புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் அதிக இருப்பதாக  உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.

புகைபிடிப்பதால், இந்த நோய் தொற்று ஆபத்து அதிகரிக்கிறது என்றும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட புகை பிடிக்கும் பழக்கம்  உள்ள நோயாளிகள், கொரோனா வைரஸினால் இறக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக, உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.

புகைபிடித்தல் மற்றும் கொவிட்-19 ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு குறித்து வெளியிடப்பட்ட 34 ஆய்வுகளை, உலக சுகாதார ஸ்தாபனம் ஆய்வு செய்தது.

இதில் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு தொற்றுநோய்க்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்படுவதாகவும், நோயின் தீவிரம் அடையும் வாய்ப்புகளும், இறக்கும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

கொரோனா நோய் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களில். புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளில் புகைபிடிப்பவர்கள் 18 சதவீதம் வரை உள்ளனர்.

கொரோனா  தொற்று உலகம் முழுவதிலும் உள்ள மக்களை ஏதோ ஒரு வகையில் பாதித்துள்ளது. இலட்சக்கணக்கானோர் இந்த நோயினால் நேரிடையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பும் பலரின் வாழ்க்கையை பாதித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.