தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிரசாரக் கூட்டமும், வேட்பாளர்கள் அறிமுக கூட்டமும் திருகோணமலை நகரசபையின் முன்னாள் தலைவரும், மாவட்ட செயலாளருமான க.செல்வராஜா (சுப்ரா) தலைமையில் நேற்று முன்தினம் (30) மாலை ஐந்து மணியளவில் திருக்கோணமலையின் வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோவிலடியில் நடைபெற்றது.
இதன் பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து தெரிவிக்கையில்,
ஆவணி மாதம் 05 ஆம் திகதி எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தல் மிகவும் அதி முக்கியம் வாய்ந்த ஒரு தேர்தல் என நான் கருதுகின்றேன்.
இந்த தேர்தல் முடிவடைந்து புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்ட பிறகு ஒரு புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படவிருக்கின்றது. அந்தக்கடமை, அந்தக்கருமம் சென்ற பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை. 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் ஆடி மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திட்ட பிறகு நிறைவேற்றப்பட்ட 13 ஆவது அரசியல் சாசனத்தை தொடர்ந்து அதுதான் முதல் முறையாக அரசியல் சாசன ரீதியாக ஒரு திட்டத்தை வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி பிரேமதாசவின் காலத்தில், ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கா காலத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில்விக்ரமசிங்க ஆகியோர் காலத்தில் இந்த அரசியல் சாசனத்தை முன்னிருத்தி, முதன்மைப் படுத்தி ஒரு அதிஉச்ச அதிகார தீர்வுத்திட்டத்தை உருவாக்கி அதன் மூலமாக வடகிழக்கில் வாழுகின்ற தமிழ் பேசுகின்ற மக்களுடைய உரிமை பிரச்சினை,தேசியப்பிரச்சினைக்கு ஒரு முடிவு கண்டு, அதை தீர்க்கவேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 30 ஆண்டுகலாக பல கருமங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இந்தக் கருமங்களில் நாங்கள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். புதிய பாராளுமன்றம் கூடுகின்றபொழுது இந்த சகல கருமங்களும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, ஒரு அதிஉச்ச அதிகாரபகிர்வுத் திட்டத்தின் மூலமாக மாற்றியமைக்கமுடியாத, நிலைத்து நிற்கக்கூடிய அதிகாரபகிர்வுத்திட்டத்தின் மூலமாக ஒருமித்த நாட்டுக்குள், பிளவுபடமுடியாத நாட்டுக்குள், பிரிக்க முடியாத நாட்டுக்குள் அதிஉச்ச அதிகார பகிர்வுத் திட்டத்தின் அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என்பது எமது விருப்பம்.
எல்லோரும் நிறைவேற்ற வேண்டும் என்று ஏற்றுக்கொண்ட ஒரு விடயம். ஆனபடியால் எந்த அரசாங்கம் வந்தாலும் இந்த விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு விடயம்.
அதை நிறைவேற்றுவது தான் முக்கியம். அதை நிறைவேற்றுவதற்கு இந்தத் தலைவர்கள் அனைவரும் தங்களுடைய வாக்குறுதிகளை தந்திருக்கின்றார்கள். அவை அனைத்தும் பதிவில் இருக்கின்றது.
சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதிகளை கொடுத்திருக்கின்றார்கள். அவைகள் எல்லாம் பதிவில் இருக்கின்றது. இதை பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தி வெளிக்கொண்டு வந்திருக்கின்றோம். இதை மறுக்கமுடியாது. 1988ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த ஏறத்தாழ 30 வருட காலமாக பல கருமங்கள் நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி பிரேமதாசவின் காலத்தில், ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கா காலத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச காலத்தில் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் காலத்தில் பல கருமங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இன்றைக்கு ஒரு அரசியல் தீர்வை அடையக்கூடிய நிலையினை நாங்கள் அடைந்திருக்கின்றோம்.
நான் கூறிய கட்சியினுடைய தலைவர்கள் அதை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமீபத்தில் சஜித் பிரேமதாச எல்லோரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். ஆகவேதான், இவைகள் தான் உள்ளடக்கப்பட்டு தீர்வாக அரசியல் சாசன ரீதியாக தரவேண்டும், அமுல் படுத்தவேண்டும்.
இன்றைக்கு இந்த நாட்டில் புதிய அரசியல் சாசனம் ஏற்பட வேண்டும் என்பதனை எல்லோரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். இதற்காக நாங்கள் கடந்த 80 வருடங்களாக, பண்டாரநாயக்கா - செல்வா ஒப்பந்த காலம் தொடக்கம் நாங்கள் உழைத்து வந்திருக்கின்றோம்.
1827ஆம் ஆண்டு கொடக்கம் இன்றுவரையில் கிழக்கு மாகாணத்தின் புள்ளி விபரங்கள் சமீபத்தில் சென்றவருடம் எங்கள் மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட பல அபிவிருத்திதிட்டங்கள். இவை எல்லாவற்றையும் உள்ளடக்கி ஒரு வெளியீடு ஒன்று செய்துவைக்கவிருக்கின்றோம்.
