ஜப்பானின் தெற்கு தீவான கியுஷுவில் பெய்த பலத்த மழையினால் உண்டான வெள்ளப் பெருக்கு மண்சரிவுகளில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காணாமல்போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மேற்கு குமாமோட்டோ பிராந்தியத்தில் வெவ்வேறு நகரங்களில் 80 வயதில் ஒரு பெண்ணும் ஆணும் மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தாகவும் ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த அனர்த்ததில் உயிரிழந்தவர்கள் பலர் தாதியர் விடுதியொன்றில் வசிப்பவர்கள் என குமாமோட்டோ பிராந்தியத்தைச் சேர்ந்த ஆளுநர் இக்குவோ கபாஷிமா செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளை குமாமோட்டோ பிராந்தியத்தில் உள்ள மீட்பு ஹெலிகாப்டர்கள் அதிகமான மக்களை தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. 

10,000 பாதுகாப்பு படையினர், கடலோர காவல்படை மற்றும் தீயணைப்பு படையினர் இந்த நடவடிக்கையில் பங்கேற்கின்றனர்.

குமாமோட்டோ மற்றும் ககோஷிமா மாகாணங்களில் 75,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெள்ளிக்கிழமை மாலை மற்றும் சனிக்கிழமை பெய்த மழையினால் தொடர்ந்தும் வெளியேறுமாறும் வலியுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

photo Credit ; twitter