வீரகத்தி தனபாலசிங்கம்

       

கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் சரித்திரத்தை மாற்றுவதற்கு பெரும் ஆர்வத்துடன் அரசியல் வாழ்வை தொடங்கிய இடதுசாரி தலைவர்களில் பலர் இரு தசாப்த காலத்திற்குள்ளாகவே அதே சரித்திரத்தின் கைதிகளாக மாறினார்கள்.அமைச்சர் பதவிகளின் ஊடாக பாராளுமன்ற அரசியல் அதிகாரத்தை அனுபவிப்பதற்கும் சந்தர்ப்பவாத அணுகுமுறைகளின் மூலமாக மக்களின் வாக்குகளை இலகுவாக பெறுவதற்கும் சரித்திரம் காட்டிய குறுக்குவழிகளினால் கவர்ந்திழுக்கப்பட்ட அவர்கள் தொடர்ச்சியான வர்க்க சமரச நடவடிக்கைகளின் மூலமாக இடதுசாரி இயக்கத்தை சரணாகதிப் பாதையில் வழிநடத்திச் சீரழித்தார்கள்.

   

இலங்கையில் இடதுசாரி இயக்கத்தின் இன்றைய அவல  நிலைக்கு அந்த தலைவர்கள் ஆற்றிய அபகீர்த்திமிக்க பங்கை தொழிலாளர் வர்க்கம் ஒருபோதும் மன்னிக்காது.ஆனால், அத்தகைய சந்தர்ப்பவாத -- சரணாகதிப் போக்குகளினால் தீண்டப்படாதவராக தமது இறுதி மூச்சுவரை விதிவிலக்காக விளங்கிய சில இடதுசாரி தலைவர்களும் இருந்தார்கள். அவர்களில் இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான ' சண் ' என்று பிரபலமாக அறியப்பட்ட நாகலிங்கம் சண்முகதாசன் முக்கியமாக நினைவுகூரப்படவேண்டியவர். நாட்டில் மாவோவாத இயக்கத்தின் முன்னோடியாக விளங்கிய நாகலிங்கம் சண்முகதாசனின் பிறந்ததின நூற்றாண்டு நிறைவு நினைவு ஜூலை 3, 2020.

     

 யாழ்ப்பாணத்தில் மானிப்பாயில் 3 ஜூலை 1920 பிறந்த சணமுகதாசன் கொழும்பு பல்கலைக்கழக கல்லூரியில் படித்தகாலத்தில் ஒரு மாணவர் தலைவராக செயற்பட்டவர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்ட (1943 ஜுலை 3) இருவாரங்களில் பல்கலைக்கழக இறுதிப்பரீட்சையை எழுதிமுடித்தகையோடு அந்தக் கட்சியின் முழுநேர அரசியலில் இணைந்த சண்முகதாசனின் வாழ்க்கை இலங்கையின் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றுடன் சமாந்தரமானதாகும்.

இலங்கையில் மிகவும் மதிக்கத்தக்க மார்க்சிய அறிவுஜீவியாக விளங்கிய சண்முகதாசன் நாடுபூராவும் இருந்த பொதுவுடமைவாத செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் பல சந்ததியினருக்கு அரசியல் ஆசானாகவும் அறிவுரையாளராகவும் செயற்பட்டு மார்க்சிய ஆய்வுமுறையின் வழியாக உலக நிகழ்வுப்போக்குகளை நோக்கி தெளிவுபெறும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தார்.1950 களின் பிற்பகுதியில் இருந்து தொடர்ச்சியாக சுமார் மூன்று தசாப்தங்களாக தலைநகர் கொழும்பிலும் நாட்டின் பல பகுதிகளிலும் அவரின் அரசியல் வகுப்புகளுக்கு படையெடுத்தவர்களின் எண்ணிக்கை எமது காலத்தின் மகத்தான இயங்கியல்வாதிகளில் சண்முகதாசன் முக்கியமானவர் என்பதற்கு ஒரு சான்றாகும்.

