-சுபத்ரா

ஐந்தும் ஐந்தும் எத்தனை என்றால், பத்து (10)  தான் பதில், ஆனால், ஐம்பத்தைந்து (55) என்கிறார் பிரதமர் மகிந்த ராஜபக்ச.

நாட்டில் உள்ள தேசியவாத முகாமை முற்றிலுமாக அழித்து, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம், இலங்கையின் பிளவுக்கு வழி செய்யும் நோக்கத்துடனேயே வெளிநாட்டு சக்திகள் இலங்கையில் தலையீடு செய்தன என்று, பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியிருக்கும் கருத்து, ஐந்தும் ஐந்தும்,  55 என்று பதில் கூறுவதற்குச் சமமானது.

Had Mahinda Rajapaksa run for president on 10 Feb, he would have ...

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், இலங்கை வெற்றி பெறும் என்று சர்வதேச சக்திகள் எதிர்பார்க்கவில்லை என்றும், போரில் வெற்றி பெற்றவுடன், இலங்கையில் வெளிநாடுகள் தலையீடு செய்ய ஆரம்பித்தன என்று அவர் கூறியிருக்கிறார்.

2010 ஜனாதிபதி தேர்தலிலேயே இந்த தலையீடு தொடங்கி விட்டதாகவும், அப்போது அதனை மக்கள் தோற்கடித்த நிலையில், 2015இல் ஆட்சி மாற்றத்தில் முடிந்தது என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கிறார்.

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள், எல்லாமே, தேசியவாத முகாமை முற்றிலுமாக அழித்து, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம் இலங்கையின் பிளவுக்கு வழிசெய்யும் நோக்கத்துடனேயே முன்னெடுக்கப்பட்டன என்றும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர், வெளிநாட்டு சக்திகளின் தலையீடு, நாட்டைப் பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரல் போன்ற விடயங்களில் பிரதமர் மகிந்த ராஜபக்ச மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட முயன்றிருக்கிறார்.

இது தேர்தல் காலம் என்பதால், தேசியவாத சக்திகளின் தலைமையாக  தன்னையும், அதற்கு எதிரானவர்களாக எதிர்க்கட்சியினரையும், உருவகப்படுத்திக் கொண்டு வாக்குகளைச் சுருட்டிக் கொள்ள அவர் முற்பட்டிருக்கிறார்.

ஆனால் அவர் முன்வைத்திருக்கின்ற கருத்துக்கள ஒன்றுடன் ஒன்று முரண்பாடானவை. யதார்த்தத்துக்கு பொருந்தாதவை.

விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்றே வெளிநாட்டுச் சக்திகள் கருதியிருந்தன என்றும், ஆனால் தமது அரசாங்கம் அதனைச் செய்து முடித்ததால், அந்த தரப்புகளுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது என்ற தொனியில் அமைந்திருக்கிறது பிரதமர் மகிந்தவின் கருத்து.

ஆனால், உண்மை நிலை என்ன? 

அமெரிக்காவின் ஒத்துழைப்பு இல்லாமல், இலங்கையினால் போரில் வென்றிருக்க முடியாது.

விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்கான வலைப்பின்னலை உருவாக்கியதே அமெரிக்கா தான். விடுதலைப் புலிகளின் வளர்ச்சியை அமெரிக்கா விரும்பவில்லை. 

இலங்கைத் தீவில் மாற்று சக்தி ஒன்றின் உருவாக்கம், இலங்கையைக் கையாளுவதில் அமெரிக்காவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று கருதியது.

பயங்கரவாத்த்துக்கு எதிரான போர் என்ற மூலோபயத்துக்குள் புலிகளைச் சிக்க வைத்து, அதனை நினைவேற்றியது.

புலிகளின் ஆயுத விநியோக வழங்கல் பாதையை தடுப்பதற்காக இலங்கை கடற்படைக்கு புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தொடர்பான செய்மதிப் படங்களைக் கொடுத்தது.

