மாற்றத்திற்கான அலையை தமிழ் மக்கள் உணர்ந்துள்ளமையினால் அந்த மாற்றத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணியும் பங்குபற்றுவதற்கு எங்களுக்கான ஆதரவினை தரவேண்டும் என தமிழர் விடுதலைக்கூட்டணியின் வேட்பாளர் ச.அரவிந்தன் தெரிவித்தார்.

வடமராட்சி கொற்றாவத்தையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நீண்டகாலமாகவே நாங்கள் அதை செய்கின்றோம், இதைச் செய்கின்றோம் எனக் கூறிவருகின்றார்கள். 

ஆனால் அவர்களால் எதனைச் செய்யமுடிந்தது. கூட்டமைப்பின் தற்போதைய நிலையில் தங்களுக்குள்ளே அடிபட்டுக்கொண்டு இனங்களுக்குள்ளும், மதங்களுக்குள்ளும் பிரச்சினைகளை உருவாக்கிக்கொண்டு மக்கள் மத்தியில் உணர்ச்சிகளைத் தூண்டி குழப்பத்தை ஏற்படுத்துகின்றார்கள்.

கடந்த நல்லாட்சிக் காலத்தில் அரசாங்கத்திற்கு முண்டுகொடுத்துக்கொண்டிருந்து விட்டு இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முயற்சியை தென்னிலங்கை தான் குழப்பி விட்டது என்ற காரணத்தை கூறிவருகின்றார்கள். சர்வதேசம் தான் எமக்கான பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்றும் கூறிவருகின்றார்கள். இது எவ்வாறு சாத்தியமாகும் .

தமிழர் விடுதலைக்கூட்டணியாகிய நாம் நீண்டகாலமாகவே இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கான அதிகாரப் பகிர்வே இலங்கைக்கும் சாத்தியம் என்பதை கூறிவருகின்றோம் நாம் அதையே இன்றும் கூறுகின்றோம். 

தமிழ் மக்கள் இன்றைய அரசியல் நிலையை உணர்ந்துகொண்டுள்ளார்கள். ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்று கருதுகின்றார்கள் அந்த மாற்றத்தில் எங்களுக்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி எமக்கான ஆதரவைத்தரவேண்டும். 

அந்த ஆதரவின் மூலம் நாங்கள் கூறுகின்ற அரசியல் அமைப்பு விடையத்தினையும் அதனோடு இணைந்த அபிவிருத்தியையும் செய்து காண்பிப்பதற்கு எங்களுக்கான சந்தர்ப்பத்தை தரவேண்டும் என்றார்.