(செ.தேன்மொழி)

போதைப் பொருள் கடத்தல்கார்களுடன் தொடர்பில் இருந்து , கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் ஒரு பகுதியை கடத்தல் காரர்களுக்கே மீள விற்பனை செய்துள்ளதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் நான்கு சிறப்பு பொலிஸ் விசாரணை குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

போதைப் பொருள் கடத்தல்கார்களுடன் தொடர்பில் இருந்து , கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் ஒரு பகுதியை கடத்தல் காரர்களுக்கே மீள விற்பனை செய்தமை தொடர்பில் போதைப் பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த 15 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர். இதன்போது போதைப் பொருள் ஒழிப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் போதைப் பொருள் கடத்தல் காரர்களுக்கு போதைப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக அனுமதியை பெற்றுக் கொடுத்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்நிலையில் கடத்தல் கார்களால் எடுத்துச் செல்லப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளில் ,  70 கிலோ கிராம் ஹெரோயினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர. எஞ்சிய தொகை இன்னமும் மீட்கப்படாத நிலையில் அது தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர். அதற்கமைய குறித்த ஹெரோயின் தொகை கொழும்பில் ஒரு பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில்  நான்கு விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

கேள்வி : பொதைப் பொருள் மீள விற்பனை  விவகாரத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளதா?

பதில்: இவ்வாறு எமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அவர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேள்வி : போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபரையும் , பணிப்பாளரையும் இடமாற்றம் செய்வதால் தீர்வுகாண முடியுமா?

பதில்: போதைப் பொருள் விற்பனை விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்கு இவர்களால் ஏதேனும் தலையீடு இடம் பெற்றால் சிக்கல் ஏற்படும் என்பதற்காகவே இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகள் முன்னெடுக்கப்படும் பொலிஸ் ஒழுக்க விதிமுறைகள் தொடர்பிலும் விசாரணைகள் எடுக்கப்படும்.