(ஆர்.யசி)

நாட்டில் இனவாதத்தை பரப்பி சிறுபான்மை மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கையாளும் ஆட்சியாளர்கள் வேண்டுமா அல்லது மூவின மக்களையும் சமமாக நடத்தும் ஜனநாயக ஆட்சி முறைமை வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் மீண்டுமொரு முரண்பாட்டினை நாட்டில் ஏற்படுத்த ஒருசிலர் முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரங்களில் ஒன்று மூதூரில் இடம்பெற்றது. இதில் உரையாரும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். 

இந்த நாட்டில் மூவின மக்களும் ஐக்கியமாக வாழ வேண்டும் என்பதையே  நாம் விரும்புகின்றோம். நாம் ஆட்சியில் இருந்த காலத்தில் மூவின மக்களுக்குமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. 

மாறாக சிங்கள பெளத்த கொள்கையாளர்கள் என்பதற்காக சிறுபான்மை மக்களை அடக்குமுறைக்குள் தள்ளும் நடவடிக்கைகள் எதனையும் நாம் முன்னெடுக்கவில்லை. 

இந்த நாட்டில் மூவின மக்களும் ஐக்கியமாக வாழ முடியுமானால் மட்டுமே நாட்டின் அபிவிருத்தியை நோக்கி பயணிக்க முடியும். மாறாக இந்த நாட்டிற்குள் இனவாதமும், மதவாதமும், பெளத்த பேரினவாதமும்  பரப்பப்பட்டு வருமாயின் அது ஒட்டுமொத்த நாட்டினையும் நாசமாக்கிவிடும். இன்றும் அவ்வாறான முயற்சிகளில் ஒரு சிலர் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.