(செ.தேன்மொழி)

திட்டமிட்ட குற்றச் செயல்களை ஒழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்புகளின் போது , பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் 20 சந்தேக நபர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது பெருந்தொகையான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜயசுந்தர தெரிவித்தார்.

இதேவேளை இவ்வாறான செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பில் பொது மக்களுக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றால் அதனை  011-2500471 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு தங்களுக்கு தெரிவிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

திட்டமிட்ட குற்றச் செயல்களை ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விசேட சுற்றிவளைப்புகளிலே விசேட அதிரடிப்படையினரால் 20 சந்தேக நபர்கள் வரை கைது செய்ய்படப்டுள்ளனர். இதேவேளை இந்த குழுவினருக்கு சொந்தமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதற்கமைய ஹோமாக - பிட்டிபன பகுதியில் பாதாள உலக குழுவொன்றுக்கு சொத்தமான 12 துப்பாக்கிகளை விசேட அதிரடிப்படை மீட்டிருந்தது. இதன் போது கொஸ்கொட தாரக்க என்ற பாதாளகுழு உறுப்பினருக்கு சொந்தமான 11 ரி - 56 ரக துப்பாக்கிகளையும் , ரி -81 ரக துப்பாக்கி ஒன்றுமே கைப்பற்றப்பட்டதுடன், இதுவே பாதாள குழுவொன்றிடமிருந்து மீட்கப்பட்ட அதி கூடிய ஆயுதங்களாகும்.

இதேவேளை மேல்மாகாணத்தில் கடந்த ஜனவரி மாதம் 192 கிலோ கிராம் தொகை போதைப் பொருளுடன் 10 துப்பாக்கிகளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியிருந்தனர்.

இது தொடர்பான விசாரணைகள் பதில் பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையின்; கீழ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கிராம பகுதிகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட சோதனை நடவடிக்கைகளிலும் விசேட அதிரடிப்படையினர் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதுடன் , இதன்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய அவிசாவளை பகுதியில் - மன்னா ரமேஸ் என்ற சந்தேக நபரும் , மீகொட பகுதியில் கய்யா என்ற சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்கள் தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை யாழ் மாவட்டத்தை உள்ளடக்கும் வகையில் இராணுவத்தினருடன் இணைந்து விசேட அதிரடிப்படையினரால் மேற்கொண்டு வரும் சுற்றிவளைப்பின் போது பெருந்தொகையான கேரளா கஞ்சா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் , பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லேரியா பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 259 கிராம் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது , தற்போது சிறைவைக்கப்பட்டுள்ள தெமட்டகொட ஜமிந்த என்ற கைதியின்; ஆலோசனையின் பேரிலே இந்த போதைப் பொருள் கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுப்படும் நபர்களை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக தொடர்ந்தும் விசோட அதிரடிப்படையினர் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன் , மேல் மற்றும் தென் மாகாணங்களில் இவ்வாறான  செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக விசேட சுற்றிவளைப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொது மக்களுக்கு இது போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றால் இவை தொடர்பில் 011-2500471 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு எமக்கு தகவல் வழங்க முடியும்.