இந்தியாவின், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏழு வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுதியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் கிராமத்தில் வசித்து வந்த ஏழு வயது  சிறுமி நேற்றுமுன்தினம் புதன்கிழமையன்று மதியம் காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து ஏம்பல் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய தேடுதலை மேற்கொண்ட பொலிஸார் நேற்றையதினம் ஊரணி பகுதியில் உள்ள புதர்களுக்கிடையில் சிறுமியை சடலமாக மீட்டுள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையை அடுத்து, சிறுமியின் அயல்வீட்டு நபர் (29 வயது) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தியதுடன் சிறுமி கத்தி கூச்சலிட்டதையடுத்து அடித்துக் கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இச் சம்பவம் தொடர்பில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தமது  ட்விட்டர் பக்கத்தில் 

என பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, இச் சம்பவம்  தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

 "கொரோனா பரவலைப் போலவே தமிழகத்தில் சட்டம் - ஒழுங்குச் சீர்கேடும் படுவேகமாகப் பரவிவருவது கவலையடைச் செய்கிறது. சில வாரங்களுக்கு முன்புதான், இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் மற்றொரு சிறுமி படுகொலைக்குள்ளானமை தாமதமாக வெளியே தெரியவந்தது.

இப்போது மீண்டும் ஒரு சிறுமி. இத்தகைய சம்பவங்கள் தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது" என்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இத்துடன் #JusticeforJayapriya என்ற ஹாஷ்டாக் மூலம் இக் கொடூர செயல் குறித்து  பலரும் தமது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

தற்போது இந்திய அளவில் இந்த ஹாஷ்டாக் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.