கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்தின் தோட்டத்தின் வாயில் வழியாக பிக்-அப் டிரக் வண்டியில் அத்துமீறி நுழை முற்ப்பட்ட இராணுவத்தின் ஆயுதமேந்திய வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் நேற்று வியாழக்கிழமை அதிகாலை ஒட்டாவாவில் உள்ள கனேடிய பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ரைடோ ஹாலின் பிரதான நுழைவாயில் வழியாக அத்துமீறி நுழைய தனது வாகனத்தைப் பயன்படுத்தியுள்ளார்.

பின்னர் அவர் பொலிஸாரின் கண்களில் படாதவாறு கால்நடையாக உள் நுழைந்துள்ளார். தற்போது சந்தேக நபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் கனேடிய ஆயுதப்படைகளில் உறுப்பினராக உள்ளார் என்று ரோயல் கனேடிய மவுண்டட் பொலிஸ் தெரிவித்துள்ளது.

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம் புனரமைக்கப்படுகின்றமையால், ரைடோ ஹால் தோட்டத்திலுள்ள ஒரு வீட்டில் தற்போது வசித்து வரும் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர்  குறித்த சம்பவம் இடம்பெறும் போது வீட்டில் இருக்கவில்லை.

கனடாவில் தாக்குதல் பாணி துப்பாக்கிப் பாவனைக்கு அந் நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தடை விதித்துள்ளார்.கடந்த ஏப்ரல் மாதம் அங்கு இடம்பெற்ற மிக மோசமான துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களையடுத்தே மே மாதம் இந்த தடை உத்தரவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விதிக்கப்பட்டுள்ளது.