சதீஷ் கிருஷ்ணபிள்ளை   

எழுபது ஆண்டுகள். தேசம் என்ற அடையாளத்தை இழந்த மக்கள் குழுமம். சொந்த மண். அதில் வாழும் உரிமை மறுக்கப்பட்டு. நடமாடும் சுதந்திரம் முடக்கப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாகும் அவலம்.

Israel and the Palestinians: Can the settlement issue be solved ...

ஆக்கிரமிப்பாளர்கள் ஓய்வது கிடையாது. அத்துமீறல்களை சர்வதேசம் தடுப்பதும் கிடையாது. எல்லாமே சக்கரமாய் சுழல்கின்றன. அடக்கப்படுபவர்கள் பலஸ்தீனர்கள். ஆக்கிரமிப்பது இஸ்ரேலிய தேசம் என்பதைப் புரிந்து கொள்ள பெரிதாக அரசியல் அறிவு தேவையில்லை.

இந்த சுழற்சியின் அடுத்த கட்டம், மேற்குக் கரையை இணைக்கும் திட்டம். இணைத்தல் என்ற பெயரிலான நில அபகரிப்பு. தேர்தல்கள் வரும். வாக்குவேட்டைக்காக அடுத்தவனை ஒடுக்கி தமது வலிமை காட்டும் அநியாயங்களும் அரங்கேறும். அப்படித்தான், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் நடந்தது.

பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹ_ மேற்குக் கரையைக் காட்டி வாக்குக் கேட்டார். இதனை இஸ்ரேலுடன் இணைப்பேன் என்றார். மாதங்கள் கழிந்தன. மண்ணாசை ஒழியவில்லை. அதிகரித்தது. வெற்றி பெற்றால் ஜோர்தான் பள்ளத்தாக்கையும் இணைப்பேன் என சூளுரைத்தார்.

Israel's Netanyahu Is Indicted on Bribery and Fraud Charges - WSJ

இந்தத் திட்டங்களால் சர்ச்சை. எப்படியாவது நிறைவேற்றத் துடிக்கிறார், நெத்தன்யாஹ_. அநியாயத்தை நிறுத்து என்று ஆர்ப்பரிக்கிறது, சர்வதேச சமூகம். மேற்குக் கரையை இணைக்கும் ஏற்பாடுகள் புதன்கிழமை ஆரம்பமாகியிருக்க வேண்டும். சற்று மௌனம். அது தொடருமா, கலையுமா என்பது தலையாய கேள்வி.

வரலாறு நெடுகிலும் போரிட்ட இரு தரப்புக்கள். ஒரு யுத்தத்தின் உச்சத்தை அடுத்து, ஐக்கிய நாடுகள் சபை தற்காலிக தீர்வு மொழிந்தது. அது 1947இல். ஒரு நிலப்பரப்பிற்குள் இஸ்ரேலியர்களும், பலஸ்தீனர்களும் அருகருகே வாழக்கூடிய ஏற்பாடு. இதில் இஸ்ரேலுக்கு சிறியதொரு துண்டு. பலஸ்தீனர்களுக்கு பெரும் பரப்பு.

அடுத்தடுத்து ஆக்கிரமிப்புகள். ஆறுநாள் யுத்தம். பலஸ்தீனர்களின் நிலம் அபகரிக்கப்பட்டது. சுயநிர்ணய உரிமை பறிக்கப்பட்டது. ஈற்றில், வேலி அடைக்கப்பட்ட காஸா என்ற ஒடுங்கிய நிலப்பரப்பிலும், பெரும் தடுப்புச் சுவரால் வளைக்கப்பட்ட மேற்குக் கரையிலும் வாழும் நிர்ப்பந்தம்.

1967இல் ஆறுநாள் யுத்தத்தை அடுத்து, மேற்குக் கரை இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் பிரதேசமானது. அதனை இஸ்ரேலுடன் இணைப்பது நெத்தன்யாஹ_வின் திட்டம். மேற்குக் கரையிலுள்ள பலஸ்தீனர்கள் இஸ்ரேலின் இராணுவ ஆட்சிக்கு உட்பட்டு வாழ்கிறார்கள். தமது விதியைத் தாமே தீர்மானிக்கும் முழு சுய-உரிமை இல்லை.

