(செ.தேன்மொழி)

குற்றச்செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றிவளைப்புகளின் போது , சட்டவிரோத ஆயுதங்கள், போதைப் பொருட்கள் , சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தமை தொடர்பிலும் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்த நபர்கள் உள்ளிட்ட 1779 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல் நேற்று வரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது போதைப்பொருள் வைத்திருந்தமை தொடர்பில் 371 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 198 சந்தேக நபர்கள் ஹெரோயின் வைத்திருந்துள்ளதுடன், இவர்களிடமிருந்து 154 கிராம் 80 மில்லி கிராம் தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சா போதைப் பொருளுடன் 161 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களிடமிருந்து 234 கிலோ 36 கிராம் 999 மில்லிகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 இதேவேளை ஐஸ் போதைப் பொருளுடனும் 12 சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ஒரு கிலோ 957 கிராம் 335 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டவிரோத மதுபானம் தொடர்பிலும் சுற்றிவளைப்புகள் இடம்பெற்றுள்ளதுடன் ,389 சந்தேக நபர்களிடமிருந்து 34 இலட்சத்து 97 ஆயிரத்து 875 லீற்றர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்தமை தொடர்பில் 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஆயுதங்கள் வைத்திருந்ததாக 6 பேரும் , வெடி பொருட்களை வைத்திருந்ததாக ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கல்கட்டஸ் ரக துப்பாக்கி ஒன்று, 7 ரிபீடர் ரக துப்பாக்கிகளும், 105 தன்னியக்க தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 7 கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 292 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேற்கூறிய குற்றச் செயல்களுக்குள் உள்ளடங்காத வேறுவகையான குற்றச்செயல்களை புரிந்ததாக 720 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த விசேட சுற்றிவளைப்பிலே கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 1,779 சந்தேக நபர்கள் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.