தமிழ் பேசும் இளைஞர், யுவதிகளின் வாழ்வாதாரங்களை உயர்த்தி, அவர்கள் கௌரவமாக வாழக்கூடிய ஆரோக்கியச் சூழலை உருவாக்குவது உள்ளிட்ட அதிமுக்கிய பதினைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு, எமது மக்களின் ஆணையைக் கோரி, மீளவும் தேர்தல் களம் இறங்கியிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் அ.அரவிந்தகுமார் குறிப்பிட்டார்.

பதுளை “குயின்;ஸ்” விடுதியில், 03.07.2020ல் நடைபெற்ற சமூக முக்கியஸ்தர்கள், இளைஞர், யுவதிகள் கலந்துகொண்ட ஒன்று கூடலின் போது, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அ. அரவிந்தகுமார் கலந்துகொணடு பேசுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து, அவர் பேசுகையில், “பதுளை மாவட்டத்தின் முழுமையாக உள்ளடக்கிய வகையில் கணணி பயிற்சி நிலையங்கள் மற்றும் முன்பள்ளிக் கூடங்களை அமைத்தல், மாவட்டத்தில் பரவலாக தொழிற்பயிற்சி நிலையங்களை ஏற்படுத்துதல், கல்வித்துறையை துரிதமாக மேம்படுத்தல், வீடமைப்புத் திட்டங்களை உருவாக்குவதுடன், குடியிருப்புக்கள் அனைத்திற்கும் வீட்டுரிமை மற்றும் காணியுரிமை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை எடுத்தல், தோட்டவாரியாக சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான திட்டங்களை முன்னெடுத்தல், பெருந்தோட்ட ஆலயங்களை முழுமைப்படுத்தல், பெருந்தோட்ட பகுதிகளில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தல், பெருந்தோட்டப்பாதைகளை முழுமைப்படுத்தி, அரசபோக்குவரத்துச் சேவைகளை விஸ்தரித்தல், போஷாக்குத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல், பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு அரசதொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க முயற்சித்தல், பெருந்தோட்டப் பகுதிகளில் சுகாதாரத்துறையை மேம்படுத்தல், தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமை மற்றும் பாதுகாப்பினை பலப்படுத்துதல், பதுளை மாவட்டத்தில் எமது சமூகத்திற்கென்று, இரு பிரதேசசபைகளை உருவாக்குதல், மாவட்டத்தின் மக்கள் மன்றங்களில், எமது சமூக இளைஞர், யுவதிகளை அதிகளவில் ஈடுப்படுத்தல் போன்ற வேலைத்திட்டங்கள் என் சிந்தனையில் பரிணமித்துள்ளன.

இவ்வேலைத்திட்டங்களை துரிதமாக முன்னெடுக்க, எமது மக்களின் பேரங்கிகாரம் தேவைப்படுகின்றது. அவ் அங்கீகாரத்தினை அமோகமாக பெற்றுக்கொள்ள, மீளவும் தேர்தல் களம் இறங்கியுள்ளேன்.

நான் பாராளுமன்றஉறுப்பினராக இருந்தகடந்த 4 வருடங்களில், எமது மக்களின் மேம்பாடுகளுக்கு ஆற்றிய பணிகளை 24 பக்கங்கள் அடங்கிய விபரக் கொத்தாக பத்திரிகை வடிவில் தயாரித்து, எமது மக்களிடம் சமர்ப்பிக்கின்றேன். கடந்த 2015ம் ஆண்டு பதுளை மாவட்டத்தின் தமிழ் உறுப்பினர்கள் பெற்றவாக்குகளைவிட, ஆகக் கூடிய வாக்குகளை வழங்கி, என்னை வெற்றி பெறவைத்த எம்மக்களின் நம்பிக்கை வீண் போகாதவகையில், என்னால் இயன்றவரையில் சேவையாற்றியிருக்கின்றேன்.

எம் மக்கள் கடந்தமுறை என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பியதற்கு, அதற்குரிய பயனை பெற்றுக்கொடுத்திருக்கின்றேன். அதனையும் ஆதாரப்பூர்வமாக சமர்ப்பித்து இருக்கின்றேன். நடைபெறப் போகும் தேர்தலிலும், எமதுமக்கள் என்னை மீளவும் பாராளுமன்றத்திற்கு அனுப்பார்களென்ற அபார நம்பிக்கை எனக்கிருக்கின்றது. எம் மக்கள் எம் மீதுவைத்திருக்கும் நம்பிக்கை, என்றும் வீண்போகாது. 

 எமதுசமூகத்தின் பெறுமதிமிக்கவாக்குகளை சிதறடிப்பதற்கும், பெறுமதியற்றதாக்குவதற்கும் சிலர் கங்கணம் கட்டிச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இத்தகையவர்களுக்கு, தகுந்தபாடத்தை எம்மக்கள் புகட்டவேண்டும். தான் வெற்றிபெறமாட்டேனென்று தெரிந்திருந்தும் ஒப்பந்த அடிப்படையிலும், ஏஜன்ட்ராகவும் இருந்துசெயற்படுவர்களை இனங்கண்டு, சமூகத்திலிருந்து அத்தகையவர்கள் ஓரங்கட்டப்படல் வேண்டும்.

உலகவங்கி திட்டத்தின் கீழ் பெருந்தோட்டப் பகுதிகளில் பாரிய பாலங்கள், குடிநீர் விநியோகத்திட்டங்கள், மலசல கூடங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளையும், மேற்கொண்டிருந்தேன். உலக வங்கி திட்டத்தின் கீழ், பெருந்தோட்டப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று ரீதியிலான முதன்மைத் திட்டங்களே இவைகளாகும். இத்திட்டத்தின் மூலமாக எட்டு கோடியே ஐம்பது இலட்சம் ரூபாய் செலவு செய்யபட்டுள்ளது. இவ்வாறான திட்டங்கள் நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் என்ற நிலையினை மாற்றி பதுளை மாவட்ட தோட்டப்புறங்களுக்கும் அவற்றை விஸ்தரித்துள்ளேன்.

பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டுவரும் மாணவர்களுக்கு, மாதாமாதம் வழங்கப்பட்ட மற்றும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் உதவித்தொகையாக 284 பேருக்கு இரண்டு கோடியே நான்காயிரம் ரூபாய் இதுவரையிலும் வழங்கியுள்ளேன். இத்திட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருந்து வருகின்றது. பதுளை மாவட்ட தமிழ்ப் பாடசாலைகளின் மேம்பாடுகளுக்கென இரண்டு கோடி ரூபாவை அண்மித்த வகையில், செலவு செய்யபட்டுள்ளது. மின்சார வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் முகமாக ஒரு கோடியே அறுபத்து மூன்று இலட்சத்து ஐம்பத்து நான்காயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக பாடசாலைகள் மற்றும் சிறுவர் காப்பகங்கள் ஆகியவற்றுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட நிதி 12 இலட்சத்து 33 ஆயிரத்து ஐநூறு ரூபாவாகும். 

எனது ஏற்பாட்டில் வீடமைப்பு அமைச்சின் ஊடாக அப்புத்தளை பண்டாரெலிய, பூனாகலை உடனே, மக்கள் தெனிய ஆகிய பெருந்தோட்டங்களில் 77 வீடுகள் நிருமாணிக்கப்பட்டு இவை இறுதித் தருவாயை அடைந்துள்ளன. கொரோனா வைரஸ் காலப்பகுதியில், மக்களுக்கு விநியோகிப்பதற்கென 22,610 கிலோ உலர் உணவுப் பொருட்களுக்கு ரூபாய் 20 இலட்சத்து 92 ஆயிரத்து 250 ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதற்கு புறம்பாக ஊரடங்கு வேளையில் கொழும்பில் நிர்க்கதியான இளைஞர், யுவதிகளின் வங்கிக்கணக்கில் ஒரு இலட்சத்து பன்னிரண்டாயிரத்து ஐநூறு ரூபா தனிப்பட்ட வகையிலான நிதியுதவியும் வழங்கியுள்ளேன்.

கடந்த 4 வருடங்களாக அரச, சமூக அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட நிதி ஆகியவற்றின் ஊடாக, பதுளை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு வேலைத்திட்டங்களில் சிலவற்றை முன் வைக்கின்றேன்.

அப்புத்தளை பகுதியில் 10 கோடியே 58 ½, இலட்ச ரூபா, ஹாலி -எல பகுதியில் 7 கோடியே 29 இலட்சத்து 94 ஆயிரம் ரூபா,  ஹல்துமுல்லை பகுதியில் 5 கோடியே 46 இலட்ச ரூபா, ஊவா பரணகம பகுதியில் 4 கோடியே 49 இலட்ச ரூபா, பசறை பகுதியில் 8 கோடியே 28½, இலட்ச ரூபா, எல்லப் பகுதியில் 3 கோடியே 64½, இலட்ச ரூபா,  லுணுகலை பகுதியில் 5 கோடியே 7 இலட்சத்து 91 ஆயிரம் ரூபா, வெளிமடைபகுதியில் 5 கோடியே 18 இலட்ச ரூபா, பண்டாரவளைபகுதியில் 2 கோடியே 81½, இலட்ச ரூபா, பதுளைபகுதியில் 3 கோடியே 53 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா, சொரணதோட்ட பகுதியில் 1 கோடியே 59 இலட்சத்து 6 ஆயிரம் ரூபா, மீகாகியுல பகுதியில் 77 இலட்ச ரூபா, கந்தகெட்டிய பகுதியில் 77 இலட்ச ரூபா, மின்சாரம் பெற்றுக்கொள்வதற்கென வழங்கப்பட்ட நிதி  11 இலட்சத்து 54 ஆயிரம் ரூபா, இந்து கலாசார திணைக்களத்தினூடாக ஆலயங்களுக்கு வழங்கப்பட்ட நிதி 2 கோடி ரூபா, பல்கலைகழத்தில் பட்டப்படிப்பினை மேற்கொண்டு வரும் மாணவர்களுக்கான உதவித்தொகை 2 கோடியே 4 ஆயிரம், ரூபா, தேசிய வீடமைப்பு அதிகார சபையினூடாக வீடுகளின் திருத்தவேலைக்கு வழங்கப்பட்ட நிதி - 3½, இலட்ச ரூபா, பல்சிகிச்சை முகாங்களுக்கான செலவீனம்  1 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா, பட்டப்படிப்பை மேற்கொள்ளும் வறிய மாணவர்களுக்கென அரசாங்கத்திலிருந்து பெற்றுக் கொடுக்கப்பட்ட உதவித்தொகை 2 இலட்சத்து 37 ஆயிரத்து ஐநூறு ரூபா, சொந்த நிதியிலிருந்து அனர்த்தம், விளையாட்டுபோட்டிகள், ஆலய விழாக்கள் போன்றவற்றிற்கு வழங்கப்பட்ட தொகை  18 இலட்சத்து 8 ஆயிரத்து 200 ரூபா, வீடமைப்புகளுடன் 3 இலட்ச ரூபா, நோய்வாய்ப்பட்டவர்களுக்கான தனிப்பட்ட நிதியுதவிகள் 8 இலட்சத்து 51 ஆயிரத்து 930 ரூபா, வறிய மாணவர்களுக்கான கற்றல் உதவிகள் 2 இலட்சத்து 52 ஆயிரத்து 500 ரூபா, பாராளுமன்ற பார்வைக்கு சென்ற மாணவர்களுக்கான செலவீனம், 55 ஆயிரத்து 500 ரூபா, காப்பகங்களுக்கு வழங்கப்பட்டநிதி  12 இலட்சத்து 33 ஆயிரத்து 500 ரூபா, கற்கை செயலமர்வுகளுக்கான செலவு 32 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா, பிராந்திய அபிவிருத்திற்கான உதவிகள் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவாகும்.

இவ்வகையில் 64 கோடியே 49 இலட்சத்து 28 ஆயிரத்து 130ரூபா (644.93 மில்லியன் ரூபா)  செலவுகள் இடம்பெற்றிருக்கின்றன. மக்கள் நலன் சார்ந்த அனைத்து விடயத்திலும் கவனத்தை செலுத்தியுள்ளேன். எனது காலப்பகுதியில் 63 இளைஞர், யுவதிகளுக்கு அரச துறையில் தொழில் வாய்ப்புக்கள் பெற்றுக்கொடுத்துள்ளேன். இது போதுமானதாக இல்லா விட்டாலும் பல்வேறு அரச திணைக்களங்களில் இவர்கள் புகுத்தப்பட்டுள்ளமை இன்னுமொரு குறிப்பிடத்தக்க அம்சமாகவே கருதுகின்றேன். இதுவரையிலும் பெரும்பாலும் கல்வி திணைக்களத்திற்குள் மாத்திரம் உள்வாங்கப்பட்ட எம்மவர்கள் இவ்வாறு பல்துறை அரசதிணைக்களங்களுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளமையை இங்கு நினைவு கூறுகின்றேன். 

பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் எந்தவொரு பிரச்சினையையும் நேரடியாகவோ அல்லது 24 மணிநேரமும் செயற்படும் எனது கையடக்க தொலைபேசியினூடாகவோ அறிவிக்கமுடியும். அவ்வறிவிப்பை உடன் கவனத்திற்கு எடுத்து தீர்வினை பெற்றுக்கொடுக்க துரித நடவடிக்கைகளை எடுப்பேன். 

ஆகவே, என்னுடன் மேலும் ஒரு தமிழரை பாராளுமன்றத்திற்கு அனுப்பினீர்களாயின், அது ஒரு சாதனையாக அமைவதுடன் பாரிய அபிவிருத்திவேலைத் திட்டங்களை மேற்கொள்ளமுடியுமென நான் கருகின்றேன். 

நடைபெறப்போகும் தேர்தலில் தொலைபேசி சின்னத்திற்கும் 1 மற்றும் 9 ஆகிய இலக்கங்களுக்கும் புள்ளடியிட்டு எம்மிருவரையும் தெரிவு செய்யுபடியும், அத்தோடு மூன்றாவது விருப்புவாக்கு இலக்கத்தை பயன்படுத்தவேண்டாமென்றும் எமது மக்களிடம் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்”என்று கூறினார்.