கங்கையில் தவறி விழுந்த கைத்தொலைபேசியை எடுக்க முற்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரை முதலையொன்று இழுத்துச் சென்ற சம்பவம் மாத்தறை, நில்வளா கங்கையின் மாகல்கொட நீர் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரியான 54 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தை ஒருவரே குறித்த சம்பவத்தில் காணாமல் போயுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, .
நேற்றைய தினம் (01) இரவு 10.30 மணியளவில் குறித்த பொலிஸ் அதிகாரி உட்பட சிலர் மாத்தறை, நில்வளா கங்கையில் மாகல்கொட நீர் நிலையத்திற்கு அருகில் நின்றிருந்த போது அதில் ஒருவரின் கைப்பேசி தவறி கங்கையில் விழுந்துள்ளது.
அதனை எடுப்பதற்காக குறித்த பொலிஸ் அதிகாரி கங்கையில் இறங்கியுள்ளார். பின்னர் தன்னை முதலையொன்று தன்னை கடிப்பதாக அவர் கூச்சலிட்டுள்ளார்.
இரவு நேரம் என்பதால் உடனடியாக அவருக்கு உதவ எவரும் முன்வரவில்லை. இதனையடுத்து பொலிஸ் அதிகாரி கங்கையில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில், காணாமல்போன பொலிஸ் அதிகாரியை தேடி அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடுதல் நடவடிக்கையினை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் திஹகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.