(ஆர்.யசி)

இரு நாடுகளுக்கு இடையில் முன்வைக்கப்படும் உடன்படிக்கைகளை கையாளும் வேளைகளில் இராஜதந்திர ரீதியில் பக்குவமாக செயற்பட வேண்டும். எம்.சி.சி உடன்படிக்கையை அரசாங்கம் நிராகரிக்கிறது என்பதற்காக உடன்படிக்கையை கிழித்தெறிய முடியாது என அரசாங்கம் கூறுகின்றது. இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படாது போனால் அமெரிக்கவின் 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்காது போகும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன கூறுகின்றார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று அரச  தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

சகத்திராண்டு சவால்கள் கூட்டுத்தாபனத்துடன் (MCC) கைச்சாத்திடுவதற்கான உத்தேச உடன்படிக்கை தொடர்பில் மதிப்பீடு செய்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக பேராசிரியர் லலித ஸ்ரீ குணவர்தன அவர்களின் தலைமையின் நியமிக்கப்பட்டுள்ள குழு தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. பிரதமர் மூலமாக  இந்த அறிக்கை அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் அடங்கியுள்ள சிபாரிசுகள் தொடர்பாக அமைச்சரவையின் அனைத்து அங்கத்தவர்களினதும் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு கருத்தை முன்வைப்பார்கள்.

அடுத்த வாரம் இந்த விடயங்கள் குறித்து மீண்டும் கலந்துரையாடப்படும்.இது குறித்து நேற்று  அமைச்சரவையில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது,  குறிப்பாக  முன்னைய அரசாங்கத்தினால் எம்.சி.சி உடன்படிக்கை கைச்சாத்திட நடவடிக்கை எடுக்கப்பட்ட போது அதற்கான மிகப்பெரிய எதிர்ப்பு நாட்டில் எழுந்தது. நாம் இந்த உடன்படிக்கை குறித்து கருத்தில் கொண்டு செயற்பட்டு வருகின்றோம். அதன்போது இந்த நாட்டின் அரசியல் அமைப்பினை, சட்டத்திற்கு எதிரான எந்தவொரு உடன்படிக்கையையும் நாம் கைச்சாத்திட மாட்டோம். அமெரிக்காவாக இருந்தாலும், இந்தியா, சீனாவாக இருந்தாலும் நாம் உடன்படிக்கைகளை ஏற்றுகொள்ள மாட்டோம். எதிர்க்கட்சிகள் கூறுவதை போலவோ சமூக ஊடகங்களில் எழுதுவதை போல் எந்தவொரு நாட்டுடனும் செய்துகொள்ளும் உடன்படிக்கையானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தும் உடன்படிக்கை செய்துகொள்ள முடியாது.

அதற்காக உடன்படிக்கையை கிழித்தெறிவது, குப்பை தொட்டியில் போடுவது என்ற கதையெல்லாம் சிறுபிள்ளை தனமாக கருத்துக்கள். உடன்படிக்கை ஒன்றை நிராகரிக்கும் விதத்தில் நாம் அதனை கையாள்கின்றோம். இது நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எம்.சி.சி உடன்படிக்கை எந்த சந்தர்ப்பத்திலும் கைச்சாத்திடப்படாது. எம்.சி.சி உடன்படிக்கை மட்டுமல்ல எந்தவொரு உடனடிக்கையும் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எதிராக செய்ய முடியாது. அதற்காக இரு நாடுகளின் இராஜதந்திர நகர்வுகளை உடனடியாக முறிந்துக்கொள்ள முடியாது. உடனடியாக எம்மால் உடன்படிக்கையை கிழித்தெறிய முடியாது. பொறுப்புடன் செயற்பட்டாக வேண்டும்.

அதனால் தான் சகல தரப்பின் கருத்துக்களையும் கொண்டு நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி தீர்மானம் எடுத்துள்ளார். பிரதான உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை. அதனை நாமும் ஏற்றுக்கொள்கின்றோம். சோபா, எக்ஸா உடனபடிக்கையை மட்டுமே முன்னைய அரசாங்கம் கைச்சாத்திட்டது. அது குறித்தும் நாம் வெளிப்படுத்துவோம். இந்த எம்.சி.சி உடன்படிக்கை கைச்சாத்திடப்படாவிட்டால் எமக்கு ஏற்படும் நட்டம் ஒன்று மட்டுமே. அவர்கள் எமக்கு கொடுக்கவிருக்கும் 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி கிடைக்காது போகும்.

அத்துடன் எம்.சி.சி உடன்படிக்கைகை மேம்படுத்த செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் மூலமாக பணம் கிடைத்ததாக கூறப்படுகின்றது. அது குறித்து கணக்கறிக்கை மூலமாகவே கண்டறியப்பட வேண்டும். அதுவும் சாதாரண கணக்கறிக்கைகளில் அவை உள்வாங்கப்பட்டிருக்காது. எனவே தடயவியல் கணக்கறிக்கைகளின் மூலமாகவே இவற்றை கண்டறிய வேண்டும்.