புத்தளத்தில் இனந்தெரியாதோரால் தாக்குதலுக்குள்ளான கணவன், மனைவி ஆகியோர் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் தம்பபண்ணி பீ முகாமைச் சேர்ந்த கணவன், மனைவி  மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அவர்களது வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (3) இரவு இடம்பெற்றதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற இரவு தாக்குதலுக்கு உள்ளான நபரின் வீட்டிற்கு சென்ற நான்கு பேர் கொண்ட குழுவொன்று தகாத வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகித்ததுடன், குறித்த நபரை வீட்டிற்கு வெளியே வரவழைத்து அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், குறித்த நபருடைய வீட்டின் யன்னல் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள், வெளியே வந்த குறித்த நபரின் கர்ப்பிணித் தாயான மனைவி மீதும் தாக்குதல் நடத்தியதாக மேற்கொள்ளப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 20 வயதுடைய 7 மாதக் கர்ப்பிணித் தாய்க்கும், பிள்ளைக்கும் எதுவிதமான பாதிப்புக்களும் இல்லை என புத்தளம் தள வைத்தியாசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் மீது தாக்குதல் மேற்கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனக் குறிப்பிட்ட புத்தளம் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.