அசுரனின் அசுரத்தனமான வெற்றிக்கு பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் தயாராகியிருக்கும் ‘ஜகமே தந்திரம்’ என்ற படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வை நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’.

இதில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா நடராஜன், கலையரசன், சௌந்தரராஜா, வடிவுக்கரசி, சின்னி ஜெயந்த் இவர்களுடன் ஹொலிவுட் நடிகர் ஜேம்ஸ் கோஸ்மோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

லண்டனில் மாஃபியா கும்பலின் தலைவரான ஜேம்ஸ் கோஸ்மோவிற்கு புதிய கும்பல் ஒன்று எதிரியாக உருவெடுக்கிறது.

அந்த கும்பலில் தெற்காசிய நாட்டவர்கள் சிலர் இருப்பதன் காரணமாக இவர்களை அடக்கிவைக்க சென்னையிலிருந்து லண்டனுக்கு தனுசை வரவழைக்கிறார் மாஃபியா கும்பலின் தலைவனான ஜேம்ஸ் கோஸ்மோ.

அங்கு சென்ற தனுஷ், உண்மையை அறிந்த பிறகு, அவர்களுடன் இணைந்து வில்லனை எப்படி அழிக்கிறார் என்பதே ‘ஜெகமே தந்திரம்’கதை.

இப்படி இந்தப் படத்தின் கதை இணையத்தில் வெளியானாலும், சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் உருவான முதல் பாடல், தனுஷின் பிறந்த நாளான இம்மாதம் 28 ஆம் திகதியன்று வெளியாகும் என, படக்குழு அறிவித்திருக்கிறது. இது ரசிகர்களுக்கு தனுசின் பிறந்தநாள் பரிசு என்பதால், ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.