பெண்கள் உரிமைகள் அமைப்புக்கள் விடுத்துள்ள கோரிக்கை

01 Jul, 2020 | 08:23 PM
image

இலங்கையின் அரசியல் அதிகாரம், பேராசை, ஊழல், வன்முறை, புறக்கணிப்பு, பாரபட்சம், மத ரீதியான தீவிரவாதம், இனவாதம், சுரண்டல், தான்தோன்றித்தனம் மற்றும் அநாகரீகம் என்பவை மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இதில், விசேடமாக சனத்தொகையில் 52 வீதமானோரான, இலங்கைப் பெண்கள் தொடர்ந்தும் அநீதிக்கும், ஒடுக்குமுறைக்கும், பாரபட்சத்திற்கும் ஆளாகிக் கொண்டிருக்கின்றனர். சொல்லளவில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள, ஜனநாயக சோசலிசக் குடியரசு எனக் கூறிக்கொண்டு, இந்த அநாகரீகமான ஒடுக்குமுறை அதிகாரக் கட்டமைப்பினுள் நாம் தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருகின்றோம்.

சிறந்த ஆளுமை மிக்க, துணிச்சல் மிக்க, துறை சார்ந்து புகழ்பெற்ற, களத்தில் சாமானிய மக்களுடன் பணிபுரிந்த பெண்கள், அனைத்து சவால்களுக்கும் முகங்கொடுத்து அரசியல் களத்தில் பிரவேசிக்கும் போது அப்பெண்களின் உடை, நடத்தை, குடும்பப் பின்னணி, தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்து கேள்விக்குட்படுத்தி ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் உண்மைக்குப் புறம்பான விடயங்களை கூறுவதோடு அவதூறுக்கும், விமர்சனத்துக்கும் உள்ளாக்குகின்றன. ஓர் ஆண் அரசியல்வாதி முகங்கொடுக்கும் சவால்களை விட ஒரு பெண் அரசியல்வாதி முகங்கொடுக்கும் சவால்கள் பல மடங்கு அதிகம் என்பது எவராலும் மறுக்க முடியாத நிதர்சனமாகும். இவ்வாறு பெண்கள் அரசியலில் களமிறங்கும் போது இவர்கள் எதிர்கொள்ளும் அவதூறான விமர்சனங்களை அக்கட்சித் தலைவர்களும,; பிரமுகர்களும் கேள்விக்குட்படுத்தாது மௌனம் சாதிப்பது இன்னுமே அரங்கேறிவருவதும் கவலைக்குரியதே. அத்துடன் கட்சிகளும் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் தயக்கம் காட்டிவருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல துறைகளில் தீர்மானமெடுக்கும் இக்கால கட்டத்தில் பெண்கள் அரசியலில் தங்கள் ஆளுமையை வெளிக்காட்டும் போது அரசியல் பிரமுகர்களும் அதற்கு துணை போகும் ஊடகங்களும் அப் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளும் பல சாதனை புரிந்த துணிச்சல் மிக்க பெண்களை அவதூறான விமர்சனத்துக்குட்படுத்துவதால் அவற்றிற்கு முகங்கொடுக்க முடியாமல் அரசியல் களத்திலிருந்து அப்பெண்கள் பின்வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

சில  ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் தமது ஊடக தர்மங்களையும், கொள்கைகளையும் மீறி இவ்வாறு பெண்களை அவதூறாக விமர்சிப்பதை தவிர்க்க வேண்டியது கட்டாயமானதாகின்றது. மேலும் இவ்வாறான பால்நிலை சார்ந்த வெறுப்புப் பேச்சுக்கள் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் ஒழுங்கின்படி குற்றச்செயலாக கருதப்படுகின்ற பட்சத்தில் இவ்வாறான செயற்பாடுகளின் போது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இருக்கின்ற போதிலும், இச்சந்தர்ப்பங்களில் அவர்கள் பாராமுகமாக இருப்பது சட்டத்திற்கு முரணானதாகும். இவ்வாறான சட்ட ஏற்பாடானது மறுசீரமைக்கப்பட்டு அதனை செயற்படுத்தலும், கண்காணித்தலும் கட்டாயமாக்கப்படல் வேண்டும்.

எந்தவொரு சமூகத்திலும் ஆண்களைப் போலவே பெண்களும் முதற்பிரஜைகளாவர். சிறந்த தலைமைத்துவத்தையும், ஆளுமையையும் வளர்த்துக் கொண்டிருக்கும் பெண்களை தீர்மானம் எடுக்கும் இடங்களில் முன் நிறுத்துவதன் மூலம் எதிர் காலத்தில் சிறந்த முன்மாதிரியான சமூகங்களை வளர்க்க முடியும். இது ஒட்டு மொத்த சமூகத்திற்கும் நன்மை பயர்க்கும் விடயமாக அமையும். இதனூடாக முழு இலங்கைப் பெண்களுக்கெதிரான வன்முறைகளையும், பாரபட்சங்களையும் குறைத்துக் கொள்ளக் கூடியதான சிறந்த சட்டங்களையும் விஞ்ஞாபனங்களையும் உருவாக்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அத்துடன் எமது நாட்டின் சமத்துவமானதும், வன்முறையற்றதும், நிலையானதுமான அபிவிருத்தியை நோக்கி பயணிக்க முடியும். மேலும் காலாகாலமாக அரசியல் பிரச்சாரத்தின் பேசு பொருளாக பயன்படுத்தப்படும் காணாமல் ஆக்கப்பட்ட தாய்மார்களின் போராட்டம், காணி விடுவிப்புப் போராட்டம், அரசியல் கைதிகளின் விடுவிப்பு சார்ந்த போராட்டம,; வளப்பகிர்வு சார்ந்த போராட்டம் போன்ற பெண்களின் பிரச்சனைகள் இன்று வரை பேசுபொருளாக மட்டுமே காணப்படுகின்றது. இவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முகமாகவேனும் தீர்மானமெடுக்கும் துறையில் களத்தில் இவர்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் பெண்களே அரசியல் களத்தில் வரவேண்டும் என்பது எங்களது எதிர்பார்ப்பாகும். இதன் மூலம் தம்மை வைத்து நகர்த்தப்படும் கதிரை அரசியலை பெண்கள் கேள்விக்குட்படுத்த வேண்டும்.