கோட்பாட்டுப் போராட்டங்கள்

  

 இலங்கையில் வேறு எந்தவொரு இடதுசாரி தலைவரையும் விடவும் அவர் மார்க்சியம் -- லெனினிசத்தின் அடிப்படைக்கூறுகளை மக்கள் மத்தியில் போதித்துப்  பரப்புவதற்கு மிகவும் கூடுதலானளவுக்கு பங்களிப்பைச் செய்தவர் என்பதை  எவராலுமே நிராகரிக்க முடியாது.ரொட்ஸ்கியவாதம், சீர்திருத்தவாதம், நவீன திரிபுவாதம் ஆகியவற்றுக்கு எதிராக சண்முகநாதன் நடத்திய இடையறாத -- விட்டுக்கொடுப்பற்ற கோட்பாட்டுப் போராட்டங்கள் அவரது மகத்தான தகுதிகளில் ஒன்றாகும்.

  

 இலங்கையின் எந்தவொரு ரொட்ஸ்கியவாதியுமே கோட்பாட்டு அடிப்படையிலான வாதங்களில் சண்முகதாசனை அண்மித்தது கூட கிடையாது. மாஸ்கோ சார்பு கம்யூனிஸ்டுகள் அவருடன் கோட்பாட்டு வாதப்பிரதிவாதங்களில் நேரடியாக ஈடுபடுவதை அந்த காலத்தில்  பெருமளவுக்கு தவிர்த்தார்கள் எனலாம்.

    

 அந்த வகையில் மார்க்சியப் போதனைகளை அவற்றின் அடிப்படை உணர்வுகளுடன் முன்னெடுப்பதிலும் தனது கட்சி உறுப்பினர்களும்  தொண்டர்களும் அரசியல் ரீதியில் பெற்றிருக்கவேண்டிய தெளிவிலும் அவர் காட்டிய அளவுகடந்த அக்கறை என்றென்றைக்கும் முன்னுதாரணமாகக் கொள்ளககூடியதாகும்.

 

 இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்துக்கு தலைமைதாங்கிய அவர் 1947 பொதுவேலைநிறுத்தம், 1953 ஹர்த்தால் மற்றும் 1955 போக்குவரத்து வேலைநிறுத்தம் உட்பட பல்வேறு தொழிற்சங்கப்போராட்டங்களில் முக்கியமான பங்காற்றினார்.கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழுவில் சீன ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு உறுப்பினராக விளங்கிய சண்முகதாசன் 1963 மேயில் பேச்சுக்களுக்காக பீக்கிங் சென்று நாடுதிரும்பிய பின்னர் சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுவாதப்போக்கிற்கு எதிராக கிளம்பியதையடுத்து கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

    

 ஆனால், சீன - சோவியத் தகராறுக்கு முன்னதாகவே இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்குள் முரண்பாடுகள் கிளம்பியிருந்தன என்று கூறப்பட்டது.கட்சி பாராளுமன்றப் பாதையில் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தமையும் லங்கா சமாசமாஜ கட்சியுடன் சேர்ந்து ஐக்கிய இடதுசாரி முன்னணியை அமைத்து செயற்பட்டமையும் கட்சிக்குள் நிலவிய முரண்பாடுகளுக்கு பிரதான காரணமாகும். கட்சியின் தலைமைத்துவத்தின்  அந்த போக்குகளுக்கு எதிராக கிளம்பியவர்கள் சண்முகதாசனுடன் ஒன்றிணைந்தார்கள்.திரிபுவாத வேலைத்திட்டத்தின் முன்னணி எதிர்ப்பாளரான அவர், பாராளுமன்ற ஐக்கிய முன்னணியொன்றை கட்டியெழுப்புவது ஒரு மாயையாகும்  என்றும் நவகாலனித்துவக் கட்டமைப்புக்களுக்கு எதிராக இடையறாத தீவிர போராட்டமே நாட்டுக்கு விடிவைத்தரும் என்றும் வாதிட்டார். திரிபுவாத எதிர்ப்புச்சக்திகள் சமாசமாஜ கட்சியுடனான ஐக்கிய  முன்னணியை  கடுமையாக எதிர்த்தார்கள் ;  அந்த முன்னணி 18 மாதங்களில் --- சமசமாஜிகள் கம்யூனிஸ்ட் கட்சியைக் கைவிட்டு திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டு முன்னணியில் பிரவேசித்ததையடுத்து ---- வீழ்ச்சியடைந்தது.

