-டி.பி.எஸ்.ஜெயராஜ்

இன்று பாராளுமன்றமொன்று இல்லாமல் நாடு இயங்கிக்கொண்டிருக்கிறது. ஜனாதிபதி ராஜபக்ஷ கூடுதலானளவிற்கு நெகிழ்ச்சிக்கோக்கைக் காட்டியிருந்தால் இன்று காணப்படுகின்ற குழப்பநிலையையும், நிச்சயமற்ற தன்மையையும் தவிர்த்திருக்க முடியும். ஆனால் தனது சொந்தக் காரணங்களுக்காக அவர் விட்டுக்கொடுக்காமல் செயற்பட்டு வருகின்றார்.

2019 ஜனாதிபதித் தேர்தலில் நந்தசேன கோத்தபாய ராஜபக்ஷவின் பிரவேசம் ஜனாதிபதித் தேர்தல்களில் பிரதான அரசியல் கட்சிகளினால் வேட்பாளராக நிறுத்தப்படுபவர்கள் போட்டியிடுகின்ற வழக்காறிலும், பாங்கிலும் அடிப்படையான மாற்றமொன்றைக் கொண்டுவந்தது.

கடந்த காலத்தில் நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக வரவிரும்பிய சகல வேட்பாளர்களும் சிறுபான்மை சமூகக்கட்சிகள் மீது விசேட கவனத்தைச் செலுத்தினார்கள். ஆனால் கோத்தபாய ராஜபக்ஷ அவையெல்லாவற்றையும் நடைமுறையில் மாற்றிவிட்டார். 

இலங்கையில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை 1978 இல் ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதிபதிக்குச் சார்பாகப் பல காரணங்களை முன்வைத்தது. சனத்தொகை அடிப்படையில் சிறுபான்மையினராக இருக்கும் இனத்துவ சமூகங்களுக்கு அனுகூலமானதாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிப்பதவி இருக்கும் என்பது சாதகமாக முன்வைக்கப்பட்ட அம்சங்களில் ஒன்று. சிறுபான்மைச் சமூகங்களுக்கு நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சி பயனுடையதாக இருக்கும் என்ற கருத்து குறிப்பிட்டளவிற்கு இலங்கையில் செல்லுபடியாகக் கூடியதாக இருந்தது. 

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலும் ...

ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகளில் சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குகள் செல்வாக்குச் செலுத்தும் நிலையைக் கொண்டிருந்தமையே இதன் காரணமாகும். நாடளாவிய ஜனாதிபதித்தேர்தல் ஒன்றில் - வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குவிந்து வாழ்கின்ற தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் புறம்பாக - தென்னிலங்கையிலுள்ள ஏனைய ஏழு மாகாணங்களிலும் பரந்து வாழ்கின்ற சகல சிறுபான்மை இனத்தவர்களும் ஜனாதிபதியொருவரைத் தெரிவு செய்வதில் ஒப்பீட்டளவில் கூடுதலான ஒரு வாய்ப்பைக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நாடளாவிய தேர்தல் ஒன்றில் நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குபவர்களாக சிறுபான்மை சமூகங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் இருந்தன.

உதாரணமாகப் புதிய அரசியலமைப்பொன்றை வரைவதற்காக சிறிசேன - விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட அரசியலமைப்பு சபையினால் நியமிக்கப்பட்ட 21 உறுப்பினர்களைக் கொண்ட வழிநடத்தல் குழு, அதன் இடைக்கால அறிக்கையை 2017 செப்டெம்பர் 21 இல் சமர்ப்பித்தபோது முஸ்லிம்கள், மலையகத்தமிழர்கள், இலங்கைத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 4 கட்சிகள் அந்த அறிக்கைக்கு இணைப்பொன்றைக் கூட்டாக முன்வைத்தன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவையே அவையாகும். அவை முன்வைத்த இணைப்பில் ஜனாதிபதி நாட்டின் தலைவராகவும், அரசாங்கத்தின் தலைவராகவும் இருக்கவேண்டும் என்பதுடன் ஜனாதிபதித் தேர்தலொன்றில் மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுபவராகவும் இருக்கவேண்டும். 

