கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட இரண்டு துறைகளில் பொருளாதாரத்துறையை தொடர்ந்து பாதிக்கப்பட்டது கல்வித்துறையாகும். கடந்த சுமார் 4 மாதங்களுக்கும் மேலாக பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் என்பன இயங்காது  முடங்கியுள்ளன.  இந்நிலையில் மாணவர்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இந்நிலையில்  ஒன்லைன் மூலமாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் உற்சாகம் அளித்த போதிலும் இலங்கை போன்ற வறிய நாடுகளில் அது எந்தளவு தூரம் வெற்றியளிக்கும் என்று கூறுவதற்கில்லை . ஒருவேளை உணவுக்கே பெரும் திண்டாட்டத்தை எதிர்நோக்கும் பெற்றோரால் விலையுயர்ந்த கையடக்கத்தொலைபேசி ஒன்றை கொள்வனவு செய்ய முடியுமா என்று சிந்திக்க வேண்டியுள்ளது .

அந்த வகையில் இலங்கையில் ஒன்லைன் மூலமாக கல்வி என்பது வெறும் பேச்சுக்கு மாத்திரமே பொருத்தமாக இருக்கும். அதனையும் கடந்து நவீன வழிகளில் மாணவர்களுக்கு கல்வி போதிக்க வேண்டிய கட்டாய நிலை இன்று தோன்றியுள்ளது. 

வடபகுதியில் முன்னர் ஒரு காலகட்டத்தில் கல்வித்துறை கொடிகட்டிப் பறந்தது. எனினும் யுத்தத்தால் அது பெரும் வீழ்ச்சி கண்டது. இன்றும் கூட முன்னைய நிலைக்கு திரும்ப இயலாதவர்களாக மக்கள் காணப்படுகின்றனர்.

அதே வகையான ஒரு மோசமான நிலையை கொரோனா வைரஸ் கல்வித்துறையில் ஏற்படுத்தியுள்ளது. முழு உலகமே இதனால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது.

இருந்தபோதிலும் நிலைமை சீரானவுடன் மாணவர்களுக்கு  ஒரே தடவையில் கல்வியைப் போதித்து விடலாம் என்று எதிர்பார்க்க முடியாது. கடந்த பல மாதங்களாக இழந்த கல்வியை மீட்டெடுக்க மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு தியாகங்களை  மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும்.

இவ்வாறான சூழலில் பல்கலைக்கழகங்களும் பாடசாலைகளும் மீள ஆரம்பிக்க தயாராகி வருகின்றன. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் தொடக்கம் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை நான்கு கட்டங்களாக ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய இரண்டாம் கட்டமாக திங்கட்கிழமை 5, 11 மற்றும் 13 ஆம் வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன. 

இதற்கமைய பாடசாலைகளில் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கு பாடசாலை மாணவர்கள் மாத்திரமன்றி பெற்றோரும் தங்களாலான உதவி ஒத்தாசைகளை வழங்க முன்வர வேண்டும். பாடசாலைக்கு மாணவர்கள் செல்லும் முன்னர்  அவர்களின் உடல்நிலையை பரிசோதிப்பதுடன் அவர்கள் பாடசாலை விட்டு வீடு திரும்பியதும் அவர்களின் உடல்நிலை மற்றும் சுகாதார நடவடிக்கைகளை கண்காணிப்பது அவசியமாகும்.  

அனைத்துக்கும் மேலாக அவர்கள் சுகாதார நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடிக்கின்றனரா என்பதில் அக்கறை செலுத்துவது அவசியம். பல்வேறு இடங்களில் இருந்தும் பல்வேறு சூழல்களிலிருந்தும் வரும் மாணவர்கள், கூடும் இடமாக பாடசாலைகள் காணப்படுகின்றன. எனவே பாடசாலைகள் சீராக இயங்க வேண்டுமானாலோ மாணவர்களின் கல்வி தொடர்ந்தும் பாதிக்கப்படாமல் மேம்பட வேண்டுமானாலோ சகல தரப்பினரும் அடிப்படை சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என்பதை மறந்து போகக் கூடாது . 

நாளை ஆரம்பமாகும் பாடசாலைகளில் வெற்றிகரமான முன்னேற்றம் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களின் இணைந்த  செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்