(எம்.ஆர்.எம்.வஸீம்)
அரசாங்கம் இராணுவ ஆட்சியை அமைப்பதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளது. அதனை அங்கிகரித்துக்கொள்ளவே தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது என சோசலிச சமத்துவக் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் மயில்வாகனம் தேவராஜா தெரிவித்தார்.

சோசலிச சமத்துவக் கட்சி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்து சில மாதங்களிலே அவரின் நடவடிக்கைகள், வேலைத்திட்டங்கள் தொடர்பில் மக்கள் விரக்தியுற்றிருக்கின்றனர். ஒழுக்கமுள்ள சமூகம், சட்டத்தின் ஆட்சி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுப்போம் போன்ற வாக்குறுதிகளை முன்வைத்திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை.

நாட்டை இராணுவ ஆட்சிக்கு கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டம் இடம்பெறுவதை காணமுடிகின்றது. அரச துறைகளின் பிரதான நிறுவனங்களின் தலைவர்களாக ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களே நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அதேபோன்று இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி அதன் மூலம் தங்களின் ஆட்சியை உறுதிப்படுத்துக்கொள்ளும் வேலைத்திட்டத்தையும் அரசாங்கம் மேற்கொண்டு செல்கின்றது.

மேலும் முதலாளித்துவ ஆட்சியில் சாதாரண மக்களின் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்கப்போவதில்லை. சோசலிசவாதிகள் என தெரிவித்துக்கொண்டு முதலாளித்துவ கட்சிகளுடன் சிலர் இணைந்து செயற்படுகின்றனர். அவர்களால் ஒருபோதும் தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க முடியாது. உலகளாவிய பாரிய பொருளாதார பிரச்சினைக்கு நாடுகள் முகம்கொடுத்துக்கொண்டிருக்கின்றன. இது கொரோனா வைரஸினால் ஏற்பட்டதொன்றல்ல. முதலாளித்துவ கொள்கையில் இருக்கும் பிரச்சினையாகும்.

அதனால் முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக எமது கட்சி சர்வதேச ரீதியில் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. அதன் பின்னணியாகவே யாழ்ப்பாணத்தில் எமது கட்சி வேட்பாளர்கள் இராணுவத்தினரால்  அச்சுறுத்தப்பட்டிருக்கின்றனர். இது தொடர்பாக நாங்கள் முறைப்பாடு செய்யதும் இன்னும் பதில் இல்லை. எனவே முதலாளித்துவ ஆட்சியை இல்லாதொழித்து, தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை பாதுகாக்கவே நாங்கள் இம்முறை தேர்தலில் கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் கத்தரிக்கோல் சின்னத்தில் போட்டியிடுகின்றோம் என்றார்