தற்போதைய வடிவில் உள்ள ஜனாதிபதிப் பதவியை ஒழித்தல்

நிறைவேற்றதிகார ஜனாதிபதிப் பதவியை அறிமுகப்படுத்திய ஐக்கிய தேசியக்கட்சி தற்போதைய வடிவில் நிறைவேற்றதிகார ஜனாதிபதிப் பதவியை ஒழிக்கவேண்டும் என்று அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட போதிலேயே மேற்கூறப்பட்ட நான்கு கட்சிகளும் அந்த இணைப்பில் அவற்றின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தன. ஜனாதிபதியின் தற்போதைய அதிகாரங்கள் கடுமையாகக் குறைக்கப்பட்டு, விசேடமான கடமைகளுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கவேண்டுமென்று ஐக்கிய தேசியக்கட்சி விரும்பியது. தற்போது நடைமுறையில் உள்ளதைப்போன்று முழு நாட்டினாலும் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவதற்குப் பதிலாகப் பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்படுகின்ற ஒரு ஜனாதிபதிப்பதவியை ஐக்கிய தேசியக் கட்சி விரும்பியது. அந்த நேரத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் தற்போதைய வடிவில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் அதே நிலைப்பாட்டையே கொண்டிருந்தது. 

ஐக்கிய தேசியக் கட்சியினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் நிலைப்பாடு இத்தகையதாக இருந்தபோதிலும் ஏனைய நான்கு சிறுபான்மைக் கட்சிகளும் இதுவிடயத்தில் வேறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன. நாடளாவிய தேர்தலொன்றில் நேரடியாக மக்களினால் தெரிவுசெய்யப்படுகின்ற ஜனாதிபதியையே அவை விரும்பின. முன்னாள் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோகணேசன் இந்தக் கட்டுரையாளருக்குப் பின்வருமாறு கூறியிருந்தார். 'மக்களினால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுகின்ற நிறைவேற்று ஜனாதிபதிப்பதவியையே நாம் விரும்புகின்றோம். அது சிறுபான்மை இனங்களுக்கு அரசியல் பேரம்பேசலுக்குக் கூடுதல் வாய்ப்பை வழங்குகிறது. ஆனால் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தின் மூலமுதல் வரைபில் குறித்துரைக்கப்பட்டவையாக இருக்கலாம். இது அதிகாரம் குறைக்கப்பட்ட, ஆனால் அதேவேளை மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுகின்ற ஒரு ஜனாதிபதிப் பதவியாக இருக்கும்'.

Making Political Sense Of Presidential Elections From 1982 To 2019 ...

ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் வெற்றி பெறுவதற்கு கணிசமான எண்ணிக்கையான சிறுபான்மைச் சமூகவாக்குகளைப் பெறவேண்டும் என்பது இலங்கையில் நிறைவேற்றதிகார ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு முதன்முதலாக நடத்தப்பட்ட 1982 அக்டோபர் ஜனாதிபதித் தேர்தலிலிருந்து பொதுவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகவே இருந்துவந்திருக்கிறது. பிரதான அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய சகல ஜனாதிபதி வேட்பாளர்களும் சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகளைக் கவருவதற்காகத் தவறாமல் அந்த மக்கள் மத்தியில் பிரசாரம் செய்திருக்கிறார்கள். ஜனாதிபதித் தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் சகலருமே பெரும்பான்மைச் சமூகத்தின் வாக்குகளுக்கு மேலதிகமாகப் பெரும் எண்ணிக்கையாக சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குகளைப் பெற்றார்கள். இதை ஜே.ஆர்.ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாஸ, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்குப் பிரயோகிக்கலாம். 2005 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் மஹிந்த ராஜபக்ஷ தோற்கடித்தபோது இந்தப் பாங்கு மாறியது. 

2005 Sri Lankan presidential election - Wikipedia

அந்தத் தேர்தலில் சிறுபான்மைச் சமூகங்களின் கூடுதல் எண்ணிக்கையான வாக்குகளை ரணில் விக்கிரமசிங்க பெற்றார். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் விடுதலைப்புலிகளினால் வலுகட்டாயமாக நடத்தப்பட்ட பகிஷ்கரிப்பின் விளைவாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திரளான தமிழ் வாக்குகளை அவரால் பெறமுடியாமல்போன காரணத்தால் வெற்றி அவரிடமிருந்து நழுவிப்போனது. சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குகளின் ஒரு மொத்தத்தொகை குறைக்கப்பட்ட நிலையில் பெரும்பான்மைச் சமூகத்தின் வாக்குகளின் பற்றாக்குறையை ஈடுசெய்து அவரால் வெற்றிபெற முடியாமல்போனது. 

