(எம்.ஆர்.எம்.வஸீம்)

தனது இயலாமையை மறைப்பதற்காகவும் நாட்டு பிரச்சினையை மறைப்பதற்காகவும்  கிரிக்கெட் வீரர்களுடன் அரசியல் செய்யவேண்டாம் என அரசாங்கத்தை கேட்கின்றோம்.

அத்துடன் கிரிக்கெட்டை அரசியலாக்க முயற்சிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக  கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றுபட முன்வரவேண்டும். வீர்ரகளை பாதுகாக்க முன்வருமாறு நாமல் ராஜபக்ஷ் உட்பட அதன் குழுவினருக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்  என ஐக்கிய மக்கள் சக்தி தேசியப்பட்டியல் உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி காரியாலயத்தில்  இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, 2011 உலக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கைக்கு சிறந்த நற்பெயரை பெற்றுத்தந்த விளையாட்டு வீரர்களை பழிவாங்க மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பாக நாங்கள் கவலையடைகின்றோம். 2011இல் இடம்பெற்ற சம்பவம் ஏன் திடீரென வெளிப்பட்டது. அரசாங்கம் குறுகிய நோக்கத்துக்காக விளையாட்டு மற்றும் வீரர்களுடன் அரசியல் செய்யவேண்டாம் என கேட்கின்றோம். தங்களின் இயலாமை மற்றும் நாட்டு பிரச்சினைகளை மூடி மறைப்பதற்கு விளையாட்டை அரசியலாக்க முயற்சிக்கும் நடவடிக்கைக்கு எதிராக கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றுபடவேண்டும்.

அத்துடன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஹோமாக விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பாக மக்களின் எதிர்ப்பு வெளியானது. கொராேனா வைரஸ் தொற்று ஏற்பட்டு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியுற்றிருக்கும் சந்தர்ப்பத்தில் தற்போதைக்கு இது பொருத்தமில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, மஹேல, சங்கக்கார, அரவிந்த போன்ற திறமையான வீரர்கள் இந்த மைதானம் அமைப்பதற்கான தங்களின் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

அரசியல் பழிவாங்கல்களில் உச்ச நிலையில் இருக்கும் குழுவொன்றே இன்று நாட்டை நிர்வகிக்கின்றது என்பதை இந்த சம்பவத்திர் இருந்து புரிந்துகொள்ளலாம். தேர்தல்காலத்தில் இந்த வீர்ரகளுக்கு எதிராக செயற்படுவது அரசாங்கத்துக்கு நன்மையாக அமைந்துவிடும் என மஹிந்தானந்த போன்றவர்கள் நினைத்தார்கள். ஆனால் அது இன்று அரசாங்கத்துக்கே தடையாக மாறி இருக்கின்றது.

மஹேல, சங்கக்கார போன்றவர்கள் எமது நாட்டுக்கு கொண்டுவந்திருக்கும் நற்பெயருக்கு விலை மதிக்க முடியாது. யாராவது ஒரு நபர் உண்மையான நோக்கத்தில் செயற்பட்டால், அந்த நபரை இல்லாமலாக்குவது எமது நாட்டின் கலாசாரமாகி இருக்கின்றது. அதனால் வீரர்கள் மீது கை வைக்கவேண்டாம். அவர்களுடன் அரசியல் செய்யவேண்டாம் என அரசாங்கத்தை கேட்கின்றோம். இந்த நிலைமை தொடர்ந்தால் பாரிய பிரச்சினைக்கு நாங்கள் முகம்கொடுக்க நேரிடும். வீர்ரகள் விளையாட அச்சப்படுவார்கள். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை விளையாட விடமாட்டார்கள்.

அத்துடன் எமது அரசாங்க காலத்தில் நாங்கள் ஊழல் தொடர்பாக புதிய சட்டம் ஒன்றை அங்கிகரித்திருக்கின்றோம். அதனால் பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிக்காமல் நாட்டின் சட்டத்தை செயற்படுத்துமாறு கேட்கின்றோம். ஊழல் மோசடி காரர்களை நாங்கள் விளையாட்டுத்துறையில் இருந்து நீக்கிநோம்.

மேலும் குமார் சங்கக்கார உலக கிரிக்கெட் சபை தலைமைத்துவத்துக்கு போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு மறுபக்கத்தில் போட்டியிடுபவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு, எமது அமைச்சர் ஒருவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தாரோ என்ற சந்தேகம் எமக்கு இருக்கின்றது. தேர்தல் ஒன்று இடம்பெற இருக்கும் நிலையில் இவ்வாறான கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என நாங்கள் அரசாங்கத்தை கேட்கின்றோம். 

எனவே அரசியல் பேதங்களை மறந்து கிரிக்கெட் விளையாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமைக்கு எதிராக போராட முன்வரவேண்டும். வீர்ரகளை பாதுகாக்க முன்வருமாறு நாமல் ராஜபக்ஷ் உட்பட அதன் குழுவினருக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.