விளையாட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பிலான பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன முன்னிலையாகியிருந்த நிலையில் தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

ஆனால் எவ்வித விசாரணைகளும் இன்று இடம்பெறமால் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இந்நிலையில், தமக்கு உத்தியோகபூர்வமாக வருகைத்தருமாறு அறிவிக்கப்படாத காரணத்தினால் எவ்வித விசாரணைகளும் இன்று இடம்பெறவில்லை என தெரிவித்துவிட்டு மஹெல ஜயவர்தன அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ணக் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இன்றையதினம் வாக்குமூலம்  வழங்குவதற்காக ,  மஹேல ஜயவர்தனவை ஆஜராகுமாறு நேற்றையதினம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,இன்று ஜெயவர்தனாவிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்படாது, பின்னர் ஒரு நாளில் அவர் மீண்டும் வரவழைக்கப்படுவார் என விளையாட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பிலான பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவி அறிவித்தது.

இருப்பினும், 2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஒரு சதம் அடித்த முன்னாள் கிரிக்கெட் வீரர், தனிப்பட்ட காரணங்களால் இன்றையதினம் வாக்குமூலம் வழங்க ஆஜராகமாட்டார் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டதனாலேயே தான் நான் விளையாட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பிலான பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிற்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.

எனது வாக்குமூலம் நேற்று இரவு 11.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தனக்கு தகவல் கிடைத்ததாகவும், தனிப்பட்ட காரணங்களால் நான் ஆஜராகவில்லை என்று சில ஊடகங்களில் செய்திகள் இன்று காலை வெளிவந்ததாகவும் ஜெயவர்தன தெரிவித்தார்.

இதன் விளைவாக, தவறான ஊடக அறிக்கைகளை தெளிவுபடுத்துவது எனது கடமையாக இருப்பதால், இன்று இந்தப் பிரிவுக்கு வருகைதந்து தெளிவு படுத்தியுள்ளேன்.

மேலும், நான் கிரிக்கெட் விளையாட்டை நேசிப்பதாகவும், கிரிக்கெட் விளையாட்டை மதிப்பதாகவும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் விசாரணைகளுக்கு ஆதரவளித்து உதவுவது தனது பொறுப்பு என்றும் மஹேல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.