2010 Sri Lankan presidential election - Wikipedia

இதேபோன்று 2010 தேர்தலிலும் நடத்தது. போரில் வெற்றியாளரான ஜனாதிபதிக்கும், போர் வெற்றியாளரான இராணுவத்தளபதிக்கும் இடையிலான மோதலில் சரத்பொன்சேகாவிற்கும் மேலாக மஹிந்த ராஜபக்ஷவை சிங்கள மக்கள் திரளாக ஆதரித்தனர். பொன்சேகாவுக்கு மிகவும் பெரும் எண்ணிக்கையில் தமிழர்களும், முஸ்லிம்களும் வாக்களித்த போதிலும் கூட அதிகப்பெரும்பான்மையான சிங்கள வாக்காளர்கள் ராஜபக்ஷவை ஆதரித்த காரணத்தால் 'எதிர்கால பீல்ட் மார்ஷலினால்' வெற்றி பெறமுடியவில்லை. 

மைத்திரிபால சிறிசேன பிரிந்துசென்று தனது முன்னாள் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ்வை எதிர்த்துப் போட்டியிட்ட 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் இந்தப்போக்கு மாறியது. மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றார். சிங்கள பௌத்த வாக்காளர்களின் கூடுதலான வாக்குகள் மஹிந்தவிற்குக் கிடைத்த போதிலும், சிறுபான்மைச் சமூக வாக்காளர்களிடமிருந்து மைத்திரிபால பெற்ற தொகையில் விஞ்சிய ஆதரவை மேவிச்செல்ல அவை போதுமானவையாக இருக்கவில்லை. சிறிசேனவின் வெற்றியையடுத்து ஜனாதிபதியொருவரைத் தெரிவு செய்வதற்குச் சிறுபான்மைச் சமூகங்களின் ஆதரவு அவசியம் என்ற கருத்து மீண்டும் வலுப்பெறத்தொடங்கியது. இந்தப் பின்புலத்திலேயே சிறுபான்மைச்சமூகங்களின் வாக்குகளை கோத்தபாய ராஜபக்ஷ பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற காரணத்தினால் 2019 நவம்பர் தேர்தலில் அவரின் வெற்றி வாய்ப்புக்கள் குறித்துப் பல அரசியல் ஆய்வாளர்களும், அரசியல் அவதானிகளும் கடுமையாக சந்தேகித்தனர். 

தன்னை விமர்சிப்பவர்களைத் தவறென்று நிரூபித்த கோத்தா

எவ்வாறெனினும் கோத்தபாய தன்னை விமர்சித்தவர்களைத் தவறென நிரூபித்துத் தேர்தலில் வெற்றிபெற்றார். அவரது தேர்தல் பிரசாரத்தில் முக்கியமான அம்சமொன்றைக் கவனிக்கக் கூடியதாக இருந்தது. அதாவது சிங்களவர்கள் அல்லாத வாக்காளர்களின் ஆதரவையும் நாடுவதாக உதட்டளவில் கூறியபோதிலும் அவர் பிரதானமாக - முற்றுமுழுதாக என்றும் கூறலாம் - சிங்கள வாக்காளர்கள் மீதே கவனத்தைச் செலுத்தினார். சிறுபான்மைச் சமூகங்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஒருசில தேர்தல் பிரசாரக்கூட்டங்கள் நடத்தப்பட்டாலும் சிங்கள பௌத்த வாக்குகளே கோத்தபாயவின் இலக்காக இருந்தது. சிங்கள கிறிஸ்தவர்களின் ஆதரவை நாடுவதிலும் அவர் பெரிய அக்கறை காட்டவில்லை. ஏனைய வேட்பாளர்களைப் போலன்றி கோத்தபாய தனது பிரசாரங்களில் சிறுபான்மையினரின் பிரச்சினைகள் பற்றிக் கவனம் செலுத்தவில்லை. இனத்துவ முக்கியத்துவம் கொண்ட பிரச்சினைகளுக்குப் பதிலாக கோத்தபாய தேசிய பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு, அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை குறித்தே அவர் வாக்குறுதியளித்தார். இதில் சகலரையும் சமத்துவமாக நடத்துவதாக அவர் உறுதியளித்தார். 

