(இராஜதுரை ஹஷான்)

நல்லாட்சி அரசாங்கத்தில்  அரச ஊழியர்கள்  உரிய   சாட்சியங்கள் ஏதுமின்றி அரசியல் பழிவாங்களுக்காக கைதுசெய்யப்பட்டார்கள்.  எமது ஆட்சியில் இவ்வாறான நிலை ஏற்படாது. ஆனால் குற்றம் புரிந்தவர்களுக்கு மன்னிப்பு  அரசியல் காரணிகளை கொண்டு வழங்கப்படமாட்டாது என்று  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் தற்போது   பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளார்கள்.  அனைத்து வாக்குகளையும் ஒன்றினைக்க வேண்டியது அவசியமாகும் என்றும்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

திஸ்ஸமஹாராம - சேனபுர பிரதேசத்தில்  இன்று  ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற   பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறப்பிடுகையில்,

தெற்கு மாகாணத்தில்  டயர் உற்பத்தி தொழிற்சாலை ,  மருந்து உற்பத்தி தொழிற்சாலை ஆகியவற்றை  நிர்மாணிக்க ஆரம்பக்கட்ட   நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. டயர் தொழிற்சாலைக்கான இறப்பர்   உள்நாட்டுக்குள்ளே  முழுமையாக பெற்றுக் கொள்ளப்படும்.

சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதற்கான   செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண  மக்கள் சுத்தமான குடிநீரை பெற்றக் கொள்வதில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு  வழங்கும் விதமாக 20 ஹெக்கர் நிலப்பரப்பில் நீர் சுத்திகரிப்பு மையங்களை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நவீன தொழில்துறையினை பெற்றுக் கொள்ளும் கல்வி முறைமையினை  அறிமுகம் செய்யும் கல்வி கொள்கையிகை வகுக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் என்றார்.