5 ஆண்டு காலப்பகுதியில் அபிவிருத்திகளை, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாது கட்சியை வளர்ப்பதிலேயே விக்னேஸ்வரன் கவனம் செலுத்தினார் என மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. 

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே குறித்த குற்றச்சாட்டினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க முன்வைத்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று முற்பகல் கிளிநொச்சியில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணி அலுவலகத்தில் இடம்பெற்றது. 

இதன்போது கரு்தது தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இன்று நாட்டில் உள்ள செல்வந்தர்கள் வளர்ந்தவாறு செல்கின்றனர். ஏழைகள் மேலும் ஏழைகளாகவே செல்கின்றனர். அதனாலேயே பாரிய சவால்களிற்கு மக்கள் முகம் கொடுக்கின்றனர். 

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டம் வறுமை நிலைக்கு சென்றமைக்கு இதுவும் பிரதானமாக உள்ளது. கல்வியில் வடக்கு மாகாணம் பின்னிலைக்கு சென்றுள்ளது. 

வசதிகள் கொண்ட மாவட்டம், செல்வந்தர்களின் பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலைகளிற்கான வளங்கள் அதிகரித்து கொடுக்கப்படுகின்றது. நீச்சல் தடாகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் அமைத்து கொடுக்கப்படுகின்றது. ஆனால் வறிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளிற்கு வளங்கள் பெற்று கொடுக்கப்படுவதில்லை.

தற்போது கொரோனா அச்சுறுத்தல் நிறைந்த காலப்பகுதியில் இணையத்தளம் ஊடான கல்வி முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் அதிகளவான பாடசாலை மாணவர்களிடம் சிமார்ட் தொலைபேசிகள் கூட கிடைத்திருக்கவில்லை. அவர்கள் எவ்வாறு கல்வியை தொடர்வது. அதனால் வள பற்றாக்குறை உள்ள பிரதேசங்கள் கல்வியில் பின்னிலைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றது.

5 ஆண்டு கால வடக்கு மாகாண சபையினால் மக்களிற்கு என்னத்தை பெற்றுக்கொடுக்க முடிந்தது. தொழிற்சாலைகளை அமைத்து கொடுத்திருக்க முடியும், மக்களின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப கூடிய திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்க முடியும். 

ஆனால் அவை மேற்கொள்ளப்படவில்லை. அதிகளவான பணம் திரைசேரிக்கு திருப்பி அனுப்பப்பட்டது. விக்னேஸ்வரன் குறித்த 5 ஆண்டு காலப்பகுதியில் தனக்கான கட்சி ஒன்றை அமைப்பது தொடர்பிலேயே கவனம் செலுத்திளார். 

மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவரும், வடக்கு மாகாண சபையும் எதனையும் செய்திருக்கவில்லை எனவும் அவர் இதன்போது குற்றம் சாட்டியிருந்தார்.

இதேவேளை குறித்த ஊடக சந்திப்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான கணேசபிள்ளை கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் பாடசாலை காலமுதல் சத்தியாகிரகம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளோம். ஆனால் இன்றுவரை எமக்க எந்தவித விடிவும் கிடைக்கவில்லை. தொடர்ந்தும் கஸ்டத்துடனும், வேதனைகளுடனும் மனிதர்கள் இறந்து போகின்றார்கள். 

நாங்கள் வாக்களித்த கட்சிகள் வீரம் பேசி வாக்குகளை பெற்று அரசாங்கத்துடன் சந்தோசமாக இருந்துவிட்டு மீண்டும் தேர்தல் வருகின்றபோது வெளியேவந்து மீண்டும் உரிமை பற்றி பேசுகின்றார்கள். 

உரிமை என்பது நாங்கள் ஒன்றாக நின்று ஐக்கியப்பட்டவர்களாக பெசுகின்றபோதே கிடைக்கும். அதை விடுத்து தனித்தனியே நின்று கேட்பதனால் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அங்கு கரு்தது தெரிவித்த யாழ் மாவட்ட வேட்பாளர் க.பிரான்சிஸ் ஜோசப் தெரிவிக்கையில்,

1977ம் ஆண்டுக்கு பின்னர் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை கைப்பற்றி திறந்த பொருளாதார கொள்கைளை கொடு வந்தார்கள். அப்போது இலங்கையில் அவசரகால சட்டம், பயங்கரவாத தடை சட்டம் ஆகியன அரசங்கேறியது. 

அதனால் தமிழ் மொழியை பேசும் இந்த பகுதியில் உள்ள இளைஞர்களாகிய நாங்கள் நசுக்கப்பட்டோம். இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள், பூசா முகாம் அறிமுகப்படுத்தப்பட்டது. அக்காலப்பகுதியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி இளைஞர்களை கைது செய்ததுடன் பொருளாதாரத்திலும் கை வைத்தது. இலங்கையில் யுத்த்திற்கு வலிகோரியவர்கள் இவர்களே. 

இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு காரணமாக இருந்தவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியினர்தான். யாழ் நூல்நிலையம் எரிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு வேலைகளை இவர்கள் செய்தார்கள். 

இவ்வாறான நிலையில் காலங்கள் மாறியபோதிலும் இன்றுவரை பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை. இன்று கிராமங்களில் உள்ள இளைஞர்கள் நடுத்தெருவில் நிக்கின்றார்கள். சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுகின்றார்கள். காரணம் அவர்களிற்கான பொருளாதாரத்தினை முன்னெடுக்க கூடிய சூழல் காணப்படவில்லை எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.