Symbolic swearing-in for Sri Lanka's new president

தேர்தல் வெற்றிக்குப் பிறகு கோத்தபாய ராஜபக்ஷ அநுராதபுரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ருவன்வெலிசாயவில் ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதிலிருந்து எல்லாளன் - துட்டகைமுனு அடையாளப்படுத்தலை இலகுவில் விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருந்தது. 'த இந்து' பத்திரிகையின் கொழும்புச் செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசன் அந்தவேளையில் எழுதிய செய்தியில் 'என்னை ஜனாதிபதியாக்கியது சிங்களப் பெரும்பான்மை வாக்குகள் என்பதே தேர்தலின் பிரதான செய்தி என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கூறினார். சிங்களப் பெரும்பான்மை வாக்குகளால் மாத்திரம் வெற்றி பெறமுடியும் என்று எனக்குத் தெரியும். எனினும் எனது வெற்றியில் பங்காளர்களாக இருக்குமாறு நான் தமிழர்களிடமும், முஸ்லிம்களிடமும் கேட்டேன். ஆனால் அவர்களின் பதில் நான் எதிர்பார்த்தவாறு இருக்கவில்லை. இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு என்னுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தொலைக்காட்சி மூலம் நாட்டுமக்களுக்கு அவர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார்' என்று கூறப்பட்டிருந்தது. 

ஜனாதிபதிகளைத் தெரிவுசெய்வதில் அல்லது தெரிவு செய்யாமல் விடுவதில் சிறுபான்மைச் சமூகத்தின் வாக்குகள் செலுத்திய செல்வாக்கும், உறுதியான பெரும்பான்மைக் கட்சிகள் வகித்த பாத்திரமும் சில சிறுபான்மைக்கட்சித் தலைவர்களுக்கு அவர்களது அரசியல் முக்கியத்துவம் குறித்து ஒரு மிகைப்பட்ட உணர்வைக் கொடுத்துவிட்டது. சிலர் தங்களை 'கிங் மேக்கர்கள்' என்றும் 'குயின் மேக்கர்கள்' என்றும் தம்பட்டம் அடித்துக்கொண்டார்கள். இவர்களின் இந்தவகையிலான கூச்சல் எண்ணிக்கையில் பெரும்பான்மையினரான சிங்கள சமூகத்திற்கு வெறுப்பைக் கொடுத்தது. அவர்களின் இந்த வெறுப்புணர்வைத் தனக்குச் சாதகமான முறையில் பயன்படுத்தி கோத்தபாய வெற்றிபெற்றார். அதனால் புதிய ஜனாதிபதியாக அவர் முதற்தடவையாகப் பாராளுமன்றத்தில் தனது கொள்கை விளக்கவுரையை நிகழ்த்திய போது சிறுபான்மையின அரசியல் தலைவர்களுக்கு ஒரு சாட்டையடி கொடுத்தார். அவர் கூறியது இதுதான்:

'என்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்த மக்கள் இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தில் முற்றுமுழுதான மாற்றமொன்றை விரும்பினார்கள். இனத்தை அடிப்படையாகக்கொண்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களை அவர்கள் நிராகரித்தார்கள். 'கிங் மேக்கர்' என்ற பாத்திரத்தை வகிப்பதன் மூலமாக இந்த நாட்டின் அரசியலை எவரும் தங்களுக்கேற்ற விதத்தில் பயன்படுத்துவதும், கட்டுப்படுத்துவதும் இனிமேலும் சாத்தியமாகப்போவதில்லை என்பதைப் பெரும்பான்மையான மக்கள் நிரூபித்தார்கள். சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த நாட்டை அபிவிருத்தி செய்யும் தேசிய கடமையில் ஒன்றிணையுமாறும், கடந்த காலத்தில் எமது சமூகத்தில் பிரிவினையை விதைத்த குறுகிய நோக்குடைய நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக் கொண்ட அரசியலை நிராகரிக்குமாறு நான் அனைவருக்கும் அழைப்புவிடுக்கிறேன். பெரும்பான்மை மக்களின் அபிலாசைகளை நாம் எப்போதும் மதிக்கவேண்டும். அப்போது தான் மக்களின் இறையாண்மை பாதுகாக்கப்படும்'.

எனவே கோத்தபாய ராஜபக்ஷ சிறுபான்மை இனங்களின் வாக்குகளைப் பெறுவதில் நாட்டம் காட்டுகின்ற பாரம்பரியப் பிரசார நடைமுறையிலிருந்து விலகி, அதற்குப் பதிலாக சிங்கள வாக்குகளைப் பிரதானமாக நாடி ஜனாதிபதியாகத் தெரிவானார் என்பதைக் காணக்கூடியதாக இருந்தது. அவ்வாறு செய்த பிறகு புதிய ஜனாதிபதி தனது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும், அதன் நேசக்கட்சிகளுக்கும் ஒரு சிறுபான்மைப் பலம் மாத்திரமே இருக்கின்ற பாராளுமன்றத்திற்கும் அவர் முகங்கொடுத்தார். பொதுஜன பெரமுனவின் பெருந்தலைவரான அவரது சகோதரர் எதிர்க்கட்சித் தலைவராக மாத்திரமே இருந்தார். அப்போது பதவியிலிருந்த பிரதமர் ஐக்கிய தேசியக் கட்சியினதும், சிறுபான்மைச் சமூகக்கட்சிகளினதும் ஆதரவின் ஊடாகப் பாராளுமன்றத்தில் ஒரு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டவராக விளங்கினார். 2020 ஆகஸ்டிலேயே அந்தப் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடியவடைய இருந்தது. 

அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தம்

2020 மார்ச் வரை பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாதவாறு புதிய ஜனாதிபதியை அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தம் கட்டுப்படுத்தியது. 19 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்தபிறகு பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவே. ஜனாதிபதி இப்போது ஒரு சம்பிரதாயபூர்வமான அரசதலைவர் மாத்திரமே என்று பல அரசியலமைப்பு நிபுணர்கள் அபிப்பிராயம் கூறினார்கள். ஆனால் 19 ஆவது திருத்தம் நடைமுறையில் இருந்தாலென்ன, நடைமுறையில் இல்லாவிட்டாலென்ன - கோத்தபாய போன்ற ஒரு வல்லமை மிக்க நபர் பதவியிலிருக்கும் போது நிறைவேற்றதிகார ஜனாதிபதிப்பதவி பலம்பொருந்தியதாகவும், துடிப்பானதாகவும் இருக்கமுடியும் என்பதை நிகழ்வுகள் நிரூபித்தன.

புதிய ஜனாதிபதி தனது சகோதரரைப் பிரதமராகக் கொண்டு தனது சொந்த அரசாங்கமொன்றை அமைப்பதில் இயல்பாகவே நாட்டங்கொண்டிருந்தார். ஆனால் உடனடியாகப் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாமல் அவரைத் தடுத்த அதே 19 ஆவது திருத்தம் பிரதமர் பதவியையும் பலமுடையதாக்கியிருந்தது. பதவியிலிருந்த பிரதமர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலமொன்றைக் கொண்டிருந்தால் அவரை நீக்கிவிட்டு வேறொருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு எந்த வழியுமே கிடையாது. கோத்தபாயவிற்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த சிறிசேன, 2018 அக்டோபரில் அவ்வாறு செய்ய முயற்சித்து பரிதாபத்திற்குரிய முறையில் தோல்விகண்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இந்தச் சூழ்நிலைகளின் கீழ் உருவாகியிருக்கக்கூடிய சச்சரவு ஜனாதிபதிப் பதவியுடன் ஒப்பிடும்போது ஜனாதிபதிப்பதவிக்கு எதிர்முகமாகப் பிரதமர் பதவியையும், பாராளுமன்றத்தையும் 19 ஆவது திருத்தம் உண்மையிலேயே பலம்பொருந்தியதாக்கியிருக்கிறதா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு அமிலப் பரீட்சையாக இருந்திருக்கும். தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்யாமல் இதைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க நினைத்தார் போல தோன்றியது. ஆனால் விக்கிரமசிங்கவின் உட்கட்சி எதிரியான சஜித் பிரேமதாஸவும், அவரது பரிவாரங்களும் தங்களது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்து கோத்தபாயவின் வேலையை இலகுவாக்கினர். இதனால் விக்கிரமசிங்கவின் நிலைமை பலவீனப்பட்டது. அவர் விட்டுக்கெர்டுகக் நிர்ப்பந்திக்கப்பட்டார். அதனால் மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராகக் கொண்டு தனது அரசாங்கத்தை உருவாக்குவதில் கோத்தாவிற்கு எந்தக் கஷ்டமும் இருக்கவில்லை. 

ஜனாதிபதி கோத்தபாய 19 ஆவது திருத்தத்தின் விளைவாக அமைச்சரவை அமைப்பதிலும் மட்டுப்பாடுகளுக்கு மீண்டும் ஒரு தடவை முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. அமைச்சர்களினதும், இராஜாங்க அமைச்சர்களினதும், பிரதியமைச்சர்களினதும் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் எப்போதுமே சிறிய அமைச்சரவையை விரும்பிய கோத்தபாயவிற்கு இது ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கவில்லை. எவ்வாறெனினும் இது அரசியல் நிர்பந்தங்கள் காரணமாகப் பெரும் எண்ணிக்கையானவர்களுக்குப் பதவிகளைக் கெர்டுத்து திருப்திப்படுத்த வேண்டிய நிலையிலிருந்த பிரதமருக்கு ஒரு பிரச்சினையாக இருந்தது. 16 அமைச்சரவை அமைச்சர்களையும், 38 இராஜாங்க அமைச்சர்களையும் கொண்ட ஒரு அரசாங்கத்திற்கு கோத்தபாய தலைமைதாங்கினார். சகோதரன் மஹிந்தவிற்கு நிதியமைச்சு உட்பட பல அமைச்சுப்பொறுப்புக்கள் கொடுக்கப்பட்டன. 

