இலங்கையை உலகிற்கு அடையாளம் காட்டியதில் மிகவும் முக்கியமானது இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சாதனைகளாகும்.

இனம், மதம் கடந்து அனைவரும்  அவர்களை மனதார பாராட்டினார்கள் அதுமாத்திரமன்றி நாட்டில் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தில் இருந்த சந்தர்ப்பங்களின் போதும் இலங்கை கிரிக்கெட் வீரர்களின் வெற்றியை சர்வதேசம் பாராட்டத் தவறியதில்லை.

நிலைமை இவ்வாறிருக்க 11 வருடங்கள் கடந்து இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது .

கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் உலகக் கிண்ணத்தைவிற்று விட்டதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றம் சாட்டியுள்ளார்.

 இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் உலகக் கிண்ணத்தைக்  கைப்பற்ற அதற்கான வல்லமை இலங்கை அணியிடம் காணப்பட்டபோதும் பணத்துக்காக அது தாரை வார்க்கப்பட்டது. அதை நான் பொறுப்புடன் கூறுவேன் என்று முன்னாள் அமைச்சரின் கூற்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 இது உண்மையா அல்லது கட்டுக்கதையா என்று மக்கள் அங்கலாய்த்து வரும் நிலையில் இதுவே இன்று அரசியல் மேடைகளிலும் பேசு பொருளாக மாறியுள்ளது .

இந்நிலையில் தனது இயலாமையை மறைக்கவும் நாட்டுப் பிரச்சினையை திசை திருப்பவும் கிரிக்கெட் வீரர்களுடன் அரசியல் செய்ய வேண்டாம் என்று கேட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, கிரிக்கெட்டை அரசியலாக்க முயற்சிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றுபடவேண்டும்.  கிரிக்கெட் வீரர்களை பாதுகாக்க நாமல் உட்பட குழுவினருக்கு நான் அழைப்பு விடுக்கிறேன் என்றும் கூறியுள்ளார் .

இலங்கைக்கு சிறந்த நற்பெயரை பெற்றுத்தந்த விளையாட்டு வீரர்களை பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியுள்ள அவர்,  மஹேல,  சங்கக்காரா போன்றவர்கள் விலைமதிக்க முடியாத நற்பெயரை தேடித் தந்துள்ளனர். குமார் சங்ககார உலக கிரிக்கெட் சபை தலைமைத்துவத்துக்கு போட்டியிடுவதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவர் மீது வீண் பழி சுமத்தப்படுகிறது  என்று ஹரீன் பெர்னாண்டோ குற்றம் சாட்டியுள்ளார்.

இவற்றுக்கு மத்தியில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் குற்றச்சாட்டை அடுத்து  ஆட்ட நிர்ணயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க குமார் சங்கக்கார அழைக்கப் பட்டதை அடுத்து அவர் நேற்று தனது சாட்சியங்களை முன்வைத்தார். அடுத்து இன்றையதினம் மஹேல ஜெயவர்தன வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க 3 மணி நேரம் சாட்சியமளித்தார்.

இதற்கு முன்னர் செவ்வாயன்று அரவிந்த டி சில்வா சாட்சியமளித்தார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாமல் ராஜபக்ச, சர்வதேச கிரிக்கெட் ஆணையம் மௌனமாக இருக்கும் நிலையில் இலங்கை அணியின் வீரர்களை அழைத்து விசாரணை நடத்துவது தேவையற்ற அவமானத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார் .

இந்த நாட்டை பொறுத்தமட்டில் அரசியல்வாதிகள் தமக்குத் தேவையான போது தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடுவதும் தேவையற்ற போது தூக்கி எறிந்து விடுவதும் அவர்களின் கலாசாரம். இவற்றுக்கு கிரிக்கெட் வீரர்கள் கூட விதிவிலக்கல்ல என்பது தான் இன்றைய வேதனையாக உள்ளது.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்