் வர்த்தகராக வெற்றிபெற்றவர்.  

அதுமாத்திரமன்றி, அரசியலுக்குப் பின்னால் இருந்து இயக்கக் கூடிய கொள்கை வகுப்பில் கவனம் செலுத்துபவர்.

பாத் பைன்டர் என்றொரு, கொள்கை வகுப்புக்கான, சிந்தனைக் குழாமை அவர் உருவாக்கி வைத்திருக்கிறார்.

அந்த அமைப்பு, அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளுடன் இராஜதந்திர உடன்பாடுகளை செய்திருக்கிறது. இந்த நாடுகளின், சிந்தனைக் குழாம்களுடன் தொடர்புகளையும் வைத்திருக்கிறது.

இவ்வாறான ஒரு அமைப்பின் தலைவரான மிலிந்த மொரகொட, சர்வதேச அளவில், அரசியலுக்கு அப்பால் இராஜதந்திர ரீதியான உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருபவர்.

இவர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் இருந்த போது,  அமெரிக்காவுடன் ஏற்படுத்திக் கொடுத்த நெருக்கம் தான்,  விடுதலைப் புலிகளுக்கு எதிரான சர்வதேச வலைப் பின்னல் உருவாக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

அவ்வாறான ஒருவர், மாகாண சபைகளை இல்லாமல் ஒழிப்பதற்கு யோசனை கூறியிருப்பதன் பின்னால்,  எதுவுமே இல்லை என்று நம்புவது முட்டாள்தனமானது.

அவர் எதற்காக மாகாணசபை முறைகளை ஒழிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறார் என்பது இப்போதைக்கு தெரியாவிட்டாலும், இதன் பின்னாலுள்ள இரகசியம் காலம் கடந்தாவது வெளிவரும்.

Daily Mirror - Sri Lanka Latest Breaking News and Headlines ...

இந்திய - இலங்கை உடன்பாட்டுக்கு பின்னர்,1988ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாகாணசபை முறை இலங்கையைப் பொறுத்தவரையில் வெற்றிகரமான ஒன்று எனக் கூற முடியாது.

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வை வழங்கும் நோக்கில் தான் இந்த மாகாண சபைகள் இந்தியாவின் யோசனையின் பேரில் உருவாக்கப்பட்டன.

அதிகாரப் பகிர்வு மூலம் தமிழர் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு இந்தியாவின் முயற்சியுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு நகர்வு தான் இது.

ஆனால் காலப்போக்கில் இலங்கை அரசாங்கத்தினால்  மேற்கொள்ளப்பட்ட அதிகாரப் பறிப்புகள், மற்றும்  நடவடிக்கைகளால், மாகாணசபைகளின் அதிகாரம் குறைக்கப்பட்டு, இப்போது பெயருக்கு  இயங்குபவையாகவே மாறி விட்டன.

ஆனாலும் இந்த மாகாணசப்பை முறை ஒழிக்கப்படுவது ஆபத்தானது.  

ஏனென்றால் தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக முன்வைக்கப்பட்ட அதிகாரப்பகிர்வு யோசனையின் எச்சமாகவே இந்த மாகாணசபைகள் இருக்கின்றன. இவ்வாறான ஒரு அடித்தளம் இருந்தால் தான், அதற்கு மேல் கட்டியெழுப்ப முடியும்.

மாகாண சபையையும் இழந்து விட்டால் அடுத்து என்ன என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. 

விடுதலைப் புலிகள் பலமாக இருந்தபோது, மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரம் தருவதாக, வாக்குறுதி அளித்த மகிந்த ராஜபக்ச போன்ற தலைவர்கள், இப்போது 13 ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ள அதிகாரங்களைக் கூட, பிடுங்கி எடுப்பதில் தான் குறியாக இருக்கிறார்கள்.

கடந்த வாரம் தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது, 13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக, மிலிந்த மொரகொட முன்வைத்திருக்கும் யோசனை குறித்து கேட்கப்பட்ட போது, மகிந்த ராஜபக்ச அளித்துள்ள பதில், மாகாணசபைக்கு வரக்கூடிய ஆபத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

மாகாண சபைகளின் முதலமைச்சர்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்க முடியாது என்று மகிந்த ராஜபக்ச கூறியிருக்கிறார்.

Government – Page 25 – PuttalamToday

ஆனால் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கோத்தாபய ராஜபக்ச, மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்க முடியாது என்று கூறியிருந்தாலும், சமூக பொலிஸ் போன்ற அமைப்பை உருவாக்குவது  குறித்து யோசிக்க முடியும் என குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு முன்னர் மகிந்த ராஜபக்சவும் கூட, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக கூறியிருந்தவர் தான்.

இப்போது தமிழர் தரப்பு பலவீனமான சூழலில் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு, பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் உள்ளிட்ட எந்த அதிகாரமும் இல்லாத மாகாணசபைகளை கூட விட்டு வைக்காமல் பிடுங்கிக் கொள்ளும் முனைப்பில் தான், ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.