ஜனாதிபதி எந்தவொரு அமைச்சர் பதவியை வகிப்பதையும் 19 ஆவது திருத்தம் தடுக்கிறது. அதனால் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோத்தபாயவினால் தனது தலைமையிலான அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக முடியவில்லை. ஆனால் அதேவேளை அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இன்னொருவரை, மஹிந்தவைக் கூட கோத்தபாய நியமிக்கவில்லை. பதிலாக தங்களது குடும்பத்தில் எல்லோருக்கும் மூத்த சகோதரரான சமல் ராஜபக்ஷவை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக (முக்கியமான கடமைகள் எதையும் வழங்காமல்) நியமித்தார்.

ஆனால் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமித்தார். முறைப்படியான பாதுகாப்பு அமைச்சர் எவரும் இல்லாமலேயே ஜெனரல் குணரத்ன பாதுகாப்புச் செயலாளராகக் கடமையாற்றுகிறார். மேலும் கமால் குணரத்ன பல ஜனாதிபதி செயலணிகளின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். ஒரு வாதத்திற்குக் கூறுவதானால் இன்று இலங்கையின் மிகவும் பலம்பொருந்திய அரசாங்க உயரதிகாரியாக ஜெனரல் கமால் குணரத்னவே விளங்குகிறார் என்று கூறமுடியும். 

பாராளுமன்றத்தின் ஊடாகச் செயற்படுவதிலும் ஜனாதிபதி செயலகத்துடன் பணியாற்றுவதிலும் அணுகுமுறைகளில் ஜே.ஆருக்கும் கோத்தாவிற்கும் இடையில் இன்னுமொரு பிரத்யேகமான வேறுபாடு இருக்கிறது. ஜே.ஆர்.ஜெயவர்தன பாராளுமன்றத்திற்கு வெளியே அமைச்சரவையொன்றை நியமிக்கவில்லை. அதேவேளை அமைச்சரவைக்குச் சமாந்தரமான ஒரு அதிகார மையமாகப் பலம்பொருந்திய ஜனாதிபதி செயலகமொன்று இருப்பதையும் ஜே.ஆர் விரும்பவில்லை. அது ஏன்? 

இந்த விவகாரம் தொடர்பில் பேராசிரியர் ஜெயரட்ணம் வில்சன் கொடுத்த பிரத்யேகமான கேள்வியொன்றுக்குப் பதிலளித்த போது ஜே.ஆர், 'ஜனாதிபதியைச் சுற்றிவர இருக்கக்கூடிய ஆலோசகர்களை நியமிப்பதற்கு நான் தயங்குகிறேன் என்பதை நிச்சயம் உங்களுக்குக் கூறியாக வேண்டும். பிரதமரும், அமைச்சரவை அமைச்சர்களும் மாத்திரமே ஜனாதிபதியின் ஆலோசகர்களாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புவதே அதற்குக் காரணம். ஏனென்றால் பிரதமரும், அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர்களாக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்' என்று கூறினார்.

ஜே.ஆர்.ஜெயவர்தன இந்த நிலைப்பாட்டை 1978 மே 31 நடைபெற்ற இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரைநிகழ்த்துகையில் விளக்கிக்கூறினார். அவர் கூறியதாவது: 'எனது பதவிக்காலத்தில் நான் எனக்குப் பிறகு இந்தப் பதவிக்கு வருபவர்கள் பின்பற்றுவதற்குப் பெறுமதியான முன்னுதாரண நடைமுறைகளை வகுத்துக்கொள்ள விரும்புகிறேன். முதலில் நான் நடைமுறையிலிருக்கும் பாராளுமன்ற முறையை அதன் அதிகாரங்களைக் குறைக்காத முறையில் பேணிக்காத்து அமைச்சரவை ஊடாகவும், பாராளுமன்றம் ஊடாகவும் எப்போதும் நான் செயற்படுவேன். இரண்டாவது ஜனாதிபதியின் மீது செல்வாக்குச் செலுத்தக்கூடிய - அவரின் ஆட்கள் என்று கூறப்படக்கூடிய ஒரு குழுவை நான் உருவாக்க மாட்டேன்'.