இதனை அமெரிக்காவும் உறுதி செய்திருக்கிறது. இலங்கை கடற்படையும் கூறியிருக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் தலைவர்களும் கூட, அதனை நன்றியுடன் நினைவுகூர்ந்திருக்கிறார்கள்.

அமெரிக்காவின் இந்த உதவி கிட்டியிராவிடின், கடற்புலிகளை முடங்கியிருக்க முடியாது என்றும், அவ்வாறு செய்யாமல், போரை முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியாது என்றும் அரசதரப்பிலேயே கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

ஆனால், இப்போது மகிந்த ராஜபக்ச, புலிகள் தோற்கடிக்கப்படுவார்கள் என்று வெளிநாட்டு சக்திகள் நம்பவில்லை என்று கூறுகிறார்.

புலிகள் தோற்கடிக்கப்படுவதை அமெரிக்கா விரும்பாவிடின், அந்த நாடு போரின் இறுதிக்கட்டத்தில் தலையீடு செய்திருக்க வேண்டும். அவ்வாறு நடக்கவில்லை. 

இதற்குப் பின்னரும், போரில் புலிகளைத் தோற்கடித்ததால் தான், அமெரிக்கா பழிவாங்கத் துடிக்கிறது என்ற கருத்தை, சிங்கள மக்களுக்குள் ஏற்படுத்த முனைந்திருப்பது அப்பட்டமான தேர்தல் நாடகம் தான்.

அடுத்து, போரில் வெற்றிபெற்ற பின்னர் தான் இலங்கையில் வெளிநாடுகளின் தலையீடுகள் ஆரம்பித்தன என்பது உண்மை தான்.

அது ஏன், என்பது பிரதமர் மகிந்தவுக்கு தெரியாமல் போயிருக்காது. வெளிநாடுகளின் தலையீடுகளுக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. புலிகளை அழிப்பதற்கான போரில் பங்களிப்புச் செய்த நாடுகளுக்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அளித்திருந்த வாக்குறுதி அதில் ஒன்று.

போரை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர், தமிழர் பிரச்சினையை தீர்ப்பதாக, அரசாங்கம் வாக்குறுதியைக் கொடுத்திருந்தது.

ஐ.நா பொதுச்செயலரிடமும் கூட பொறுப்புக்கூறல் குறித்த வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதிகள் காப்பாற்றப்படாத நிலையில் தான், வெளிநாடுகளின் தலையீடுகள் ஆரம்பித்தன.

போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கை சீனாவின் பக்கம் சாயகத் தொடங்கியது இன்னொரு காரணம். 

சீனாவின் பக்கம் நகர்ந்ததால், இந்தியப் பெருங்கடலில் சமனிலைக் குழப்பம் ஏற்படும் சூழல் ஏற்பட்ட போது, மேற்குலகமும் இந்தியாவும் தலையீடுகளைச் செய்ய முனைந்தன.

இந்த இரண்டு காரணிகளாலும் தான், வெளிநாடுகளின் தலையீடுகள் ஆரம்பித்தனவே தவிர, இலங்கையின் ஆட்சியாளர்களாக யார் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து வெளிநாடுகளின் தலையீடுகள் இருக்கவில்லை.

மகிந்த அல்லது ரணில் என்ற தெரிவு அவர்களுக்கு முக்கியமல்ல. இலங்கை கடைப்பிடிக்கும் அணுகுமுறை தான் முக்கியமானதாக இருந்தது.

அந்த அணுகுமுறையை மாற்றியமைப்பதற்கேற்ற வகையில், தமக்குச் சாதகமான ஆட்சியை உருவாக்குவதற்கு வெளிநாடுகள் தலையீடு செய்ய முனைந்தது ஆச்சரியமில்லை.

ஆக, வெளிநாட்டுத் தலையீடுகளுக்கான இடைவெளியை தோற்றுவித்த மகிந்த ராஜபக்ச, இப்போது அந்த இடைவெளியைப் பற்றி பேசாமல், தலையீடுகளைப் பற்றி பேசுகிறார்.

