(இராஜதுரை ஹஷான்)

எம் சி . சி. ஒப்பந்தம் அழகானதாக இருந்தாலும் அதில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் இலங்கையின் இறையாண்மைக்கும், தேசிய பாதுகாப்பிற்கும் மற்றும் பொதுச் சட்டத்திற்கும் முரணானது. ஆகவே எவ்வித  நிபந்தனைகளுமின்றி ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் என்பதே எம். சி. சி. ஒப்பந்தம் தொடர்பான  மீளாய்வு குழுவினரது இறுதி பரிந்துரையாகும்.

ஒப்பந்தத்தின் முன் தயார் நிலைக்கு 2017, 2018ம் ஆண்டுகளில்  10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுவதற்கான இரு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதே தவிர  நிதி கிடைக்கப் பெற்றது என்று அறிக்கையில் எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. அமெரிக்க தூதுவராலயம் நிதி  வழங்கவில்லை, என்றும் கடந்த அரசாங்கம் நிதி பெறவில்லை என்று குறிப்பிடும் நிலையில் ஒப்பந்தத்தை கைச்சாத்திடாமல் தவிர்ப்பதால் எவ்வித பாதிப்பும் நாட்டுக்கு ஏற்படாது என    எம். சி. சி. ஒப்பந்தத்தின் மீளாய்வு குழு தலைவர் பேராசிரியர்  லலித ஸ்ரீ குணருவன் தெரிவித்தார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 மிலேனியம் சேலன்ச் கோர்பரேஷன்( எம். சி. சி)
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு அபிவிருத்தி துறையில் முன்னேற்றமடைவதற்கு நிதியுதவி வழங்கும் நோக்கில்  அமெரிக்காவின்  மிலேனியம் சேலன்ச்  கோர்பரேஷன் நிறுவனம் உருவாக்கப்பட்டது.  பிற நாடுகளுடன்  இந்த ஒப்பந்தத்தை செய்துக் கொள்வதற்கான  சட்ட பூர்வ அந்தஸ்த்து 2003ம் ஆண்டு  அமெரிக்காவின் காங்கிரஸ்  ஊடாக அனுமதி கிடைக்கப் பெற்று  சட்டமாக்கப்பட்டது. ஆகவே 2003ம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் எம். சி. சி. ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்படும்  செய்தி முற்றிலும் தவறானதாகும். 2004ம் ஆண்டு  எம். சி. சி  நிறுவனம்  இந்த நிதியுதவியை இலங்கைக்கு  வழங்குவதற்கு அப்போதைய அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்தது. ஆனால்    நாட்டில் பிற்பட்ட காலங்களில் ஏற்பட்ட   அசாதாரண சூழ்நிலையினால் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடை நிறுத்தம் செய்யப்பட்டன.

எம். சி. சி ஒப்பந்தம் தொடர்பான மீளாய்வு குழு  நியமனம்.
2015ஆம் ஆண்டு ஆட்சி  மாற்றம்  ஏற்பட்டதை தொடர்ந்து, நாட்டில் ஜனநாயகம், மனித உரிமை ஆகியவை ஸ்தாபிக்கப்பட்டுள்ளன என்ற  காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா எம். சி. சி. ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. காணி அபிவிருத்தி, மற்றும்  வீதி போக்குவரத் து  அபிவிருத்தி ஆகிய இரண்டு பிரதான    விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கான   ஆரம்பக்கட்ட  நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டன.

2017 ஜீலை 26 மற்றும் 2018 ஜீன் 18 ஆகிய காலப்பகுதிகளில் ஒப்பந்தத்தை  நடைமுறைப்படுத்துவதற்கான முன் தயார்  நிலைக்கான இரு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இதற்கான இரண்டு கட்டங்களாக 10 மில்லியன்  நிதி வழங்குவதற்கு எம். சி. சி  நிறுவனம் இணக்கம் தெரிவித்தும், அதனை பெற  அரசாங்கம்  இணக்கம் தெரிவித்தும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டன.  10 மில்லியன் நிதி  இந்த நிறுவனம் தான் பெற்றது என்று குழுவின் அறிக்கையில் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

இவ்வாறான நிலையில் எம். சி. சி ஒப்பந்தம் தொடர்பான மாறுப்பட்ட கருத்துக்கள்  சமூகத்தின்  மத்தியில் நிலவின.  2019ஆம்  ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ம் திகதி  அப்போதைய  அரசாங்கம் எம் . சி. சி  ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு  அமைச்சரவையில் அங்கிகாரம்  பெற்றுக்  கொண்டது. இதற்கு  எழுந்த எதிர்ப்பின் காரணமாக  ஒப்பந்தம் அப்போது  கைச்சாத்திடாமல் பிற்போடப்பட்டது.

 இடம் பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.  எம். சி. சி ஒப்பந்தத்தை  மீளாய்வு செய்ய குழு நியமிக்க வேண்டும் என்பதற்கு  2019 டிசெம்பர் மாதம்19ஆம் திகதி அமைச்சரவையில் அங்கிகாரம் பெறப்பட்டு  2020. ஜனவரி மாதம் 1ம் திகதி  நால்வர் அடங்கிய குழு  நியமிக்கப்பட்டது. குழுவின் செயற்பாடுகள்  அனைத்தும் சுயாதீனமாகவே அமைந்தது என பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.