கோத்தபாய ராஜபக்ஷவைப் பொறுத்தவைர அவரது நிர்வாக அணுகுமுறை இதற்கு முற்றிலும் எதிரானதாக இருக்கிறது. அவர் இப்போது ஒரு ஆறுமாதங்களுக்கும் அதிகமான காலமாகத்தான் ஜனாதிபதியாக இருந்துவருகிறார். இந்தக்கட்டத்தில, அரசியலமைப்பினால் விதந்துரைக்கப்பட்டிருப்பதன் பிரகாரம் பாராளுமன்றத்திலிருந்து பிரதமரையும், அமைச்சர்களையும் நியமித்திருக்கலாம். ஆனால் பெரிய கேள்வியொன்று எழுகிறது. பிரதமரும், அமைச்சர்களும் மெய்யான அதிகாரங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்களா? அல்லது வெறுமனே பெயரளவில் பதவிகளை வகிப்பவர்களாக இருக்கிறார்களா? அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்கான செய்தியாளர் மாநாடுகள் குறும்புத்தனமான பேச்சாளர்களால் விளையாட்டுத்தனமான அறிவிப்புக்கள் செய்யப்படுகின்ற கேலிக்கூத்தாக மாறியிருக்கிறது. முக்கியமான செய்தியறிக்கைகள் எல்லாம் ஜனாதிபதி ஊடகப்பிரிவிலிருந்து வருகின்ற நிலையில் அரசாங்கத்தகவல் திணைக்களம் ஒரு வெள்ளை யானையாக வந்துவிட்டது. 

Suratha English News | Basil Rajapaksa says he would support Gota

ஜனாதிபதியும் அவரது பிரதமரும் சகோதரர்கள். அவ்வாறு சகோதரர்களாக இருப்பதனால் ஒருவருடன் ஒருவர் முரண்பட்டுக்கொண்ட சிறிசேனவையும், விக்கிரமசிங்கவையும் போலன்றி இவர்களால் சுமூகமாகப் பணியாற்றக்கூடியதாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால் அரசியல் வதந்திகள் வேறு வகையாக அமைந்திருக்கின்றன. உயர்பதவிகளுக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற ஒரு ஆட்சிமுறைப்பாணியின் கீழ் பிரதமரும், அமைச்சர்களும் ஓரங்கட்டப்படுவதாக ஓர் அபிப்பிராயம் இருக்கிறது. ஒருங்கிணைப்புச் செயலகங்களும், செயலணிகளும் அமைச்சர்களையும் விட செல்வாக்குக் கூடியவர்களான ஓய்வுபெற்ற படையதிகாரிகளாலும், தற்போது சேவை செய்கின்ற படையதிகாரிகளாலும் நிரம்பிவழிகின்றன. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தையும் விட ஜனாதிபதியின் நம்பிக்கைக்குரிய - பாராளுமன்றத்திற்கு வெளியிலுள்ள ஒரு குழுவே நிர்வாகத்தில் செல்வாக்குடையதாக விளங்குகின்றது என்ற ஐயுறவு நிலவுகிறது. 

இந்தத் திருப்தியற்ற நிலைவரம் கொவிட் - 19 தொற்றுநோய்ப் பரவலினாலும், பாராளுமன்றத்தின் நெருக்கடியான நிலையாலும் மேலும் மோசமாக்கப்பட்டிருக்கிறது. பழைய பாராளுமன்றத்தை எந்தளவு விரைவாகத் தன்னால் கலைக்கமுடியுமோ அந்தளவு விரைவாக ஜனாதிபதி இவ்வருடம் மார்ச் 2 இல் கலைத்தார். ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்ட புதிய தேர்தல்கள் கொவிட் - 19 தொற்றுநோய்ப்பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டன. புதிய தேர்தல்கள் ஜுன் 20 இற்கு நிர்ணயிக்கப்பட்டன. 

புதிய பாராளுமன்றம் கூடுவதற்கான மூன்றுமாத காலக்கெடுவிற்குள், அதாவது ஜுன் 2 அல்லது அதற்கு முன்னதாகக் கூடமுடியவில்லை. ஆனால் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு வெளியிட்ட மார்ச் 2 வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்து, அந்தப் பாராளுமன்றத்தை மீண்டும் செயற்பட வைக்க மறுத்தார். ஒரு நெருக்கடி நிலையைக் கையாளுவதற்காக அரசியலமைப்பின் 70(6) ஆவது சரத்தின் கீழ் விசேட நோக்கத்திற்காகப் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கும் அவர் தயங்கினார். 

