- ஹரிகரன்

ரஷ்யாவில் தனது பதவிக்காலத்தை 2036 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் வகையில், ஜனாதிபதி விளாடிமிர் புடின் கொண்டு வந்த அரசியலமைப்பு திருத்தத்துக்கு அங்கீகாரம் பெறுவதற்கான சர்வஜன வாக்கெடுப்பு கடந்த முதலாம் திகதி இடம்பெற்றது.

விளாடிமிர் புடினின் அரசியலமைப்பு திருத்தத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், 78 வீதமானோர் வாக்களித்திருக்கிறார்கள். கருத்துக்கணிப்புகளில் எதிர்பார்க்கப்பட்டதை விட இது அதிகம். 

1999ஆம் ஆண்டு தொடக்கம், 2008 வரை 8 ஆண்டுகளும், 2012 தொடக்கம், தற்போது வரையிலுமாக, 16 ஆண்டுகள் ரஷ்ய ஜனாதிபதியாக இருப்பவர் விளாடிமிர் புடின்.

தொடர்ந்து இரண்டு பதவிக்காலங்கள் பதவியில் இருந்த ஒருவர் மூன்றாவது முறை ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால், 2008 தொடக்கம், 2012 வரை டிமிட்ரி மெட்வேடேவ்வை ஜனாதிபதியாக்கி விட்டு, பிரதமராக அமர்ந்து கொண்டார் புடின்.

புட்டின் ஆட்சியில் நீடிப்பதற்காக ...

மீண்டும், 2012 ஜனாதிபதி தேர்தலில் வெற்றியைப் பெற்று தொடர்ந்து, ஆட்சிக்கு வந்த அவர், இப்போது இரண்டாவது பதவிக்காலத்தில் இருக்கிறார். 

2024இல் இந்தப் பதவிக்காலம் முடிவுக்கு வரும் போது, மூன்றாவது முறை அவரால் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.  எனவே தான், தனது பதவிக்காலத்தை 2036 ஆம் ஆண்டு வரை நீடிக்கும்  அரசிலமைப்பு திருத்தத்தைக் கொண்டு வந்திருந்தார். அதற்கு ரஷ்ய மக்களின் ஆதரவையும் அவர் பெற்றிருக்கிறார்.

இதன் மூலம் அவர் ரஷ்யாவின் நீண்ட கால ஜனாதிபதியாகப் பதவியில் இருக்கப் போகிறார். தற்போது, 67 வயதுடைய புடின், 80 வயது வரை ஜனாதிபதியாக இருக்கப் போகிறார்.

விளாடிமிர் புடினுக்கும், பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இரண்டு பேருமே நீண்டகால ஆட்சியாளர்களாக இருக்க விரும்புகிறவர்கள் என்பதே அது.

இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச, மூன்றாவது முறை பதவிக்கு வருவதற்காக அரசியலமைப்பை திருத்திக் கொண்டார்.

அவ்வாறு அரசியலமைப்பைத் திருத்திக் கொண்ட போதும், 2015 ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவினால், வெற்றி பெற முடியவில்லை.  அந்த தோல்வி அவரது திட்டத்தைக் குழப்பி விட்டது.

அதற்கிடையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கம், அரசியலமைப்பை திருத்தி, இரண்டு முறைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட முடியாதபடி அவருக்கு தடையை போட்டு விட்டது.

வடக்கு மக்களின் பிரச்சினையை எனது ...

அதனால் தான் அவர், ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை கோத்தாபய ராஜபக்சவை முன்நிறுத்த நேரிட்டது. 

இரண்டு தடவைகளுக்கு பின்னர் – விளாடிமிர் புடின் 2008 தொடக்கம் 2012 வரையான நான்கு ஆண்டுகள் எவ்வாறு பிரமராக இருந்தாரோ, அது போலத் தான் இப்போது பிரதமர் பதவியில் இருக்கிறார் மகிந்த ராஜபக்ச.

ஆனாலும் அவரது இலக்கு, ஜனாதிபதி ஆசனம் தான். அதுதான் நிறைவேற்று அதிகாரம் கொண்டது.

அந்த ஆசனத்தில் அமருவதற்காகவே தான், இந்த தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வேண்டுகிறார் மகிந்த ராஜபக்ச.

அவ்வாறு பெரும்பான்மை பலம் கிடைத்தால் மற்றொரு அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டு வந்து, 19 ஆவது திருத்தத்தை ஒழித்து விடுவார்.

அது மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தடைகளை நீக்கி விடும்.

அவ்வாறு செய்தால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச நேரடியாகவே களமிறங்க முடியும்.

2014 ஜனாதிபதி தேர்தலின் போது, மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை இன்னும் 20 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது என்று அவரது கட்சியினர் வீரப் பிரதாபங்கள் பேசியது நினைவிருக்கலாம்.

இப்போதும் கூட 20, 25 ஆண்டுகளுக்கு இலங்கையில் மொட்டு ஆட்சி தான் என்று மகிந்த ராஜபக்ச கூறியிருக்கிறார்.

அவர் இவ்வாறு கூறியிருப்பதன் அர்த்தம், விளாடிமிர் புடினின் திருத்தம் போன்றதொரு, திருத்ததைக் கொண்டு வரும் எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கக் கூடும். ஆனால், அவ்வாறான ஒரு திருத்தம் இலங்கையில் சாத்தியப்படுமா என்ற கேள்வி உள்ளது,

விளாடிமிர் புடினின் பதவிக்காலம் 2024 ஆம் ஆண்டுடன் நிறைவடையும் நிலையில், அவருக்கு இரண்டு தெரிவுகள் இருந்தன. 