தாம் ஆட்சிக்கு வந்தால் 19 ஆவது திருத்தத்தை கொண்டு வருவோம் என்று மகிந்த ராஜபக்ச தரப்பு கூறிக் கொண்டிருக்கும் நிலையில், 13ஆவது திருத்தத்தின் நிலை கேள்விக்குள்ளாகி இருக்கிறது.

13 ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும், அதனை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அண்மையில் இந்தியத் தூதுவரை சந்தித்த மனோ கனேசன் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது 13 ஆவது  திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்கும் உயர்மட்ட முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

மாகாணசபை ஒன்று இருந்தால்தான், வடக்கு, கிழக்கு போன்ற பகுதிகள் நமது தனித்துவத்தை தேர்தலின் மூலம் வெளிப்படுத்த முடியும். 

அதனை இல்லாமல் செய்து விட்டால், நாடாளுமன்றத் தேர்தலில் மூலம் தான் தமது தனித்துவத்தை காண்பிக்க வேண்டியிருக்கும்.

ஆனால் நாடாளுமன்ற தேர்தல் அத்தகைய தனித்துவத்தை போதியளவில் வெளிக்காட்டக்கூடிய ஒன்றாக இருப்பதில்லை.

எனவே தான், மாகாண சபைகளை ஒழிப்பதற்கு சதித்திட்டங்கள் தீட்டப்படுகின்றன. 

இதன்மூலம் அதிகாரப்பகிர்வு கோரிக்கைகளை பலவீனப்படுத்தி விட முடியும் என்று சிங்களத் தலைவர்கள் நம்புகிறார்கள் போலும்.

சிங்களத் தலைமைகள் இப்போது அதிகாரப் பகிர்வு கோரிக்கைகளை நிராகரிப்பதற்கு பதிலாக, அத்தகைய கோரிக்கைகளை பலவீனப்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகிறார்கள்.

இதன் ஒரு கட்டமாகத் தான் மாகாண சபைகளை ஒழிக்கும் யோசனையைப் பார்க்க முடிகிறது.

இவ்வாறான சூழலில் தான், சஜித் பிரேமதாச வடக்கிற்குச் சென்று 13ஆவது திருத்தச்சட்டத்தை பாதுகாப்பேன் என்றும் மாகாணசபைகளை கூடுதல் அதிகாரப்பகிர்வுடன் வலுப்படுத்துவேன் என்றும் உறுதி அளித்திருக்கிறார்.

13ஆவது திருத்த சட்டத்தின் மூலம், மாகாண சபைகளை  உருவாக்குவதற்கு, அப்போது பிரதமராக இருந்த ரணசிங்க பிரேமதாசா எதிர்ப்பு தெரிவித்தார். அவர் மாகாண சபைகளை அதனை எதிர்ப்பவராக இருந்தார்.

ஆனால் இப்போது அவரது மகன் சஜித் பிரேமதாச, அதற்கு மாறான நிலைப்பாட்டை கொண்டவராக இருக்கிறார்.

13ஆவது திருத்தச் சட்டத்தை பாதுகாக்கும் முனைப்பை அவர் வெளிப்படுத்தியிருப்பதன் மூலம் தமிழ் மக்களின் வாக்குகளை அவர் குறி வைத்திருக்கிறார்.

மற்றொரு புறத்தில், மகிந்த ராஜபக்ச 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிப்பதற்கு முற்பட்டால் இந்தியாவுடன் நேரடியாக முட்டிக் கொள்வதாகவே இருக்கும்.

அவ்வாறானதொரு முடிவை மகிந்த அரசு, பலவீனமான நிலையில் இருந்து எடுக்காது.

எனினும், அத்தகைய முடிவை எடுக்காது என்று யாராலும் உறுதியாகக் கூற முடியாது. பலமான ஒரு அரசாங்கத்தை அவர் அமைத்தால், 13 ஆவது திருத்தமும் கூட பறந்து போகலாம்.

பிரேமதாசா ஜனாதிபதியாக இருந்த போது, இந்திய படைகளை வெளியேறுமாறு காலக்கெடு விதித்து இந்தியாவுடன் நேரடியாகவே மோதிப் பார்த்தவர்.

அதேபோல மகிந்த ராஜபக்சவும் இந்தியாவின் குழந்தையான 13 ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிப்பதற்கு முற்படமாட்டார் என்று கூற முடியாது.

அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால் இந்தியா எந்தளவுக்கு அதனை பாதுகாப்பதற்கு முன்னுரிமை கொடுக்கும்  என்பது சந்தேகமாகவே உள்ளது.

ஏனென்றால், அவ்வாறான ஒரு கட்டத்தில் தமிழர் நலனை மையப்படுத்தி முடிவெடுப்பதா - சீனாவை மையப்படுத்தி முடிவெடுப்பதா என்ற கேள்வி இந்தியாவுக்கு எழும்.

அந்த நிலையில், சீனாவை மையப்படுத்தி இந்தியா முடிவெடுத்தால், தமிழர் நலன் மாத்திரமன்றி, 13 ஆவது திருத்தத்துக்கு கூட ஆப்பு வைக்கப்பட்டு விடும்.