(செ.தேன்மொழி)

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவினர் அவருடைய இல்லத்திற்கு சென்றிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வு பிரிவின் குழுவொன்று இன்று வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு சென்றிருந்தது. இது தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது,

நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மத்திய வங்கி பிணைமுறிகள் மோசடி தொடர்பில் வழக்கு விசாரணைகள் இடம் பெற்று வருகின்ற நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காகவே குற்றப் புலனாய்வு பிரிவினர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

இது தொடர்பான வாக்குமூலத்தை  பெற்றுக் கொள்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் தபுல டி லிவேரா அனுமதி வழங்கியுள்ளதுடன் , அதற்கமையவே குற்றப் புலனாய்வு பிரிவின் குழுவினர் இன்று  மாலை ஐந்து மணியளவில் கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள , முன்னாள் பிரதமரின் இல்லத்திற்கு சென்று வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.