    

 மார்க்சிசம் - லெனினிசத்துக்கு துரோகமிழைத்தமைக்காக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைத்துவத்தை கண்டனம் செய்து மத்திய குழுவின் 6 உறுப்பினர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டபோது 1963 நடுப்பகுதியில் உள்கட்சி எதிர்ப்பு தீவிரமடைந்தது.நீண்டகாலமாக தாமதிக்கப்பட்டுவந்த கட்சியின் 7வது மகாநாட்டை  கூட்டுமாறு 100 க்கும் அதிகமான ஆதரவாளர்களின் கூட்டம் ஒன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது.கட்சியின் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும் திரிபுவாதத்திலிருந்து விடுபடுவதற்காகவே அந்தக் கோரிக்கை.

   

  கட்சிக்குள் இருந்த உண்மையான மார்க்சிச - லெனினிச குழுக்கள் மகாநாட்டுக்கு பேராளர்களை அனுப்பவேண்டும் என்று அழைப்பு விடுத்து பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டது.கட்சிக்குள் நிலவிய தகராறுக்கு முடிவைக்காண்பதற்கு உடனடியாக மகாநாட்டைக் கூட்டுமாறு மாவட்டக்குழுக்களில் பெரும்பான்மையானவை விடுத்த கோரிக்கையையும் கட்சி உறுப்பினர்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்களின்  எழுத்துமூல வேண்டுகோளையும் கருத்தில் எடுக்க மறுத்தமை உட்பட 12 அம்சக் குற்றச்சாட்டுகள் தலைமைத்துவத்துக்கு எதிராக முன்வைக்கப்படடன.

கட்சிப் பிளவு

 தாபிப்பதற்கும் கட்டியெழுப்புவதற்கும் தான் உதவிய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து ஜனநாயக விரோதமாகவும் யாப்புக்கு மாறாகவும் தன்னை யாப்பின் பிரகாரம் பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் கூட அதிகாரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் சிறிய குழுவொன்று வெளியேற்றிவிட்டதாக சண்முகதாசன் 1963 அக்டோபர் 28 அறிக்கையொன்றை வெளியிட்டார்.ஆனால், போராட்டம் தொடரும் என்பதை தெளிவாகக் குறிப்பிட்ட அவர் நான்கு  உடனடிப்பணிகளை அறிவித்தார்.

  

    

(1) தரமான பல மார்க்சிய நூல்களை உடனடியாக சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிடுதல் (2) கம்கறுவவையும் தொழிலாளியையும் ( இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் ' The Worker' பத்திரிகையின் சிங்கள மற்றும் தமிழ் பதிப்புகள் ) நல்ல தரமான தொழிலாளர் வர்க்க வாரப்பத்திரிகைகளாக வெளியிட்டு ஒரு வருடத்திற்குள் தினப்பத்திரிகைகளாக மாற்றுதல் (3) சிங்களத்திலும் தமிழிலும் தரமான மார்க்சிய கோட்பாட்டு  சஞ்சிகைகளை வெளியிடுதல் (4) தொழிற்சங்க இயக்கத்தின் ஐக்கியத்தை கட்டியெழுப்பி சாத்தியமானளவு விரைவாக ஐக்கிய தொழிற்சங்க மத்திய நிலையம் ஒன்றை நிறுவுதல் (5) விவசாயிகளை அணிதிரட்டி தொழிலாளர் -- விவசாயிகள் கூட்டணியொன்றை ஒழுங்கமைத்தல் ஆகியவையே அந்த உடனடிப்பணிகளாகும்.

    

   

1964 ஜனவரி 21 முடிவடைந்த மூன்று நாள் மகாநாட்டில் கட்சியின் பிளவு முழுமையடைந்தது.சண்முகதாசன் மற்றும்   கட்சியின் சிங்கள  வாரப்பத்திரிகையின் ஆசிரியர் பிரேமலால் குமாரசிறி தலைமையிலான சீனச்சார்பு சக்திகள் உத்தியோகபூர்வ கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுவாத மற்றும் சோவியத் சார்புக் கொள்கைகளை மறுதலித்ததுடன் தலைவர் டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்கவினதும் பொதுச்செயலாளர் பீற்றர் கெனமனினதும் தலைமைத்துவத்தை நிராகரிக்க ஒரு மத்தியகுழுவையும் தெரிவுசெய்தன.

