விளையாட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பிலான பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்  குமார் சங்கக்கார, சுமார் 09 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர், இன்று (02.07.2020)  அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ணக் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக, அவர் அழைக்கப்பட்டிருந்தார். 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்  குமார் சங்கக்கார, இன்று காலை 9.00 மணிக்கு விளையாட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பிலான பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிற்கு சென்றிருந்ததோடு, அங்கிருந்து 6.00 மணிக்கு அவர் வெளியேறியுள்ளார். 

இந்நிலையில், இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் உபுல் தரங்க, அந்தப் பிரிவில் 3 மணிநேரம், நேற்று (01.07.2020) சாட்சியமளித்துள்ளார்.

இதேவேளை, அதற்கு முன்னர், இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா, மேற்படி குற்றச்சாட்டுகள் தொடர்பில், நேற்றுமுன்தினம் (30.062020) சாட்சியமளித்துள்ளார்.

2011 உலகக்கிண்ண இறுதி கிரிக்கெட் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றுள்ளதென பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்த முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, அதுதொடர்பில் சாட்சியமளித்ததுடன், 24 ஆவணங்களையும் விசேட பொலிஸ் பிரிவிடம் கையளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையிலேயே தொடர் வாக்குமூலங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.