கிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டு, யானைஉண்ட விளாம்பழம் போல வெறுமையான கோதாக கூட்டமைப்பு தேர்தல் களத்தில் நிற்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம்சாட்டினார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தேர்தல் காலங்களில் ஒன்றைக்கூறிவிட்டு அதற்கு எதிராக செயற்பட்டதன் காரணத்தாலேயே தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருக்காமல் வெளியேறினோம். 

கடந்த அரசுக்கு கால அவகாசத்தை கூட்டமைப்பு வழங்கியதன் மூலம் இன்று கலப்பு விசாரணையும் இல்லை சர்வதேச விசாரணையும் இல்லை. உள்ளகவிசாரணை எனஎதுவுமே இல்லாமல் நீர்த்துப்போகச்செய்யப்பட்டுள்ளது. இன்று அது தமிழ்மக்களை எங்கு நிறுத்தி இருக்கிறது என்பது உங்களுக்கு தெரிந்தவிடயம். 

கிடைத்த சந்தர்ப்பங்களை மக்களுக்காக பயன்படுத்தாமல் சுயலாப அரசியலுக்காக கூட்டமைப்பின் பெயரால் ஒரு சிலர் எடுத்துகொண்டதற்கான முடிவுதான் இது. 

இன்று கூட்டமைப்பு யானைஉண்ட விளாம்பழமாக வெறும் கோதாக  தேர்தல் களத்தில் நிற்கிறார்கள். எமது கட்சிக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக இணைந்த வடகிழக்கு மாகாண அரசை உருவாக்கியிருந்தோம். திருகோணமலையை தலைநகராக மாற்றியிருந்தோம். தற்போதும் புலம் பெயர் மக்களிடம் இருந்து நிதிகளை பெற்று கல்வி சுகாதாரம் வாழ்வாதாரம் போன்ற பல உதவிகளை எமது மக்களுக்கு வழங்கிவருகின்றோம். என்றார்.