இந்த நிலப்பரப்பில் 132 யூதக்குடியிருப்புக்கள் உள்ளன. அத்துமீறி அமைக்கப்பட்ட 124 குடியிருப்புக்களும். ஆங்காங்கே, இராணுவ சோதனைச் சாவடிகள். இந்தக் குடியிருப்புக்கள் சட்டவிரோதமானவை என்பது சர்வதேச சமூகம் அறிந்ததே. அது உரத்துச் சொல்லப்படும் விடயமாகவும் இருக்கிறது.

இல்லை, இது சட்டபூர்வமானது தானெ இஸ்ரேலிய அரசு கூறினால், அதற்கு ஒத்து ஊதுவார், டொனல்ட் ட்ரம்ப். அதுவே அமெரிக்காவின் நிலைப்பாடாக கருதப்படும். நில அபகரிப்புத் திட்டங்களை நியாயப்படுத்த தந்திரங்கள் செய்வார்கள். வார்த்தை ஜாலங்களைப் பயன்படுத்துவார்கள்.

வார்த்தை விளையாட்டைக் கவனிக்க வேண்டும். இணைப்பு (Annexure) என்பது ஒரு இராஜ்ஜியம் மற்றொரு தேசத்தின் காணியை வலுக்கட்டாயமாக அபகரித்தல். தாம் மேற்குக் கரையையும், ஜோர்தான் பள்ளத்தாக்கையும் இணைக்கவில்லை. மாறாக, இறையாண்மையை செலுத்துகிறோம், என்பார் நெத்தன்யாஹ_.

Jordan Valley Map -(14) | Download Scientific Diagram

யூதக்குடியிருப்புக்கள் மீதான இறையாண்மை என்ற பெயரில், ஜோர்தான் பள்ளத்தாக்கின் கணிசமான பகுதியை சேர்த்து இஸ்ரேலிய மண்ணை விஸ்தரிக்கும் தந்திரம். ஜோர்தான் பள்ளத்தாக்கு நிலவளமும், நீர்வளமும் நிறைந்த விளைநிலங்களைக் கொண்ட மண். அதனை இழப்பதற்கு பலஸ்தீனர்கள் விரும்பவில்லை.

அடுத்து, இறையாண்மையை ஆராய்வோம். பலஸ்தீனர்கள் மீது இறையாண்மை செலுத்த மாட்டோம் என்பார், பெஞ்ஜமின் நெத்தன்யாஹ_ எனினும், யூதர்கள் மத்தியில் தாம் வாழும் நிலப்பரப்பு இஸ்ரேலுடன் இணைக்கப்படும் சந்தர்ப்பத்தில், பலஸ்தீனர்கள் சுதந்திரமாக வாழ முடியுமா?

இஸ்ரேலின் அடாவடித்தனத்திற்கு வரலாற்று ரீதியான காரணம் இருக்கிறது. எதிர்காலத்தைக் குறி வைக்கும் சூட்சுமமான நோக்கமும் உள்ளது. ஆறு நாள் யுத்தத்தில் பெருமளவு நிலப்பரப்பைக் கைப்பற்றியதுடன், இஸ்ரேலிய ஆட்சியாளர்கள் நிற்கவில்லை.

1980இல் கிழக்கு ஜெருசலேத்தை இணைத்தார்கள். அடுத்த வருடம் சிரியாவின் கோலான் மேட்டுநிலத்தையும் சேர்த்துக் கொண்டார்கள். எந்தவொரு இணைப்பும் சட்டவிரோதமானது என சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன. இஸ்ரேல் பொருட்படுத்தியது கிடையாது. அதற்காக தண்டிக்கப்பட்டதும் இல்லை.

சர்வதேச சமூகம் கூப்பாடு போட்டாலும், தாம் செய்வதை நிறுத்தப் போவதில்லை என்ற தைரியம் வருதவற்கு இதுவே காரணம். அடுத்து. இஸ்ரேலின் எதிர்கால நோக்கம். இது இஸ்ரேல், பலஸ்தீனம் என்ற இரு இராச்சியங்கள் அமையும் தீர்வுத் திட்டத்தின் அடிப்படையிலானது.

Two-state solution - Wikiwand

எதிர்கால பலஸ்தீன இராச்சியம் மேற்குக் கரையையும், காஸா பள்ளத்தாக்கையும் முழுமையாக உள்ளடக்கியிருக்க வேண்டும் என்பது பலஸ்தீனர்களின் கோரிக்கை.