    

     

கொழும்பு மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் திரிபுவாதிகளுக்கு எதிராக துணிச்சலுடன் போராடி, ஸ்ராலினின் நினைவை மதிக்கின்றமைக்காகவும் மார்க்சியம்  -- லெனினிசத்தின் அடிப்படைக் கோட்பாட்டுக்கூறுகளை மாற்றியமைத்து அவற்றில் உள்ள புரட்சிகர உள்ளடக்கத்தை சூறையாடுவதற்கு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைத்துவம் மேற்கொண்ட முயற்சிகளை கண்டனம் செய்து யூகோஸ்லாவிய கம்யூனிஸ்ட்  லீக்கின் பாதையைப் பின்பற்றுகின்றமைக்காக அல்பேனியர்களை பாராட்டியது.

   

ஆயுதப்போராட்டத்தை நியாயப்படுத்தல்

 அவ்வாறாக பிறந்த புதிய கட்சி மாஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வேறுபடுத்திக்காட்டுவதற்காக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ( பீக்கிங் ) என்று அழைக்கப்பட்டது.தீவிர போக்கிற்காகவும் பெரிய எதிர்ப்புப் போராட்டங்களுக்காகவும் அந்த கட்சி பெயரெடுத்தது.தொழிற்சங்க இயக்கத்தில் ஒரு ஆதரவுத்தளத்தை -- குறிப்பாக, இலங்கை தோட்டத்தொழிலாளர் சங்கத்திலும் இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைமைத்துவத்திலும் --  பேணிவந்த புதிய கட்சி பழைய கட்சியின் வாலிபர் சங்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்களை தன்பக்கம் வென்றெடுத்தது. ஆயுதபோராட்டத்தை நியாயப்படுத்திய கட்சி ஒருபோதும் அதை தேசிய அளவில் நடைமுறையில் செய்ததில்லை.ஆனால், தமிழர்களின் போராட்டத்தில் தீவிரவாத இயக்கங்கள் மீது அது செல்வாக்கைச் செலுத்தியது.

ஆனால் இலங்கையில் நடந்த சமூகநீதிக்கான போராட்டங்களில் அதன் இலக்கை முழுமையாக வென்ற ஒரே போராட்டம் தீண்டாமை எதிர்ப்பு வெகுசன இயக்கத்தினால் வடக்கில் 1966 அக்டோரில் முன்னெடுக்கப்பட்ட போராட்டமாகும். அதுவே இதுவரை நடந்த ஆயுத எழுச்சிகளில் தோல்வியின்றி முடிந்த ஒரே எழுச்சியுமாகும். அதை இயலுமாக்கியதில் மார்க்சிய - லெனினிய - மாஓசேதுங் சிந்தனை வழியில் சண்முகதாசன் வழங்கிய தலைமைத்துவம் முக்கியமானதாகும்.

 இலங்கையில் புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு சண்முகதாசன் செய்திருக்கக்கூடிய பங்களிப்பு குறித்து அரசியல் சரித்திரவியலாளர்கள், மார்க்சிய அறிவுஜீவிகள் மற்றும் இடதுசாரி இயக்கத்தவர்கள் மத்தியில் பல முனைகளில் வாதப்பிரதிவாதங்களும் சர்ச்சைகளும் மூண்டிருந்தன என்றபோதிலும், இந்நாட்டில் மாவோவாத இயக்கத்தை முன்னெடுத்து தலைமைதாங்கி வழிநடத்தியதில் அவர் ஆற்றிய முதன்மையான பங்களிப்பு குறித்து மாற்றுக்கருத்துக்கு  இடமில்லை.

