(எம்.மனோசித்ரா)

நிர்வாக முகாமைத்துவத்திற்காக மாத்திரமே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவிற்கு கையளிக்கப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. அவ்வாறெனில் நிர்வாக முகாமைத்துவத்தைக் கூட முன்னெடுக்க முடியாதளவிற்கு அரசாங்கம் செயற்றிறனற்றுப் போயுள்ளதா என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கேள்வியெழுப்பினார்.

மேலும், எம்.சி.சி. ஒப்பந்தத்தை இரத்து செய்வது இலகுவானதல்ல என்று அரசாங்கம் கூறுகிறது. அவ்வாறெனில் ஜனாதிபதித் தேர்தலின் போது இதனை இரத்து செய்வதாக ஏன் மக்களுக்கு போலியான வாக்குறுதியளிக்கப்பட்டது என்பதை அரசாங்கம் கூற வேண்டும் என்றும் டில்வின் சில்வா கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

கொழும்பு துறைமுகம்
உண்மையில் ராஜபக்ஷக்கள் நாட்டை நேசிப்பவர்கள் அல்ல. நாட்டை அந்நியர்களுக்கு விற்றேனும் தாம் வாழ வேண்டும் என்று எண்ணுபவர்களாவர். அதன் காரணமாகவே தற்போது  அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு இலங்கை கீழ்படிந்து செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முழுமையாக இந்தியாவிற்கு விற்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால் அதனை மறைத்து நிர்வாக முகாமைத்துவத்திற்காக மாத்திரமே இந்தியாவிடம் கிழக்கு முனையம் வழங்கப்படுவதாகக் கூறி மக்களை அரசாங்கம் ஏமாற்றுகிறது.

வெளிநாடொன்றில் உதவி இன்றி நிர்வாக முகாமைத்துவத்தை முன்னெடுப்பதற்குக் கூட அரசாங்கம் திறனற்றுப் போயுள்ளதா? நிர்வாக முகாமைத்துவத்திற்கான அனைத்து வசதிகளும் திறன்களும் இலங்கையிடம் காணப்படுகின்ற போதிலும் அதனை இந்தியாவிற்கு வழங்குவது பாரதூரமானதாகும். இதற்கு துறைமுக ஊழியர்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ள போதிலும் அதனை உதாசீனம் செய்து அரசாங்கம் தன்னிச்சையாக தீரமானித்துள்ளது.

எம்.சி.சி. ஒப்பந்தம்
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ராஜபக்ஷக்களின் பிரதான பேசுபொருளாக மில்லேனியம் சவால் (எம்.சி.சி.) ஒப்பந்தமே காணப்பட்டது. ஆனால் தற்போது அதனை இரத்து செய்வதற்கான செயற்பாடுகள் அரசாங்கத்தால் திட்டமிட்டு பிற்போடப்படுகின்றன. ஆட்சிக்கு வந்தவுடன் எம்.சி.சி. ஒப்பந்தத்தை கிழித்தெரிவதாகக் கூறியவர்கள் தற்போது அதில் 30 வீதம் மாத்திரமே குறைபாடுகள் உள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். அரச தரப்பினர் சிலர் இது பற்றி பேசுவதையே கைவிட்டுள்ளனர்.

தேர்தலுக்கு முன்னர் கோத்தாபய ராஜபக்ஷ எம்.சி.சி.யில் ஒருபோதும் கையெழுத்திடப் போவதில்லை என்று கூறினார். ஆனால் ஜனாதிபதியானதன் பின்னர் ஒப்பந்தம் பற்றி ஆராய்வதற்கு குழுவினை நியமித்துள்ளார். அவ்வாறெனில் ஒப்பந்தம் பற்றி தெளிவான புரிதல் இன்றியா அதனை இரத்து செய்வதாக ஜனாதிபதி மக்களுக்கு வாக்குறுதியளித்தார் ? தற்போது அமைச்சர்களது தனிப்பட்ட கருத்துக்களைக் கோரியுள்ளார். இவ்வாறு திட்டமிட்டு ஒப்பந்தம் பற்றிய செயற்பாடுகள் காலம் தாழ்த்தப்படுகின்றன.

எம்.சி.சி. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் அரசாங்கத்திற்கு அமெரிக்காவிடமிருந்து 680 மில்லியன் டொலர் கிடைக்கப் பெறும். ஆனால் இதன் மூலம் இலங்கை தொடர்பான அனைத்து தகவல்களையும் அமெரிக்காவினால் மிக இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும். எனவே ஒப்பந்தத்தில் உடன்பாடு இல்லையெனில் இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு எம்.சி.சி. நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வமாக கடிதம் மூலம் அறிவித்து அதிலிருந்து விலகிக் கொள்ளலாம்.

ஜனாதிபதித் தேர்தலின் போது ஆட்சியை கைப்பற்ற எம்.சி.சி. உடன்படிக்கையைப் பயன்படுத்தியதைப் போன்று தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் மாத்திரமே இதனை இரத்து செய்ய முடியும் என்று கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். இவற்றுக்கு மக்கள் ஏமாறக் கூடாது. எம்.சி.சி. ஒப்பந்தத்தை இரத்து செய்ய முடியாதெனில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஏன் பொய் வாக்குறுதியளித்தார்கள் ? தொடர்ந்து 5 வருடங்கள் இந்த அரசாங்கம் ஆட்சியிலிருக்குமானால் முழு நாடும் அந்நியர்களுக்கு விற்கப்படும். நாட்டு மக்களுக்கு எதுவும் மிஞ்சாது என்றார்.