அது விரைவில் வெளிவரும். அதை நீங்கள் படிக்கவேண்டும். அதன்மூலமாக எங்களுடைய நிலைப்பாட்டையும், எதிர் வருகின்ற பாராளுமன்ற தேர்தலின் முக்கியத்துவத்தையும் நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள்.
நாங்கள் ஒரு சிறுபான்மை இனம். ஆனால், நாங்கள் சிறுபான்மை இனமாக இருந்தாலும்கூட, இந்த நாட்டில் சில மாகாணங்களில் கலாச்சார ரீதியாக, மொழி ரீதியாக நாங்கள் வாழுகின்ற பிரதேசங்களில், நாங்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற பிரதேசங்களில் எமது இறையாண்மையின் அடிப்படையில் எமது உள்ளக சுயநிர்ணய உரிமைகள் அடிப்படையில் ஜக்கிய நாடுகளின் சபையினால் இலங்கை அரசாங்கத்தின் சம்மதத்துடன் நிறைவேற்றப்பட்ட அரசாங்க சிவில் உரிமைகள் சம்மந்தமான ஒப்பந்தம், சமூக, பொருளாதார, கலாச்சார சம்மந்தமான ஒப்பந்தம் இந்த ஒப்பந்தங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் எமக்கு அரசியல் தீர்வு, கிடைக்கப்படவேண்டும்.
இதுதான் எங்கள் நிலைப்பாடு. இதனை எங்களுடைய மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். நாங்கள் நியாயமற்ற ஒன்றைக்கேட்கவில்லை, அடிப்படை இல்லாத ஒன்றைக்கேட்கவில்லை. பிரிபடமுடியாத நாட்டுக்குள் உறுதியாக நிலைத்து நிற்கக் கூடிய அதி உச்ச அதிகாரப் பகிர்வைக் கொண்டு ஒரு அரசியல் தீர்வைத் தான் நாங்கள் கேட்கின்றோம்.
ஆனபடியால், நாங்கள் கேட்கின்ற கோரிக்கையை பல நாடுகளில் பல பிராந்தியங்களில் எமது கலாச்சாரங்களை பின்பற்றுகின்ற மக்கள் வாழ்ந்து வருகின்ற நாடுகளில் அப்படித்தான் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர். இது நிறைவேற்றப்பட வேண்டும். நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளோம்.
பல கருமங்களை நிறைவேற்றியிருக்கின்றோம். பல கருமங்களை இந்த நாட்டினுடைய அரசியல் தலைவர்கள், கட்சியினுடைய தலைவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டிருக்கின்றது. சர்வதேச சமூகத்திற்கு நாட்டின் தலைவர்கள் பலவிதமான வாக்குறுதிகளை கொடுத்திருக்கின்றார்கள்.
ஆனபடியால் இவையெல்லாம் நிறைவேற்றப்பட்டு அரசியல் சாசனத்திற்குள் உள்ளடக்கப்பட்டு தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும். தேர்தல் முடிந்த பின்பு எந்த கட்சி ஆட்சியைக் கைப்பற்றினாலும் இந்தக் கருமங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.
அதற்காகதான் நாங்கள் முயற்சிக்கின்றோம். அதற்காகத் தான் தேர்தலில் எங்களது மக்களை விசேடமாக தமிழ் மக்களை, தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்கும் படியாக மிகவும் அன்பாக கேட்டுக் கொள்கின்றோம்.
ஒருபலம் வாய்ந்த அணியாக நாங்கள் இருப்போம். ஒரு பலம் வாய்ந்த அணியாக நாங்கள் இருக்கின்ற பொழுது உள்ளூரில் உள்ள கட்சிகளும், தலைவர்களும், அரசாங்கமும், சர்வதேச சமூகமும் எங்களுடைய மக்களுடைய ஆணையை உணர்ந்து ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு எல்லோரும் தங்களுடைய உதவிகளை தரவேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். அதற்காக நாங்கள் உழைப்போம். அது தான் எங்களுடைய நிலைப்பாடு.
தமிழ் மக்கள் சார்பில் ஒரு பலம் வாய்ந்த அணி பாராளுமன்றம் செல்ல வேண்டிய முக்கிய அவசியம், ஒருமித்து ஒற்றுமையாக தமிழ் மக்கள் தங்களுடைய வாக்குகளை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அளித்து அதன் மூலமாக இதுதான் எங்களுடைய நிலைப்பாடு என்ற செய்தியை நாட்டிற்கும் உலகத்திற்கு தெளிவுபடுத்திக்காட்ட வேண்டும். அதை நீங்கள் செய்ய வேண்டும் என்று மிகவும் அன்பாகவும் வினயமாகவும் நான் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM