(எம்.மனோசித்ரா)

கொரோனா பரவல் காரணமாக இலங்கைக்கு வரமுடியாமல் பஹ்ரைனில் சிக்கியிருந்த 290 இலங்கையர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினர். இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் இவர்கள் அனைவரும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இவ்வாறு வருகை தந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தொழில் நிமித்தம் அந்நாட்டில் தங்கியிருந்தவர்களாவர்.  

யு.எல்.202 என்ற விமானம் மூலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அத்தோடு நேற்று சனிக்கிழமை இரவு 11.45 மணியளவில் டுபாயிலிருந்து வந்த எமிரேட்ச் அரசுக்கு சொந்தமான இ.கே.648 என்ற விமானம் மூலம் இரு இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் கட்டாரின் டோஹா நகரிலிருந்து கட்டார் விமான சேவைக்கு சொந்தமான கியுவ்.ஆர்.668 என்ற விமானம் மூலம் 15 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.