சமூகத்தில் இருந்து கொரோனா நோய் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதை அடுத்து மக்கள் மத்தியில் கொரோனா அச்சம் மேலோங்கியுள்ளது.

இதேவேளை பலர் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிவிடுகின்றனர். இந்நிலையில் சர்வ சாதாரணமாக மக்களின் நடமாட்டமும் செயற்பாடுகளும் அமைந்துள்ளன.

இந்நிலையிலேயே நபர் ஒருவர் ஜிந்துப்பிட்டி பகுதியில் வைத்து இனம்காணப்பட்டுள்ளார். இதனால் மக்கள் மத்தியில் மீண்டும் கொரோனா அச்சம் தலைதூக்கி உள்ளதைக் காணமுடிகின்றது.

இதனைத் தொடர்ந்து கொழும்பு  ஜிந்துப்பிட்டி பகுதியிலுள்ள 29 குடும்பங்களை சேர்ந்த 154 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து வருகை தந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்திருந்த, கப்பலில் பணியாற்றியிருந்த மாலுமி ஒருவருக்கே கொரோனா தொற்று இருப்பதுகண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

 இதனையடுத்து  இவர் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

14 நாட்களின் பின், பி.சி.ஆர். பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட இவருக்கு கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது.

இவர் வீட்டில் மேலும் 14 நாட்கள் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

தகவல் அறிந்து அதிரடியாக செயற்பட்ட அரசாங்கம் கொழும்பு , ஜிந்துப்பிட்டி வீதியை தற்காலிகமாக மூடியது.

எனினும், இது சமூக பரவல் அல்லவென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

ஆனாலும் அந்த பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் பழகிய மேலும் சிலரை கண்டறிய சுகாதார பாதுகாப்புத் தரப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் தொற்றுக்குள்ளான நபரின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் அடங்குவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும்

இவர்களுக்கு நோய்த் தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் காரணமாக நேற்று மாத்திரம் உலகம் முழுவதும்  5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

இதனால் கொரோனா உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து தாண்டியுள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது . எனவே மக்கள்  நிலைமையை உணர்ந்து பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் . 

மேலும் பொதுப் போக்குவரத்து நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இது தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.