ஒன்று, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாமல், மீண்டும் பிரதமராக வேண்டும். அந்தக் காலத்தில் ஒரு ‘டம்மி’ ஜனாதிபதியை உருவாக்கி விட்டு, அதற்கு அடுத்த முறை மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும்.

Putin's call for 'reform' of Russia govt leads to Medvedev resignation

கடந்த முறை விளாடிமிர் புடின், ஜனாதிபதி பதவியில் டிமிட்ரி மெட்வேடேவ்வை அமர்த்தினார். டம்மி ஜனாதிபதியாகவே டிமிட்ரி மெட்வேடேவ் அப்போது இருந்தார். பிரதமராக பதவியில் இருந்து ஆட்சியை நடத்தியது புடின் தான்.

டிமிட்ரி மெட்வேடேவ் இப்போது பிரதமராக இல்லை. 2018இல் அவர் பிரதமர் பதவியில் இருந்து நீங்கி விட்டார். இப்போது, மிக்கெய்ல் மிஷூன்ரின் தான் பிரதமராக இருக்கிறார்.

இவரை ஜனாதிபதியாக்குவதற்கு புடினுக்கு அச்சம் இருந்திருக்கலாம். எப்போதும், நிலைமைகள் ஒரே மாதிரியாக இருக்காது என்பது, முன்னாள் கேஜிபி தலைவர் (ரஷ்ய புலனாய்வு அமைப்பு) என்ற வகையில் புடினால் அறியாமல் இருக்க முடியாது.

அவர் இனி வேறெவரையும் நம்பி, இரண்டு பதவிக்காலத்துக்கு ஒருமுறை பிரதமர் பதவியில் இறங்கி ஏறுவதற்கு தயாராக இல்லை.

அதனால் தான், 2036 வரை, அதாவது இன்னும் 16 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் வகையில், அரசியலமைப்பை திருத்தியிருக்கிறார்.

ஆனால், மகிந்த ராஜபக்சவுக்கு ஜனாதிபதி பதவியில் அமர வைப்பதற்கு ஒன்றுக்கு மூன்று சகோதரர்கள் அரசியலில் இருக்கிறார்கள்.

எனினும், அவர்களை நம்பி நீண்டகாலத்துக்கு ஜனாதிபதி பதவியைக் கொடுத்து விட்டு, பிரதமராக காலத்தைக் கடத்துவதற்கு, அவர் தயாராக இல்லை.

அதனால் தான், 19 ஆவது திருத்தத்தை ஒழிக்க அவர் திட்டமிடுகிறார். மகிந்த ராஜபக்சவைப் பொறுத்தவரையில், அவர் பிரதமராக நீடிப்பதில் யாருக்கும் சிக்கல் இல்லை.

ஆனால், அவர் எதிர்பார்க்கின்ற ஜனாதிபதி பதவியில் அவர் மீண்டும் அமர முடியுமா என்பது சந்தேகம்.

அதற்கு, 19 அவது திருத்த ஒழிப்பதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேர்தலில் கிடைக்குமா என்ற சந்தேகம் மட்டும் காரணமில்லை.

அதனை செய்வதற்கு தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அனுமதிப்பாரா என்ற கேள்வியும் இருக்கிறது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, அதிகாரத்துக்கு வருவதற்கு முன்பிருந்தது போல, இப்போது இல்லை. அவர் தன்னைச் சுற்றி ஒரு கூட்டத் உருவாக்கி கொண்டிருக்கிறார்.

அந்தக் கூட்டம் அவரை இந்தப் பதவியில் இருந்து நீங்குவதை அனுமதிப்பது சாத்தியமில்லை. ஏனென்றால் அவரை அவர்கள் ஒரு மீட்பராக - இரட்சகராக கருதுகிறார்கள்.

அவரார் மட்டுமே நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று நம்புகிறார்கள். சிங்கள பௌத்த பேரினவாதிகளும், அரசியல்வாதிகளும் இணைந்துள்ள இந்த கூட்டணி முப்படைகளினதும் செல்வாக்கையும் பெற்றது.

இவ்வாறான ஒருவரிடம் போய், ஜனாதிபதி பதவியை விட்டுக் கொடுக்குமாறு, பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் கேட்க முடியாது. 

அவ்வாறு கேட்டால் அது முரண்பாடுகளை ஏற்படுத்தக் கூடும். கோத்தாபய ராஜபக்சவை சூழவுள்ள பேரினவாதக் கூட்டணி அவரை வேறொரு பாதையில் நகர்த்த முனைகிறது. 

GR's lawyers argue dual citizenship certificate valid | Daily FT

அது மகிந்த ராஜபக்ச பயணம் செய்ய விரும்புகின்ற பாதை.  இவ்வாறான நிலை ஏற்பட்டால், ஒரே பாதையில் செல்வதற்கு இரண்டு பேரும் மோதுகின்ற சூழல் ஏற்படலாம்.

இவ்வாறான நிலையை கருத்தில் கொண்டு தான், விளாடிமிர் புடின் தனது அதிகாரத்தை நெடுங்காலத்துக்கு நீடிக்க முடிவு செய்தார்.

ஆனால் மகிந்த ராஜபக்ச, இப்போது அரசியலமைப்பை மாற்றுவதற்குக் கூட, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் தயவுக்காக காத்திருக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.

புடின் தன்னைச் சுற்றி இரும்புக் கோட்டையைக் கட்டியிருக்கிறார், ஆனால், மகிந்த ராஜபக்ச கட்டியிருப்பது இரும்புக் கோட்டை அல்ல, அது வெறும் மண் கோட்டை.