(எம்.மனோசித்ரா)

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த போதிலும் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ ஏதேனுமொரு உடல் ரீதியில் அங்கவீனமுற்ற வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கு உதவியாளர் ஒருவரை உடன் அழைத்து செல்வதற்கான விண்ணப்பங்களை கிராம சேவகர்கள் , மாவட்ட அலுவலகங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேற்குறிப்பிட்டவாறு ஏதேனுமொரு வகையில் உடல் அங்கவீனமுற்ற வாக்களாளர்கள் உடமன் அழைத்து வரக் கூடிய உதவியாளர் 18 வயதைப் பூர்த்தி செய்வராக இருக்க வேண்டும் என்பதோடு , அவரொரு வேட்பாளராக இருக்கக் கூடாது. அதே போன்று பாராளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சியொன்றின் அதிகாரமளிக்கப்பட்ட முகவரொருவராகவோ அல்லது பிரதேச , சுயேட்சை குழுவொன்றின் தலைவராகவோ வாக்கெடுப்பு பிரிவின் முகவராகவோ இலுருக்கக் கூடாது.

இவ்வாறு உதவியாளர் ஒருவரை அழைத்துச் செய்வதற்காக பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள தகுதிச் சான்றிதழ் ஒன்றை உரிய வாக்கெடுப்பு நிலையத்தின் அலுவலர்களிடம் சமர்ப்பித்தல் வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை அனைத்து மாவட்ட அலுவலகங்கள் , கிராம அலுவலகங்களிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

மேற்கூறப்பட்டவாறு உதவியாளர் ஒருவரை உடன் அழைத்து வர முடியாத அங்கவீனமுற்ற வாக்காளொருவருக்கு தேவையேற்படின் இதற்கு முன்னைய தேர்தல்களின் போது மற்றுமோர் அலுவலரின் முன்னிலையில் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலரைக் கொண்டு வாக்குச்சீட்டை அடையாளமிட்டுக் கொள்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.