Published by T. Saranya on 2020-07-02 15:04:11
(இராஜதுரை ஹஷான்)
இலங்கையினை சர்வதேச மட்டத்தில் நல்லாட்சி அரசாங்கமே நெருக்கடிக்குள்ளாக்கியது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கியமை தவறான செயற்பாடாகும். எம். சி. சி ஒப்பந்தம் தொடர்பிலான பேச்சுவார்த்தை இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.
அமெரிக்காவை பகைத்துக் கொள்ள வேண்டிய தேவையும், எமது நாட்டின் இறையாண்மையை விட்டுக் கொடுக்க வேண்டிய தேவையும் அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
திருகோணமலை துறைமுகத்தை கைவசப்படுத்தும் அடிப்படையிலே எம். சி. சி ஒப்பந்தம் அபிவிருத்திக்கான நிதி வழங்கல் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டன நாட்டக்கு எதிரான ஒப்பந்தங்களை செய்துக் கொள்ள வேண்டிய தேவை தற்போதைய அரசாங்கத்துக்கு கிடையாது.
கடந்த அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் ஏற்படுத்தியுள்ள சிக்கல் நிலையை இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து தீர்வு காணவே முயல்கிறோம்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கப் பெறும் என்பதை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரசமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ நன்கு அறிவார்கள்.
இதன் காரணமாகவே இவர்கள் பொதுத்தேர்தலுக்கு எதிராக நீதிமன்றில் 11 மனுக்கல் தாக்கல் செய்தார்கள். அனைத்து சூழ்ச்சிகளையும் எதிர்க் கொண்டு பொதுஜன பெரமுன் நிலையான அரசாங்கத்தை அமைக்கும் என்றார்.