இந்தியாவின் மராட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் தங்கத்தால் செய்யப்பட்ட முகக் கவசத்தை அணிந்துள்ள செய்தி வைரலாக பரவிவருகின்றது.

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு முகக்கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தி வருக்கின்றது. 

இதன்படி, என்.95 வகையைச் சேர்ந்த முகக்கவசங்கள் மற்றும் துணியால் செய்யப்பட்ட முகக்கவசங்களை மக்கள் அணிவதை நாம்  பரவலாக காண முடிகிறது.

 ஆனால், இந்தியாவின் மராட்டியத்தை  சேர்ந்த செல்வந்தர் ஒருவர் தங்க முகக்கவசம் அணிந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தை அடுத்த பிம்பிரி பகுதியில் வசிக்கும் சங்கர் குராடே என்ற செல்வந்தரே இவ்வாறு தங்க முகக்கவசத்தை அணிந்துள்ளார்.

இவர் கை, கழுத்து, விரல்களில் கிலோ கணக்கில் தங்க நகைகளையும் அணிந்துள்ளார். அதே பாணியில், முகக் கவசத்தையும் தங்கத்தில் அணிந்துள்ள அவர், சுவாசத்துக்கு இடையூறாக இல்லை என்றும் கூறியுள்ளார். 

நுண்ணிய துளைகள் உள்ளதாக கூறும் அவர், அந்த முகக் கவசத்தின் மதிப்பு இந்திய ரூபா மதிப்பில், 2 இலட்சத்து 89 ஆயிரம் என்கிறார். அதாவது உலகின் மிக விலை உயர்ந்த முகக்கவசம் இதுவாக இருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.