இதன் மூலம், அவர் வெளிநாடுகளைப் பற்றி அச்சமூட்டி, நாட்டின் இறைமையைப் பாதுகாக்க தம்மை ஆதரிக்க வேண்டும் என்று சிங்கள மக்களிடம் வலியுறுத்த முனைந்திருக்கிறார்.

அடுத்ததாக, நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான வழியை ஏற்படுத்துவதற்கே, வெளிநாட்டு சக்திகள் தலையிட்டன என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இலங்கையைப் பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரலை எந்தவொரு நாடும் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை.  அவ்வாறான எண்ணம் ஏதாவதொரு நாட்டுக்கு இருந்திருந்தால், விடுதலைப் புலிகளைத் தோற்கடித்திருக்க முடியாது.

President Rajapaksa and Prime Minister Modi Meet in New Delhi ...

அவர்களைப் பலப்படுத்தி பாதுகாக்க அந்த நாடு முயன்றிருக்கும்.

இலங்கையை பிளவுபடுத்தும் எண்ணம் அமெரிக்காவுக்கோ, இந்தியாவுக்கோ இருந்திருந்தால் புலிகளை அழிப்பதற்கு இந்த நாடுகள் உதவியிருக்காது.

அதைவிட இலங்கையை பிளவுபடுத்துவதன் மூலம், மேற்குலகத்துக்கோ, இந்தியாவுக்கோ நன்மை கிடைக்கும் என்று அந்த நாடுகளுக்கு இன்னமும் நம்பிக்கை வரவில்லை.

மேற்குலகம் மற்றும் இந்தியாவின் நலன்களை ஒட்டுமொத்தமாக புறக்கணித்துச் செயற்படும் நிலை ஒன்றுக்கு இலங்கை வரும் போது தான், அவ்வாறான நாட்டைப் பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்படும்.

ஆனால் இலங்கை அவ்வாறான ஒரு நகர்வை மேற்கொள்ளவில்லை. சீனாவின் பக்கம் சாய்ந்தாலும், இன்னமும் இந்தியாவை உறவினர் என்று தான் கூறிக் கொண்டிருக்கிறார் மகிந்த ராஜபக்ச.

அந்த உறவைத் துண்டித்துக் கொள்ள முனைந்தால் தான், அடுத்த கட்டம் பற்றி இந்தியா சிந்திக்கும்.

அதுபோலவே, அமெரிக்காவும் கூட இலங்கையை இரண்டு துண்டுகளாக கையாளுவதை விட, ஒரே நாடாக கையாளுவதைத் தான் இலகுவானதாக கருதுகிறது,

இப்போதைய நிலையில், சாதகமற்ற சூழல்கள் நிலவினாலும், அமெரிக்காவைப் பொறுத்தவரையில் முற்றிலும் பாதகமான நிலையில் இலங்கை இல்லை.

எனவே, அரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த வெளிநாடுகள் தலையிட முனைகின்றன என்பது முட்டாள்தனமான கூற்றாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது.

பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்த அறிக்கையின் ஊடாக தேசியவாத முகாமுக்கு வெளிநாட்டு சக்திகளால் ஆபத்து எனறு பிரகடனம் செய்து, அதற்கெதிராக சிங்கள வாக்குகளை தமக்குப் பின்னால் அணிதிரட்ட முனைகிறார்.

இலங்கையின் தேசியவாத முகாம் எப்படிப்பட்டது என்று இங்கு விபரிக்க தேவையில்லை. அது சிங்கள பௌத்த நலன்களை மட்டுமே அடிப்படையாக கொண்டது. பேரினவாத சிந்தனைகளை உடையது.

அந்த முகாமுக்குத் தாமே தலைமை வகிப்பதாக பிரதமர் மகிந்த இந்த அறிக்கையால் வெளிப்படுத்தியிருக்கிறார்.

வெளிநாட்டு சக்திகளின் தலையீடு என்பதை பூதாகாரப்படுத்தி அரசியல் வெற்றியை ஈட்டுவதற்கு மகிந்த ராஜபக்ச போட்டுள்ள திட்டத்தை தான் அவரது இந்த அறிக்கை உணர்த்தியிருக்கிறது.