(இராஜதுரை ஹஷான்)

சிங்கள மக்களை பகைத்துக் கொண்டு நாட்டில் வாழ முடியாது. ஆகையால் தமிழ் மக்கள் அரசியலில் பலம் பொருந்தியவர்களாக  இருக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு  கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான   மனோகணேஷன் தெரிவித்தார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில்  கலந்துகொண்டு கருத்துரைக்கையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

இலங்கை பல்லின  சமூகம் வாழும் பெரும்பான்மை நாடு. எந்த கட்சி ஆட்சி  அமைத்தாலும் அக்கட்சி பெரும்பான்மை  சமூகத்துக்கு முன்னுரிமை வழங்குவது    சாதாரண ஒரு விடயமாகும். இதனை  குறை கூற முடியாது.  ஏனெனில் சிங்கள மக்களே  பெரும்பான்மையின் சமூகமாக வாழ்கிறார்கள். இடம் பெறவுள்ள பொதுத்தேர்தல்  தமிழ் பேசும் மக்களின் உரிமைகளையும்,   அரசியல் அந்தஸ்த்தினையும் பாதுகாக்கும்ஒரு தேர்தலாகவே காணப்படுகிறது.கடந்த காலங்களை காட்டிலும் நாட்டில்  தமிழ் பேசும் மக்களின்  நிலை  தற்போது எந்த  மட்டத்தில் உள்ளது என்பதை புதிதாக எடுத்துரைக்க வேண்டிய தேவை கிடையாது.

சிங்கள மக்களை பகைத்துக் கொண்டு நாட்டில்  வாழ முடியாது. இதுவே யதார்த்தமான உண்மை  இதற்காக எமது உரிமையினை விட்டுக் கொடுக்க முடியாது.  இதற்கு தமிழ் பேசும் மக்கள் அரசியலில் பலம் மிக்கவர்களாக  இருக்க வேண்டும்.  ஏனைய மாவட்டங்களை காட்டிலும்  கொழும்பு மாவட்டத்தில் தமிழ்  மொழி பேசும் ஒருவர்  பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்து ஒரு அமைச்சராக  பதவி  வகிப்பது முக்கியமானதொரு விடயாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.