மேற்குக் கரைப் பிரதேசம் வரலாற்று ரீதியாக தமக்குச் சொந்தமானது என பலஸ்தீனர்கள் வாதிடுகிறார்கள். மறுபுறத்தில் மேற்குக் கரை யூதர்களின் பாரம்பரிய பூமி என்பதால், மதரீதியான உரிமையும் உண்டென இஸ்ரேல் வாதிடுகிறது. பெருமளவு நிலப்பரப்பைப் பறிகொடுத்த பலஸ்தீனர்கள், இப்போதுள்ள நிலத்தையேனும் எமக்குத் தாருங்கள் என்று கேட்கும் நிலைக்கு வந்துள்ளார்கள்.

தம் வசம் இருப்பதை இன்னமும் பெருக்கிக் கொண்டால், தீர்வு முயற்சிகளில் பெரியதொரு நிலப்பிற்காக பேரம் பேசலாம் என்பது இஸ்ரேலின் சூட்சுமம்.

மேற்குக் கரை இஸ்ரேலுடன் இணைக்கப்படும் பட்சத்தில், பலஸ்தீனர்கள் மென்மேலும் கொடுமைகளை அனுபவிக்க நேரிடலாம். தம்மீது இறையாண்மையைப் பிரயோகிக்கும் பலஸ்தீன அதிகாரசபையின் சட்டதிட்டங்களுக்கு அடிபணிந்து நடக்க வேண்டியிருக்கிறது.

இனிமேல், பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய சட்டங்களுக்கும் கட்டுப்பட வேண்டும். இஸ்ரேலிய படைவீரர்கள் பலஸ்தீனர்களை சுதந்திரமாக கொடுமைப்படுத்தலாம். மேற்குக் கரை, பலஸ்தீனர்கள் செறிந்து வாழ்ந்த பகுதி. ஆவர்கள் மத்தியில் திடீரென முளைக்கும் யூதக் குடியிருப்புக்கள் உணர்வுரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தப் பிராந்தியம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டால், யூதர்கள் இலகுவாக குடியிருப்புக்களை அமைக்கலாம். கட்டடங்களை நிர்மாணிக்கவும் முடியும்.

ஏனெனில், இணைக்கப்படும் மேற்குக் கரை இஸ்ரேலிய அரசாங்கத்தின் ஒரு பகுதியாக மாறும். இஸ்ரேலுடன் மேற்குக் கரையை இணைக்கும் திட்டத்திற்கு என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இதற்கு நெத்தன்யாஹ_ ஜூலை முதலாம் திகதியென தேதி குறித்திருந்தார். அன்றைய தினம் எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

கடந்த வாரம், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பெனி கான்ட்ஸ் இணைத்தல் திட்டங்களை இடைநிறுத்தி வைப்பது நலம் என்றார்.

அவர் கொவிட்-19 நெருக்கடியைக் காரணம் காட்டினார். எனினும், திட்டம் கைவிடப்பட மாட்டாது என்பதையே இஸ்ரேலிய ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தாமதம் ஏற்பட்டாலும், இணைப்புத் திட்டத்தைத் தவிர்க்க முடியாமல் போகலாமென பலஸ்தீன அதிகாரிகளும் நம்புகிறார்கள்.

இஸ்ரேலியப் பிரதமர் திட்டத்தை அவசரமாக நிறைவேற்ற முற்படலாம். ஏனெனில், இதுவே அவருக்கு சாதகமான தருணம்.

டொனல்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் வரையில், நெத்தன்யாஹ_ எதனையும் செய்யலாம். எனவே, நவம்பர் மாதம் அமெரிக்கத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக இஸ்ரேலின் தரப்பில் இருந்து ஏதோவொன்று நடக்கத்தான் போகிறது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றால், நெத்தன்யாஹ_ நினைப்பது நிறைவேற மாட்டாது.

ஏனெனில், மேற்குக் கரையை இணைக்கும் திட்டத்தை ஜோ பைடன் ஆட்சேபிக்கிறார். அவர் மேற்குக் கரை பற்றிய வெளியுறவுக் கொள்கையை மாற்றவும் தயாராக இருக்கிறார்.