தென்னாப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த மூன்று மாதங்களில் 360 க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.

குறிப்பாக அவை நீர்நிலைகளுக்கருகே இறந்து விழுவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய நோய் ஏதாவது அந்த யானைகளுக்கு இருக்குமா என்பதை அறிவதற்காக, அவற்றிற்கு உடற்கூறு ஆய்வு செய்யுமாறு அறிவியலாளர்கள் அரசை வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால், கொரோனா காரணமாக அவற்றிற்கு உடற்கூறு ஆய்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

ஒகவாங்கோ டெல்டா பகுதியில் மே மாதம் தொடக்கத்தில் இருந்து 350 க்கும் அதிகமான யானைகளின் இறந்த உடல்களை தானும் தனது சகாக்களும் கண்டுள்ளதாக வைத்தியர் நியால் மெக்கேன் என்பவர் தெரிவித்துள்ளார்.

முகம் கண்ணில்படும்படி யானைகள் கீழே விழுந்து கிடக்கும் நிலை உயிருடன் இருக்கும் யானைகள் வட்ட வடிவமான பாதையில் நடப்பது ஆகியவை அந்த யானைகளின் நரம்பு மண்டலங்களை ஏதோ தாக்குகிறது என்றும் அவர் கூறுகிறார்.

யானைகளின் இந்த இறப்புகளுக்கான மூலம் எது என்பதை அறியாமல் இத்தகைய நோய் மனிதர்களுக்கும் பரவும், குறிப்பாக நீர் மற்றும் மண் வழியாகப் பரவும், என்பதையும் மறுக்க முடியாது என்கிறார்.

வன உயிர்கள் பாதுகாப்பை பொறுத்தவரை இது மிகவும் பேரழிவுதான். அதேசமயம், இது மக்களுக்கான பொது சுகாதாரப் பிரச்சினையாக மாறும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

போட்ஸ்வானாவில் 130,000 ஆபிரிக்க யானைகள் உள்ளன. கண்டத்தின் வேறு எந்த நாட்டையும் விட அதிகமாகும்.

சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஒகாவாங்கோ டெல்டா பகுதியில் ஆபிரிக்க யானைகளில் சுமார் 10 வீதம் உள்ளன.