-என்.கண்ணன்

அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடன், செய்து கொள்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள 480 மில்லியன் டொலர் கொடை உடன்பாடு இப்போது அரசியலில் முக்கியமான பேசுபொருளாக மாறியிருக்கிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் இந்த உடன்பாட்டைக் கிழித்தெறியப் போவதாகவும்,  இது நாட்டைக் காட்டிக் கொடுக்கும் உடன்பாடு என்றும், பிரசாரம் செய்து ஆட்சியைப் பிடித்திருந்தது பொதுஜன பெரமுன.

ஆயினும், கோத்தாபய ராஜபக்ச பதவிக்கு வந்து 7 மாதங்கள் கடந்து விட்ட போதும், எம்.சி.சி நிறுவனத்தினால் முன்மொழியப்பட்டுள்ள இந்த கொடை உடன்பாடு குறித்த தெளிவான முடிவை அறிவிக்காமல் இருக்கிறது அரசாங்கம்.

கோத்தாபய ராஜபக்ச பதவிக்கு வந்ததும், உடனடியாக இந்த உடன்பாட்டை நிராகரிக்க முடியாது என்று கூறி, இது குறித்து மீளாய்வு செய்வதற்கு குழுவொன்றை நியமித்தார்.

அந்த நிபுணர் குழுவும் அரசாங்கத்தின் தேவைக்கேற்ப, அறிக்கையைக் கொடுத்துள்ளது.

நிபுணர்குழு அளித்துள்ள பரிந்துரைகள் மற்றும் அறிக்கையின்படி,  எம்.சி.சி உடன்பாடு மோசமானது, நாட்டின் இறைமைக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.

எனினும், இந்த உடன்பாடு தொடர்பாக முடிவெடுப்பதில்  அரசாங்கம் திணறிக் கொண்டிப்பதாக செய்திகள் கூறுகின்றன.

நிபுணர் குழு அறிக்கை, ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டு விட்ட  அடுத்தடுத்த நாட்களிலேயே, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

Foreign Minister briefs US Secretary of State on MCC Review Report

இதன்போது, எம்.சி.சி உடன்பாடு குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சு கூறியிருக்கின்ற போதும், அதுபற்றி மேலதிக விளக்கங்கள் எதையும் கூறவில்லை.

அதாவது, இந்த உடன்பாடு ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல, இதில் கையெழுத்திட முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் கூறவில்லை. 

அதுபோலவே, இந்த உடன்பாட்டை ஏற்றுக் கொண்டதாகவும், அவர் கூறியதாக தெரியவில்லை.

ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்து, அரசாங்கம் இந்த விவகாரத்தை இழுத்தடித்துச் செல்ல முனைவதாகவே தோன்றுகிறது.

கடந்த மே 8ஆம் திகதி, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிரெய்ன், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியிருந்தார்.

US National Security Advisor calls on President Gotabaya Rajapaksa

அதன்போது, எம்சிசி உடன்பாட்டில் கையெழுத்திட முடியாது என்று ஜனாதிபதி தெளிவாக கூறிவிட்டார் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறியிருந்தார்.

எனினும், அமெரிக்க அல்லது இலங்கை அரசின் அதிகாரபூர்வ அறிக்கைகளில் அதுபற்றி எதுவும் கூறப்பட்டிருக்கவில்லை.

எம்.சி.சி உடன்பாட்டில் கையெழுத்திடாது அரசாங்கம் என்று விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, போன்றவர்கள் கூறிக் கொண்டிருந்தாலும், அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்கள் அதுபற்றி தெளிவான முடிவை அறிவிக்கத் தயங்குகின்றனர்.

அவர்கள் யாரும் இந்த உடன்பாட்டை நிராகரிப்பதாக திடமாக அறிவிக்கவில்லை. அவ்வாறான திடமான அறிவிப்பை வெளியிடாமல் இருப்பதற்கு காரணம் என்ன?

ஜே.வி.பி போன்ற எதிர்க்கட்சிகள்  கூறுவது போல எம்.சி.சி உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறதா?

எம்.சி.சி உடன்பாட்டை கிழித்தெறிவோம் என்றவர்கள், அமெரிக்காவுடன் உடன்பாட்டில் கையெழுத்திடவுள்ளனர் என்று கூறப்படும் குற்றச்சாட்டை அரசாங்கத் தரப்பில் உள்ள சிலர் நிராகரிக்கிறார்கள்.

பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, எம்.சி.சி உடன்பாடு குறித்து விரைவில் அரசாங்கம் முடிவெடுக்கும் என்று கூறியிருந்தார்.

தேர்தலுக்கு முன்னதாக அரசாங்கம் இதுபற்றி அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் எம்சிசி உடன்பாட்டை பூதாகாரப்படுத்தி வாக்குகளை சுருட்டிக் கொண்ட ஆளும்தரப்பு மீண்டும் இந்த தேர்தலிலும் அவ்வாறான ஒரு நகர்வை முன்னெடுக்கலாம் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஆனாலும், அவ்வாறு அரசாங்கம் முடிவெடுக்குமா - அதற்கான சாத்தியங்கள் உள்ளதா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

கடந்த புதன்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், டி.வி.சானக, வெளியிட்டுள்ள கருத்துக்கள் இதனை உறுதி செய்வதாக உள்ளது.