இலங்கை நாட்டில் 54 சதவீத வாக்களிக்கும் பெண்களாகிய நாம் இனம், மதம், சாதி, மொழி, பால்நிலை, புவியியல் காரணிகள் என்பவற்றை பொருட்படுத்தாமல் எல்லோருடைய உரிமைக்காகவும் உத்தரவாதம் வழங்கி நீதி, வகைப்பொறுப்பு மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும், பல்லின மக்களது உரிமைகளையும் அவர்களது மத, கலாச்சார, பல்வகைமைத்தன்மையையும் காப்பதற்காக  அணிதிரள நாம் அனைவரும் முன்வர வேண்டும். அரசியல் களத்தில் தங்கள் திறனை நிலை நாட்டவிருக்கும் பெண்களை அவதூறு மற்றும் விமர்சனத்திற்கு உள்ளாக்கும் நபர்களுக்கும், சமூக வலைத்தளங்களுக்கும், ஊடகங்களுக்கும் எதிராக குரல் கொடுக்க நாம் ஒன்றுபட வேண்டும். அப் பெண்களுக்கான எமது ஆதரவையும் ஒத்துழைப்பினையும் வழங்கி அவர்களை வெற்றி பெறச் செய்வது நமது பாரிய பொறுப்பாகும்.

இவ்வாறு அரசியலில் ஈடுபடும் பெண்கள் பால்நிலை சார்ந்து தாக்கப்படுவதுடன் தவறாக விமர்சிக்கப்படும் பொழுது அப்பெண்களின் கட்சி சார்பாக உள்ள பிரமுகர்கள் மௌனம் சாதிக்காது அப்பெண்களுக்கு ஆதரவு வழங்கி முன்னுரிமையும், நீதியும் வழங்க வேண்டும் என்பது எமது வேண்டுகோளாகும். வாக்காளர் பெருமக்களாகிய நாங்கள் அவளுக்கு வாக்களித்து ஜனநாயகத்தின் எழுச்சிக்கு வழிவகுப்போம்.

இந்த அறிக்கையை 30 க்கும் அதிகமான பெண்கள் உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டிருக்கின்றன. மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் , பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு வடக்கு கிழக்கு, சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் - மட்டக்களப்பு, அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு  (கிழக்கு மாகாண பெண்கள் வலையமைப்பு) , மாற்றுத் திறனாளிகள் பெண்கள் அமைப்பு , நல்லாட்சிப் பெண்கள் அமைப்பு , முஸ்லீம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் - புத்தளம்,

சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையம் - யாழ்ப்பாணம், சமூக பொருளாதார சூழல் அபிவிருத்தியாளர்கள் - வவுனியா, கிழக்கு சமூக அபிவிருத்தி மன்றம் , உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட பெண்களுக்கான அரங்கம் - கிழக்கு மாகாணம் , சுயாதீன அபிவிருத்திக்கான பெண்களின் செயற்பாடு , பாதிப்புற்ற பெண்கள் அரங்கம் - அம்பாறை, ஆய்வுக்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளீர் ஒன்றியம் - மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் சமாசம் (மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, புத்தளம்) , அமரா பெண்கள் ஒன்றியம் (முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு) , விழுது மனித வள அபிவிருத்தி நிலையம், சக்தி - கந்தளாய் , பெண்கள் கல்வி ஆய்வு நிலையம் - கொழும்பு, மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையம் , மனித எழுச்சி நிறுவனம் - அம்பாறை, அகம் மனிதாபிமான வள நிலையம் - திருகோணமலை, படைப்பாற்றலுக்கான வானவில் தூண்கள் - மட்டக்களப்பு , யாழ் திருநர் வலையமைப்பு, கிராம அபிவிருத்தி நிறுவனம் , சமதை பெண்ணிலைவாத செயற்பாட்டுக் குழு , ஆளுமை பெண்கள் மையம் - முல்லைத்தீவு, நிசா அபிவிருத்தி நிலையம் - முல்லைத்தீவு, பெண்கள் சமூக வலையமைப்பு - முல்லைத்தீவு, முஸ்லிம் பெண்களது ஆய்வுக்கும் செயற்பாட்டுக்குமான மையம் - கொழும்பு, சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையம் - கொழும்பு ஆகியைவே அந்த அமைப்புக்கள் ஆகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04