  சண்முகதாசனின் நெருங்கிய நண்பரும் இலங்கையின் தலைசிறந்த ஆங்கில பத்திரிகை ஆசிரியருமான மேர்வின் டி சில்வா மாவோ சே-துங் சிந்தனை மீது  அவர் கொண்டிருந்த உறுதியான நம்பிக்கை குறித்து எழுதிய ஒரு சந்தர்ப்பத்தில் ' மாவோ சே -- சண் ' நகைத்திறத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

   

கலாசாரப் புரட்சியின்போது சீனாவுக்கு விஜயம் செய்த சண்முகதாசன் ஆயிரக்கணக்கான செங்காவலர்கள் மத்தியில் முக்கிய உரை நிகழ்த்தினார்.' மாவோ சேதுங் சிந்தனையின் பிரகாசமான செம்பதாகை ' (The Bright Red Banner  of Mao Tse -tung Thought ) என்ற பிரசுரத்தில் மார்க்சிசம் -லெனினிசம் -மாவோ சேதுங் சிந்தனையை மேம்படுத்தி அவர் எழுதிய பல வாதப்பிரதிவாதங்கள் சர்வதேச வாசகர்களைக் கொண்டிருந்தது.சர்வதேச அரங்கில் சண்முகதாசன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் -- லெனினிஸ்ட் ) போன்ற ஏனைய கட்சிகளுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒரு தொடர்பாடல் பாத்திரத்தை வகித்தார்.அல்பேனியாவுக்கும் சீனாவுக்கும் கட்சி மகாநாடுகளுக்காக சென்ற அவர் இந்திய மாவோயிஸ்ட் இயக்கத்துடன் ( Naxalite Movement) தொடர்புகளைப் பேணினார்.

ஜே.வி.பி கிளர்ச்சி

  ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) கிளர்ச்சியைத் தொடர்ந்து புரட்சிவாதிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் ஒடுக்குமுறையின்போது 1971 ஆம் ஆண்டில் கைதுசெய்யப்பட்ட சண்முகதாசன் ஒரு வருடகாலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். ஜே.வி.பி.யின் நடவடிக்கைகளை சண்முகதாசன் கடுமையாக விமர்சித்தார் என்றாலும், அவரது தலைமையிலான கட்சிக்குள் ஒரு பிரிவாகவே ஜே.வி.பி.முளையெடுத்தது.ஆயுதப்போராட்டத்தை நியாயப்படுத்தியமைக்காகவும் ஜே.வி.பி.யின் தாபகத்தலைவரான ரோஹண விஜேவீரவின் அரசியல் ஆசான்களில் ஒருவராக இருந்தமைக்காகவுமே சண்முகதாசனை அரசாங்கம் இலக்குவைத்தது.தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில் அவர் ' ஒரு மார்க்சியவாதியின் பார்வையில் இலங்கையின் சரித்திரம் ' (A Marxist Looks at the History of Ceylon ) என்ற நூலை எழுதினார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த நூல் பிறகு தமிழிலும் சிங்களத்திலும் வெளியிடப்பட்டது.

    

1971 கிளர்ச்சியின் தோல்வியைத் தொடர்ந்து திருமதி பண்டாரநாயக்கவின் அரசாங்கத்துக்கு சீன அரசாங்கம் வழங்கிய ஆதரவின் காரணமாக கம்யூனிஸ்ட் கட்சி ( பீக்கிங்) அரசியல் ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டது.சண்முகதாசன் வெளிநாட்டில் இருந்தவேளையில் கட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்றுவதற்கு சில குழுக்கள் முயற்சிகளை மேற்கொண்டன.1972 செப்டெம்பரில் அவர் நாடு திரும்பியதும் அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. அதையடுத்து கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட முக்கிய உறுப்பினர்கள் சிலர் தனியான கட்சியை வேறு பெயரில் உருவாக்கினர்.அந்த புதிய கட்சியும் நாளடைவில் பல கூறுகளாக பிரிந்தது.அவற்றில் பல திருமதி பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் கொள்கைகளை ஆதரித்த அதேவேளை, கம்யூனிஸ்ட் கட்சி ( பீக்கிங் ) தொடர்ந்து தீவிரமான போராட்டப்பாதையையை பின்பற்றியது.

