ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 2036 ஆம் ஆண்டு வரை பதவி வகிக்கும் வகையில் அரசியல் அமைப்பை திருத்த  பெரும்பான்மையானோர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

ரஷ்யாவில் ஜனாதிபதியாக விளாடிமிர் புட்டின் பதவிவகித்து வருகிறார். இவரது பதவிக் காலம் 6 ஆண்டுகள் ஆகும்.

அந்த நாட்டின் அரசியல் அமைப்பின்படி  ஒருவர் இரு முறைக்கு மேல் ஜனாதிபதி பதவியில் நீடிக்க முடியாது.

கடந்த 2000 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்து வந்த புட்டின், 2012 ஆம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு முதல் புட்டின் ரஷ்ய ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார்.

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுவரை அவரது பதவிக்காலம் உள்ளது. இந்நிலையில் அவரது பதவிக் காலத்தை மேலும் இரு முறை அதாவது 2036 ஆம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் நீட்டிப்பது குறித்து அந்நாட்டு அரசியலமைப்பில் மாற்றம் செய்ய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனினும் இந்த விவகாரத்தில் வாக்காளர்களின் ஒப்புதலும் மிகவும் முக்கியமானது என கூறிய புட்டின் வாக்கெடுப்பையும் நடத்தினார்.

இந்த வாக்கெடுப்பு கடந்த 25 ஆம் திகதி ஆரம்பமாகியது. 7 நாட்கள் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் புட்டினும் வாக்களித்தார். வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நடைபெற்று வருகிறது.

இதுவரை எண்ணப்பட்ட 98 சதவீதம் வாக்குகளில் புட்டினுக்கு ஆதரவாக 76.9 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். 21 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக பதிவு செய்துள்ளார்கள்.

இதனால் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதற்கு மக்களின் ஆதரவு கிடைத்துவிட்டது. வாக்கெடுப்பு எனினும் இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த வாக்கெடுப்பே பொய்யானது என தெரிவித்துள்ளனர்.

தற்போது 67 வயதாகும் புட்டின் அவரது 83 ஆவது வயது வரை ஜனாதிபதியாக பதவி வகிப்பார். இதுகுறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் எல்லா பாம்பிலோவா கூறுகையில் இந்த வாக்கெடுப்பு வெளிப்படைத்தன்மையுடன் நடந்தது என்றார்.