பொலிவூட் திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றிய சரோஜ் கான் மாரடைப்பால் காலமானார்.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிந்தி திரையுலகில் மட்டுமல்லாமல் ஏனைய மொழி திரை உலகிலும் நடன இயக்குனராக பணியாற்றியவர் சரோஜ் கான்.

இவர் இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடனம் அமைத்திருக்கிறார். இன்றுவரை ரசிகர்களால் ரசிக்கப்படும் நடிகை மாதுரி தீட்சித் நடன அசைவில் உருவான 'ஏக் தோ தீன்..' என்ற பாடலுக்கு நடனம் அமைத்தவர் இவர் தான்.

நடிகை மாதுரி தீட்சித் மட்டுமல்லாமல் நடிகைகள் ஸ்ரீதேவி, கரீனா கபூர் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களின் நட்சத்திர அந்தஸ்திற்கும் இவர் பின்னணியாக பணியாற்றி இருக்கிறார்.

கடந்த மாதம் இருபதாம் திகதியன்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு மும்பையில் உள்ள குருநானக் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடனடியாக இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் பரிசோதனையில் இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்று உறுதியானது. தொடர்ந்து சிகிச்சையில் இருந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இரண்டு முப்பது மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

நடனத்திற்காக மூன்று முறை தேசிய விருது பெற்ற இவர், அண்மைகாலமாக எந்த புதிய படங்களிலும் பணியாற்ற ஒப்புக் கொள்ளாமல் இருந்தார். கடைசியாக அவர் 'கலங்க் 'என்ற படத்தில் நடிகை மாதுரி தீட்சித் அவர்களுக்கு நடனம் அமைத்தார்.

சரோஜ் கானின் மறைவிற்கு பொலிவூட் திரை உலகின் நட்சத்திரங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.