அரசியலமைப்பு நெருக்கடிப் பீதி 

ஜுன் 2 இற்குப் பிறகு அரசியலமைப்பு நெருக்கடியொன்று மூளும் என்று பயந்த பிரஜைகள் பலரும், அரசியல் கட்சிகள் சிலவும் உயர்நீதிமன்றத்தில் 8 அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்தன. 10 நாட்கள் விசாரணைகளுக்குப் பிறகு ஏகமனதான தீர்மானமாக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 5 நீதியரசர்கள் கொண்ட அமர்வு 8 அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் விசாரணை செய்ய முடியாதென்று தள்ளுபடி செய்தது. அதற்கு எந்தக் காரணமும் கூறப்படவில்லை. அதைத் தொடர்ந்து புதிய தேர்தலுக்கான திகதியாக ஆகஸ்ட் 5 ஐத் தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ணயித்தது. கொரோனா வைரஸ் மீண்டும் பரவத்தொடங்குமானால் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியுமா என்பதில் இன்னமும் சந்தேகங்கள் நிலவுகிறது. சில மாவட்டங்களில் மீண்டும் தொற்றுநோய் பரவுமானால் கட்டங்கட்டமாகத் தேர்தலை நிச்சயமாக ஆணைக்குழு நடத்தும் என்றும் ஊகிக்கப்படுகிறது.

தேர்தல்கள் நடத்தப்பட்டுப் புதிய பாராளுமன்றம் கூடுமானால் அது நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லதாகவே இருக்கும். ஜுன் 2 இல் பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படாவிட்டால் அரசியலமைப்பை மீறுவதாக அமையும் என்ற ஒரு இருண்ட சூழ்நிலை பற்றி அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் மனுதாரர்களுக்காக ஆஜரான சட்டத்தரணிகள் குறிப்பிட்டிருந்தார்கள். அந்தத் திகதி கடந்துபோனது. பாராளுமன்றமும் இல்லை. இன்று பாராளுமன்றமொன்று இல்லாமல் நாடு இயங்கிக்கொண்டிருக்கிறது. ஜனாதிபதி ராஜபக்ஷ பெருமளவிற்கு நெகிழ்வுத்தன்மையைக் காட்டியிருந்தால் தற்போது நிலவுகின்ற பெருமளவு குழப்பநிலையையும், நிச்சயமற்ற நிலைமையையும் தவிர்த்திருக்க முடியும். ஆனால் அவர் தனது சொந்தக் காரணங்களுக்காக விட்டுக்கொடுக்காமல் செயற்பட்டு வருகிறார். 

இந்த நீண்ட கட்டுரையில் முதலாவது பகுதியிலும், இரண்டாவது பகுதியிலும் குறிப்பிட்டதைப்போன்று பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் அந்தப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைக் கொண்டிராத காபந்து அமைச்சரவையினதும், ஒரு பிரதமரினதும் உதவியுடன் நாட்டைப் பலம் பொருந்திய ஜனாதிபதியொருவர் நிர்வகிப்பதைக் காண்கிறோம். சட்டம் இயற்றும் மன்றம் வெற்றிடமொன்றில், சட்டபூர்வமான அதிகாரபீடமாகக் கடந்த வருடம் 52 சதவீத ஆணையுடன் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி மாத்திரமே இருக்கிறார். மேலும் தற்போதைய சூழ்நிலைகளின் கீழ் ஜனாதிபதி கோத்தபாயவின் ஆட்சிமுறைப்பாணி ஜனாதிபதியின் கீழ் அதிகாரங்கள் மத்தியமயப்படுத்தப்படுவதற்கு வழிவகுத்திருக்கிறது.

தற்போதைய சூழ்நிலையில் ஒரு விசித்திரத்தைக் காணக்கூடியதாக இருக்கிறது. 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து, பிரதமரினதும் பாராளுமன்றத்தினதும் அதிகாரங்களை அதிகரித்தது. ஆனால் பிரத்யேகமான சூழ்நிலைகளின் விளைவாக கோத்தபாய ராஜபக்ஷ பாராளுமன்றத்தைக் கூடக் கொண்டிராத இலங்கையின் முதலாவது தனியான நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக விளங்குகிறார். இதில் அவர் 1978 இல் ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய ஜே.ஆர்.ஜெயவர்தன நினைத்துப் பார்த்திருக்காத அதிகார அளவையும் தாண்டிச்செல்லக்கூடும்.

(முற்றும்)

ஜே.ஆர். & கோத்தா இரு நிறைவேற்று ஜனாதிபதிகளின் ஒரு கதை - பகுதி 2

ஜே. ஆர். & கோத்தா ; இரு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளின் ஒரு கதை 1