நாங்கள் பெரும்பான்மை பலத்தைக்கொண்ட சக்தியாக பாராளுமன்றத்தில் இருக்கும் போதுதான் உலகத்தில் எங்கள் உரிமைபற்றி பேச முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் ஸ்ரீதரனின் பிரச்சார கூட்டம் ஒன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இக்கூட்டம் நேற்று இரவு (01-07-2020) கிளிநொச்சி பிரமந்தனாறு கொழுந்துப்புலவில் நடைபெற்றது. 

தமிழ் மக்கள் சிறுசிறு குழுக்களாக பிரிந்து செல்லும் எண்ணங்களுடன் இல்லாமல் பெரும்பான்மை பலத்தைக்கொண்ட சக்தியாக நாங்கள் பாராளுமன்றத்தில் இருக்கும் போதுதான் பாராளுமன்றத்தில்மட்டுமல்ல உலகத்திலும் எமது உரிமை பற்றி பேச முடியும்.

எமக்கு முன்னே முதலில் இருப்பது எமது இனத்தின் உரிமை பற்றிய விடயம். இன்று எங்கள் மீது யார் குற்றம் புரிந்தார்களோ எங்களை யார் அடியோடு அழித்தார்களோ அதே  பெரும்பான்மையினத்தவர்களே எங்களுங்கு நீதிபதியாக இருக்கின்றனர்.

அவர்களால் எங்களுக்கு நீதிகிடைக்குமா? ஜனநாயக ஆயுதத்தின் அடிப்படையில் துன்பங்களை சுமந்த நாங்கள் சிதறிப்போகாமல் உண்மையை குறிப்பிடுகின்றோம். நீதியின்படி உங்களுடன் பேசுகின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி பிரமந்தனாறு, பொழுந்துப்புலவு, உழவனூர், தம்பிராசபுரம், உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கரைச்சிப்பிரதேச சபை உறுப்பினர் கலைவாணி மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.