வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற புகையிரதம் - முச்சக்கர வண்டி விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார் . 

இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருகையில், 

இன்று காலை 9.15 மணியளவில் மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் செட்டிகுளம் துடரிகுளம் வீதி பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையைக் கடக்க முயற்சித்தபோது, குறித்த வீதியால் பயணித்த முச்சக்கரவண்டி ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் முச்சக்கரவண்டியை செலுத்திய சாரதி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 55 வயதுடைய சகீது மௌலவி என்றழைக்கப்படும் முதலியார்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

 

இவ்விபத்தில் 500 மீற்றர் தூரத்திற்கு முச்சக்கரவண்டி இழுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் சாரதியின் உடல் 150 மீற்றருக்கு அப்பால் துாக்கி வீசப்பட்டுள்ளதாக இவ்விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். 

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக விசாரணைகளுக்காக சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. 

இவ்விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.