 

 மாவோ மறைவிற்குப் பிறகு

  1976 ஆம் ஆண்டில் மாவோ சே-துங் மரணமடைந்த பிறகு, அவரின் கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றிய ' சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நால்வர் குழு ' வும் வீழ்ச்சி கண்டது.சணமுகதாசனை விட்டுப்பிரிந்தவர்களின் பல குழுக்கள் தொடர்ந்தும் சீனாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக்கொள்கைகளை ஆதரித்த அதேவேளை, சண்முகதாசனின் கம்யூனிஸ்ட் கட்சி மாவோவினதும் கலாசாரப்புரட்சியினதும் மரபை உறுதியாக ஆதரித்து நின்றது. புரட்சிகர சர்வதேசிய இயக்கத்தை (Revolutionary Internationalist Movement) தாபிப்பதில் தீவிரமாக செயற்பட்ட சண்முகதாசன், மாவோவை அல்பேனிய கம்யூனிஸ்ட் தலைவர் அன்வர் ஹோஷா நிராகரித்ததை அடுத்து அவரது நிலைப்பாடுகளுக்கு எதிராக வாதங்களை முன்வைத்து மாவோவின் கொள்கைகளை உறுதியாக நியாயப்படுத்தினார்.' அன்வர் ஹோஷா மறுதலிப்பு ' (நுnஎநச ர்ழஒhய சுநகரவநன) என்ற தலைப்பிலான நூலை புரட்சிகர சர்வதேசிய இயக்கம் வெளியிடுவதற்கு காரணகர்த்தராக சண்முகதாசன் விளங்கினார்.

   

1991 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி ( பீக்கிங் ) புனரமைக்கப்பட்டு ' இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ( மாவோயிஸ்ட் ) என்று மாற்றப்பட்டது.1993 ஆம் ஆண்டில் மரணமடையும் வரை அந்த கட்சியை சண்முகதாசன் தலைமைதாங்கி வழிநடத்தினார். அவர் இறுதியாக கலந்துகொண்ட பகிரங்க அரசியல் நிகழ்வு சிறையில் அடைக்கப்பட்டிருந்த  தென்னமெரிக்க நாடான  பெரூவின்   மாவோவாத  கம்யூனிஸ்ட் கட்சியின் ( Communist Party of  Peru -- Shining Path)தலைவர் கொன்சாலோவை ( டாக்டர் அபிமால் குஸ்மான்) ஆதரித்து லண்டனில் புரட்சிகர சர்வதேசிய இயக்கத்தின் அவசரகால கமிட்டியினால் ( International Emergency Committee)நடத்தப்பட்ட முதலாவது செய்தியாளர் மாகாநாடேயாகும்.

 மருத்துவ சிகிச்சைக்காக இங்கிலாந்து  சென்று  அக்கியூபங்சர் மருத்துவ நிபுணரான மகளுடன் தங்கியிருந்தவேளையில் சண்முகதாசன் தனது 74 வது வயதில் 1993 பெப்ரவரி 8 காலமானார்.

 

 27 வருடங்களுக்கு முன்னர் அவரது மறைவையடுத்து 'சண்டே ஐலண்ட்' பத்திரிகையில் அதன் அப்போதைய ஆசிரியராக இருந்த தலைசிறந்த பத்திரிகையாளர் அஜித் சமரநாயக்க ' The Last Salute of A Revolutionary'  என்ற தலைப்பில் எழுதிய நீண்ட கட்டுரையின் சில பகுதிகளை நினைவுபடுத்துவது பொருத்தமானதாகும்.

    

சண்முகதாசனின் மரணம் அவர் காரணமாகவே ஒளிர்ந்துகொண்டிருந்த ஒரு சுடரை அணைத்துவிட்டது.கடந்த பல வருடங்களாக அச்சுடர் வெறுமனே மினுங்கிக்கொண்டிருந்ததென்றால், அதற்கு முறாறிலும் அவரின் முயற்சிகளே காரணமாயிருந்தன எனலாம்.

  

தனது சுயசரிதையில் ( Political Memoirs of An Unrepentant Communist )தன்னை பச்சாதாபப்படாத ஒரு கம்யூனிஸ்ட் என்று உரிமைகோரிய அந்த மனிதர் பச்சாதாபப்படாத ஒரு ஸ்டாலினிசவாதியுமாவார்.தன்னைச் சுற்றியிருந்த உலகில் கம்யூனிசம் வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கையில் ஸ்டாலினதும் மாவோ சேதுங்கினதும் நினைவுகளை மக்கள் மனதில் உயிர்த்துடிப்புடன் நிலைத்திருக்க வகைசெய்தவர் சண்முகதாசன். ஸ்டாலினுக்கு பிறகு அவரது கொள்கைகளை உறுதியாக பின்பற்றிய ஒருவராக தர்க்கரீதியாக மாவோவையே சண்முகதாசன் நம்பினார்.

