சர்வதேச கிரிக்கட் சபையின் தலைவர் பதவியில் இருந்து சஷாங்க் மனோகர் விலகியுள்ளார்.

அவரது நான்கரை ஆண்டு கால பதவிக்காலம் முடிவுக்கு வந்ததுள்ள நிலையில் சஷாங்க் மனோகர், இன்று குறித்த பதவியில் இருந்து விலகியுள்ளார்.

நேற்று (01.07.2020) நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் சபைக்  கூட்டத்தில் பிரதித் தலைவர் இம்ரான் கவாஜா தேர்தல் நடைபெறும் வரை தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்ததால் ஷசாங்க் மனோகர் விலகியுள்ளார். 

எதிர்வரும் வாரம் சர்வதேச கிரிக்கெட் சபைத் தலைவர் தேர்தலுக்கான நடைமுறை குறித்து ஐசிசி அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) தலைவராக இந்திய கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் சஷாங்க் மனோகர் கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பரில் இருந்து பணியாற்றி வந்தார். 

இதேவேளை, 3 ஆவது தடவையாகவும் தலைவர் பொறுப்பில் நீடிக்க விரும்பவில்லை என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில் பதவிக் காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து பொறுப்பில் இருந்து சஷாங்க் மனோகர் நேற்று விலகினார்.

ஐ.சி.சி.யின் இடைக்கால தலைவராக செயல்படும் இம்ரான் கவாஜா, இங்கிலாந்தின் காலின் கிரேவ், இந்தியாவின் சவுரவ் கங்குலி உள்ளிட்டோரின் பெயர்கள் அடுத்த ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு பிரேரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.