கொழும்பு - 13 ஜிந்துப்பிட்டியில் கொரோனா வைரஸ் நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, 154 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள்  பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில்  ஜாசிங்க தெரிவித்தார்.

இந்நிலையில், கப்பலில் பணிபுரிந்த நிலையில் இந்தியாவில் இருந்து வருகை தந்த மாலுமி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாக்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த சில நட்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து வருகை தந்ததையடுத்து 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

14 நாட்களின் பின் பி.சி.ஆர். பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட இவர் கொரோனா தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இவரின் வீட்டில் மேலும் 14 நாட்கள் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில்  அந்தக் காலப்பகுதியில் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

சுகாதார அமைச்சு இது சமூகபரவலில்லை என தெரிவித்துள்ளதுடன் அச்சம் கொள்ளத் தேவையில்லையென்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.