எம்.சி.சி உடன்பாட்டில் இருந்து அவ்வளவு இலகுவாக விலகிக் கொள்ள முடியாது என்றும், அமெரிக்கா போன்ற வல்லமை மிக்க நாடுகளுடனான உடன்பாடுகளில் இருந்து சடுதியாக விலகிக் கொள்ள முனைந்தால், ஆபத்து என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதிலிருந்து அரசாங்கம் எம்.சி.சி உடன்பாட்டில், கையெழுத்திடுவதற்கு எந்தளவுக்கு தயங்குகிறதோ- அதேயளவுக்கு, அந்த உடன்பாட்டில் இருந்து விலகிக் கொள்வதற்கும் தயங்குகிறது என்பது உறுதியாகிறது.

அமெரிக்கா போன்ற வல்லமை மிக்க நாடுகளுடன், செயற்படும் போது, கையாள வேண்டிய நில நடைமுறைகள் உள்ளன என்றும் டி.வி சானக கூறியிருப்பது கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்து.

அவர் இதனை, எம்.சி.சி உடன்பாட்டில் இருந்து விலகுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை நியாயப்படுத்துவதற்காக கூறியிருக்கிறாரா அல்லது, உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறாரா என்றும் பார்க்க வேண்டும்.

எம்சி.சி உடன்பாட்டு மீளாய்வுக் குழுவின் தலைவர், பேராசிரியர் குணருவன், தமது அறிக்கையை கையளித்த போது, ஏற்கனவே இரண்டு உடன்பாடுகளின் மூலம் முன்னைய அரசாங்கம் 10 மில்லியன் டொலரை அமெரிக்காவிடம் இருந்து வாங்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

The final report of the four member Committee appointed to review the proposed Millennium Challenge Corporation Compact (MCC) Agreement was handed over to President Gotabaya Rajapaksa at the Presidential Secretariat yesterday. Chairperson of the Committee Prof. Lalithasiri Gunaruwan handing over a copy of the report in the presence of the other members of the committee. (President’s Media)

ஆனால் உடனடியாகவே, அமெரிக்கா அவ்வாறான உடன்பாடு கையெழுத்திடப்படவோ அல்லது நிதி வழங்கப்படவோ இல்லை என்று கூறியிருந்தது.

எவ்வாறாயினும், 10 மில்லியன் டொலர் நிதி பெறப்பட்டதற்கு கணக்கு காட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் அவர்.

அந்தக் குற்றச்சாட்டை வைத்துக் கொண்டு இழுத்தடிப்பை நியாயப்படுத்தும் செயற்பாட்டில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது.

ஏற்கனவே எம்சிசியிடம் இருந்து 10 மில்லியன் டொலரை முன்னைய அரசாங்கம் பெற்று விட்டது என்றும், இவ்வாறான நிலையில் அந்த உடன்பாட்டில் இருந்து விலகிக் கொள்வது ஆபத்தானது என்றும் டி.வி சானக கூறியிருக்கிறார்.

அவ்வாறு விலகினால் அமெரிக்கா சர்வதேச நீதிமன்றங்களுக்குக் கூட செல்ல முடியும் என்று அவர் பயங்காட்ட முனைந்திருக்கிறார்.

சிங்கள பௌத்த மக்களில் பெரும்பான்மையினருக்கு சர்வதேச நீதிமன்றம் என்றாலே பதற்றம் தொற்றிக் கொள்கிறது. அந்த பலவீனத்தை பயன்படுத்தி, அவர்களுக்கு பூச்சாண்டி காட்ட முற்படுகிறது அரச தரப்பு.

எம்.சி.சி உடன்பாட்டை பூதாகாரப்படுத்தி பயமுறுத்திய அரசாங்கம், அதிலிருந்து விலகிக் கொள்ளவும் தயாரில்லை. இவ்வாறான நிலையில் தான், புதுப்புதுப் பூச்சாண்டிகளைக் காட்டி ஏமாற்றப் பார்க்கிறது.

தேர்தல் வேளையில் சிங்கள பௌத்த வாக்குகளை பெறுவதற்கு அமெரிக்க, இந்திய எதிர்ப்பை வெளிப்படுத்துவது ஒரு உத்தியாக கையாளப்படுகிறது.

இவ்வாறான நிலையில், அரசாங்கம் எம்.சி.சி உடன்பாடு விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கிறதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

கடந்த முறை இந்த உடன்பாட்டுக்கு எதிரான உணர்வலைகளைக் கிளப்பி வாக்குகளைப் பெற்றிருந்தாலும், இம்முறை இந்த உடன்பாட்டை நிராகரித்து வாக்குகளை திரட்டக் கூடிய நிலையில் இல்லை போலவே தெரிகிறது.

அவ்வாறான நிலை ஒன்று ஏற்பட்டால் எம்.சி.சி விவகாரம் அரசாங்கத்துக்கு ஒரு பின்னடைவாகவே அமையும்.

ஏனென்றால், எம்சிசியை பயங்கரமன பூதமாக காண்பித்து விட்டு, அதனை வெறும் பூச்சாண்டியாக  அடையாளப்படுத்த முனைந்தால், சிங்கள மக்களை வெறுப்படையச் செய்யும்.