  

சண் இலங்கையின் முதன்மையான மாவோவாதி.அபூர்வமான நேர்மைகொண்ட கம்யூனிஸ்ட். சமுதாயத்தின் வர்க்க எல்லைக்கோட்டை அவர் ஒருபோதும் கடந்ததில்லை ;இளமைக்காலத்தில் தன்னுடன் வரித்துக்கொண்ட அரசியல் நம்பிக்கையை ஒருபோதும் கைவிட்டதில்லை.இந்த வருடம் ( 1993 ) அவரின் அரசியல் வாழ்வுக்கு 50வயது.தான் நேசித்த கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் அவர் இவ்வருடமே விடைகொடுத்துவிட்டார்.

உலகில் சோசலிசம் கண்ட பின்னடைவு,செயிழந்துபோன  தனது கட்சி ஆகியவை காரணமாக தனது கொந்தளிப்பான வாழ்க்கையின் இறுதிப்பகுதியில் சண்முகதாசன் உண்மையாகவே ஒரு அரசியல் உறங்குநிலைக்கே சென்றார் எனலாம்.ஆனால், அவர் ஒருபோதுமே மெத்தனமாகவோ அல்லது செயலற்றுப்போகவோ இல்லை.கொழும்பு கொள்ளுப்பிட்டியில் ஸ்கொபீல்ட் பிளேஸில் இருந்த தனது மாடிவீட்டிலிருந்தவாறு இலங்கையினதும் வெளியுலகினதும் அரசியல் நிகழ்வுப்போக்குகளை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டேயிருந்தார்.வாசித்தார்.எழுதினார்.கடிதத்தொடர்புகளைப் பேணினார்.

   

 சண்முகதாசனின் அரசியல் வாழ்வில் தனியொரு மிகப்பெரிய துன்பியல் நிகழ்வு அவர் நியாயப்படுத்திய ஆயுதப்புரட்சியை அவரால் போசித்து வளர்க்கப்பட்டவர்களே சீர்குலைத்தமையாகும்.வன்முறைப் போராட்டம் மூலமாக அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதை சண்முகதாசன் நியாயப்படுத்தினார்.அதைச் செய்வதற்கு விஜேவீர திரிபுபடுத்தப்பட்ட  பல்வேறு வடிவங்களில் இரு தடவைகள் முயற்சித்தார்.ஆனால், 50 வருடகால புரட்சிகர அரசியல் வாழ்வில் அந்த ஆயுதப்புரட்சி இலட்சியத்துக்காக சண்முதாசன் உறுதியாக நின்றார்.74 வருடங்கள் உலகில் வாழ்ந்த அவர் இளம் வயதில் பட்டதாரியாக வெளியேறிய காலத்திலிருந்து தனக்கு கிடைத்திருக்கக்கூடிய சௌகரியமான வாழ்க்கை வசதிகள் சகலவற்றையுமே துறந்தார்.இதுவே அந்த மனிதரைப் பற்றி அளந்தறிவதற்கு போதுமானதாகும்.

    

ஒரு தொழிற்சங்கவாதி என்ற வகையில் தொழிலாளர் இயக்கத்தின் ஒரு போதனையாளர் என்ற வகையில்,  முன்னுதாரணமாகத் திகழ்ந்த தலைவர் என்ற வகையில் சண்முகதாசனின் பங்களிப்புகள் அளப்பரியனவாகும். அரசியல் குள்ளர்களினதும் அற்பர்களினதும் காலத்துக்கேற்ப கருத்தை மாற்றிக்கொள்ளும் சந்தர்ப்பவாதிகளினதும் ஒத்தூதுபவர்களினதும் தாயகமாக மாறிவரும் ஒரு மண்ணில் சண்முகதாசன் போன்ற மனிதர்கள் மீண்டும் பிறப்பதென்பது நடவாத காரியமாகும்.போராட்ட வாழ்க்கையை முன்னெடுத்த அவர் இறுதிவரை அவ்வாறே வாழ்ந்தார்.தன்னைச் சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் பின்வாங்கிச்செல்ல தனது நிலைப்பாட்டிலிருந்து விலக அவர் மறுத்தார்.இவை போன்ற நினைவுகளே காவியங்களைப் படைக்கின்றன.